பாட்காஸ்ட் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் 10 வயது சிறுமி!
சியோனா விக்ரம் தனது பாட்காஸ்டில் வெவ்வேறு துறைசார் நிபுணர்களுடன் உரையாடி மாணவர்கள் பயனுள்ள தகவல்களை பல்வேறு நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறார்.
சியோனா விக்ரம் யூகே-வில் பிறந்து எட்டு வயது வரை அங்கேயே வளர்ந்துள்ளார். தற்போது பெங்களூருவில் வசிக்கிறார். ஹெப்பல் ஜெயின் ஹெரிடேஜ் பள்ளியில் படிக்கிறார்.
சியோனாவிற்கு ஏழு வயதிருக்கும். பாட்காஸ்ட் விரும்பி கேட்டு வந்தார். இதுபற்றி மேலும் ஆய்வு செய்ய விரும்பினார். குழந்தைகளுக்கான பாட்காஸ்டுகளை கேட்டார்.
குழந்தைகள் உலகளாவிய முக்கிய நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. பாடப்புத்தகங்கள் தாண்டி எந்த தகவல்களையும் கற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு ஏன் பாட்காஸ்ட் உதவவில்லை? சியோனாவின் இந்த யோசனையில் உருவானதுதான் Little Mind Chats. இது இவரது சொந்த பாட்காஸ்ட்.
“குழந்தைகள் உலக நடப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும். எனவே என் பாட்காஸ்ட் மூலம் இவற்றை வழங்க விரும்பினேன். வெவ்வேறு தலைப்புகளைப் பற்றி பகிர்ந்துகொள்ள நினைத்தேன். துறைசார் நிபுணர்களுடன் நேர்காணல் நடத்தி அவற்றை பகிர்ந்துகொள்ள விரும்பினேன். குழந்தைகள் மகிழ்ச்சியாக ரசிக்கும் அதேசமயம் தகவல்கள் பயனுள்ளவையாக இருக்கவேண்டும் என்பதே என் நோக்கம்,” என்கிறார் சியோனா.

ஒருமுறை ஒரு பாட்காஸ்டின்போது பிளாஸ்டிக் மாசுபாடு காரணமாக கடலில் உள்ள ஆமைகள் அழிந்து வருவது பற்றித் தெரிந்துகொண்டார். அதைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு Little WISE Club தொடங்கப்பட்டது. தற்போது இந்த கிளப் மூலம் பிளாஸ்டிக் இல்லாத உலகத்தை உருவாக்க விரும்புகிறார் சியோனா.
பாட்காஸ்ட்
சியோனா தனது பாட்காஸ்டில் வெவ்வேறு துறைசார் நிபுணர்களுடன் உரையாடுகிறார். பல தலைப்புகள் இதற்காக தேர்வு செய்யப்படுகின்றன. இதனால் மாணவர்கள் பல்வேறு நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
சியோனா இதுவரை 104 எபிசோடுகள் ஒளிபரப்பியிருக்கிறார். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மற்ற சிறப்பு தினங்களிலும் இவை ஒளிபரப்பப்படுகின்றன.

இவர் Golden Crane Podcast Award வென்றுள்ளார். பாட்காஸ்டிங் பிரிவில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ‘பாட்காஸ்ட் அவார்ட்ஸ் 2021’ விருதுக்கு ஃபைனல் ஸ்லேட் நாமினியாக தேர்வு செய்யப்பட்டார்.
சமூகத் தொழில்முனைவு
பிளாஸ்டிக் மாசுபாடு காரணமாக ஆமைகள் உயிரிழப்பதை அறிந்த சியோனா இதற்கு தீர்வுகாணும் வகையில் ஏதேனும் செய்யவேண்டும் என முடிவு செய்தார்.
குடும்பத்தினரிடமும் பள்ளியிலும் ஆதரவு கேட்டார். அவர்கள் உதவியுடன் Little WISE Club தொடங்கினார். Warriors Inspiring Sustainable Earth என்பதே WISE என்கிற வார்த்தையின் விரிவாக்கம்.
“இன்று 90 சதவீத பொம்மைகள் பிளாஸ்டிக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. மொத்த பிளாஸ்டிக் பொருட்களில் 50 சதவீதம் கடந்த 15 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை,” என்கிறார் சியோனா.
சுற்றுச்சூழலுக்கு உகந்த, மக்கும்தன்மை கொண்ட பொருட்களால் ஆன பொம்மைகளைப் பயன்படுத்துமாறு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளை ஊக்குவிக்கிறார்.

“மற்ற பிளாஸ்டிக் தயாரிப்புகளை ஓரளவிற்கு மறுசுழற்சி செய்ய முடிகிறது. ஆனால் பிளாஸ்டிக் பொம்மைகளை மறுசுழற்சி செய்யவே முடிவதில்லை. எனவேதான் நான் மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் பிளாஸ்டிக் பொம்மைகள் பயன்பாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறேன். இவற்றை எப்படி அப்புறப்படுத்துவது என்பதில் பெற்றோர்களுக்கும் தெளிவிருப்பதில்லை,” என்கிறார்.
பொம்மைகள் மறுசுழற்சி
பிளாஸ்டிக் பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்கு பற்றியும் இவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் தனது கிளப் மூலம் விழிப்புணர்வை ஏறுபடுத்துகிறார் சியோனா. நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி மக்களுக்குப் புரியவைக்கிறார்.
பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுகளாக நிலத்தில் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் குழந்தைகள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொம்மைகளை சேகரிக்கிறார்.
தற்சமயம் இவரது பள்ளி வளாகத்திலும் Vividus மருத்துவமனை அருகிலும் பிளாஸ்டிக் பொம்மைகளை சேகரிப்பதற்கான பெட்டி வைக்கப்பட்டுள்ளன. இதில் பொருட்களைப் போடுபவர்கள் Little WISE கிளப் வலைதளத்தில் சைன் -அப் செய்துகொண்டு ‘இகோ-வாரியர்’ ஆகலாம்.

இவ்வாறு பயன்படுத்தப்பட்ட பழைய பிளாஸ்டிக் பொம்மைகளை முறையாக அப்புறப்படுத்துவோருக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் இந்தப் புள்ளிகளைக் கொண்டு Brown Living, Rescript போன்ற ஸ்டோர்களில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
இவர் ஏற்பாடு செய்திருக்கும் பெட்டியில் சேகரிக்கப்படும் பொம்மைகள் பெங்களூருவில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு இவற்றைக் கொண்டு விவசாயப் பயன்பாடுகளுக்கான பைப்கள் தயாரிக்கப்படுகின்றன.
சியோனாவின் முயற்சியின் மூலம் இதுவரை 200 கிலோ பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 150 ’இகோ-வாரியர்கள்’ சைன் அப் செய்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை மேலும் விரிவுபடுத்தவேண்டும் என்பதே இவரது விருப்பமாக உள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா

