பிளாஸ்டிக் கழிவுகளில் செங்கல் உற்பத்தி: ரூ.2.50 கோடி டர்ன் ஓவர் செய்யும் இளம் தொழில் முனைவோர்!
கவுகாத்தியை தலைமையமாக கொண்ட ஜெருண்ட், தனது காப்புரிமைக்கு காத்திருக்கும், பிளாஸ்டிக் கழிவை மூலப்பொருளாக கொண்ட லேசு ரக செங்கற்களை வழக்கமான செங்கற்களுக்கு மாற்றாக பிரபலமாக்க திட்டமிட்டுள்ளது.
செங்கல் சூளைகள் கடுமையான பணிச்சூழலை கொண்டவையாக அமைகின்றன. கட்டுமானத்தொழிலின் முக்கிய அங்கமாக அமைந்தாலும், செங்கல் உற்பத்தி மிகவும் ஆபத்தான தொழில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில், செங்கல் ஆலை தொழிலாளர்கள் ரசாயன, பெளதீக, உளவியல் மற்றும் உடல் சார்ந்த பாதிப்புகளுக்கு இலக்காகின்றனர்.
உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது பெரிய செங்கல் உற்பத்தி நாடாக விளங்குகிறது. எரிசக்தி மற்றும் வளங்கள் கழக (TERI) தகவல் படி, இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கல் ஆலைகள் இருப்பதோடு, ஆண்டுக்கு 250 பில்லியன் செங்கற்கள் உற்பத்தி ஆகின்றன.
செங்கல் ஆலைகள் இருப்பால், காற்றில் சல்பர் மற்றும் நைட்ரஜ் ஆக்சைடு கலப்பு அதிகரித்து மனித வாழ்க்கையின் தரத்தையும் பாதிக்கிறது. மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு செங்கல் சூளைகள் தாவிரங்களையும் பாதிக்கின்றன.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், அசாம் பொறியியல் கல்லூரியைச்சேர்ந்த டேவிட் கோகாய், மவுசம் தலுட்கர் மற்றும் ரூபம் சவுத்ரி ஆகிய மூன்று நண்பர்கள் 2018ல் ’ஜெருண்ட்’ (Zerund) நிறுவனத்தை துவக்கினர்.
இறுதி ஆண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக பொறியியல் கல்லூரி வளாக உரையாடலாகத் துவங்கிய இந்த முயற்சி அசாம் மாநிலத்தில் செங்கல் உற்பத்தி துறையை மாற்றி அமைக்கும் வாய்ப்பு கொண்ட ஸ்டார்ட் அப்’பாக உருவாகியிருக்கிறது.
“கல்லூரியில் நாங்கள் எப்போதும் புதிய சேவைகள், மதிப்பை உருவாக்குவது பற்றி தான் பேசிக்கொண்டிருப்போம். எங்கள் இறுதியாண்டு திட்டம் அளிக்கப்பட்ட போது, திட்டத்தின் நிதி அம்சத்தை மனதில் கொண்டோம். எனவே, மதிப்பெண்கள் பற்றி அதிகம் கவலைப்படாமல் இந்த திட்டங்களை நடைமுறை சாத்தியம் ஆக்குவது பற்றி யோசித்தோம். 2018ல் பட்டம் பெற்ற பிறகு எங்கள் இறுதியாண்டு திட்டத்தை வர்த்தக மாதிரியாக்கி அடுத்த மாதம் ஜெருண்ட் மேனுபேக்சரிங் நிறுவனத்தை பதிவு செய்தோம்,” என்று யுவர்ஸ்டோரியுடன் பேசிய டேவிட் கூறினார்.
என்ன வேறுபாடு?
பூகம்ப பாதிப்பை தாங்கக் கூடிய, வெடிப்புத் தன்மை இல்லாத, லேசான செங்கல்கள் இல்லாத சூழலில் ஜெருண்ட் செங்கல்கள் தனித்து நிற்கின்றன மற்றும் செங்கல் மூலம் உண்டாகும் கரியமில வாயுவை ஆண்டுக்கு 42.64 மெட்ரிக் டன் வெளியேற்றுவதாக நிறுவனர்கள் கூறுகின்றனர்.
வழக்கமான செங்கற்களுக்கு மாற்றாக, மறுசுழற்சி பிளாஸ்டிக்கை கொண்ட லேசு ரக செங்கற்களை அளிப்பதாக ஜெருண்ட் தெரிவிக்கிறது. மணல், சாம்பல், ஆர்கனிக் பொருட்கள், சிமெண்ட் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு சுற்றுச்சூழல் நட்பான செங்கற்களை இந்த குழு உருவாக்கியுள்ளது.
“காப்புரிமைக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ள ஜெருண்ட் லேசு ரக செங்கற்கள், ஏஏசி கான்கிரீட் செங்கற்களில் இருந்து வேறுபட்டவை, நீடித்த வளர்ச்சிக்காக இதில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துகிறோம். எங்கள் செங்கற்கள் தண்ணீர், வெடிப்பு மற்றும் பூகம்ப்ப எதிர்ப்பு தன்மை கொண்டவை. நீடித்த வளர்ச்சி இலக்கில் எட்டு அம்சங்களை கவனத்தில் கொண்டுள்ளோம்,” என்கிறார் மார்கெட்டிங் பிரிவு தலைவர் டேவிட் கோகாய்.
ஐசிஐஎஸ் தகவல்படி, இந்தியாவில் தினமும் 15,000 டன் மற்றும் கவுகாத்தியில் மட்டும் தினமும் 38 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன.
ஒரு நிறுவனமாக ஜெருண்ட், பிளாஸ்டிக் கழிவை மூலப்பொருளாக கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையை நேரடியாக எதிர்கொள்வதோடு, இந்த செங்கற்கள் மிகவும் வலிமையானவை மற்றும் நீடித்து நிற்பவை என்று அதன் நிறுவனர்கள் கூறுகின்றனர்.
“சாம்பல், மணல், தண்ணீர், சிமெண்ட், ஜிப்சம், ஆர்கானிக் ரசாயனத்துடன் பல அடுக்கு பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம். எங்கள் செங்கற்கள் 4MPA(megapascal) வலிமை, குறைவான அடர்த்தி ( 800 kg/cubic metre ) மற்றும் 7 சதவீத தண்ணீர் ஈர்ப்பு கொண்டுள்ளன,” என்கிறார் டேவிட்.
வழக்கமான செங்கற்களை விட ஜெருண்ட் செங்கற்கள் பெரிதானவை மற்றும் 8 கிலோ எடை கொண்டவை. எனவே, ஒரு ஜெருண்ட் செங்கல் மூன்று கிலோ எடை கொண்ட ஆறு சிவப்பு செங்கற்களுக்கு நிகரானவை. இவை சுற்றுச்சூழலுக்கு நட்பானவை மற்றும் அதிக கணம் இல்லாதவை.
இவை வழக்கமான செங்கற்களைவிட 15 சதவீதம் செலவு குறைந்தவை மற்றும் ஏஏசி, சிவப்பு களிமண் செங்கற்களை விட விலை குறைந்தவை என்றும் நிறுவனம் தெரிவிக்கிறது. இவை கட்டுமான நேரத்தை 25 சதவீதம் குறைக்கும் என்றும் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.
பயன்படுத்த எளிதானவை என்பதோடு, தெர்மல் மற்றும் ஒலி தடுப்பு கொண்டவை, பூகம்பம் எதிர்ப்பு தன்மை கொண்டவை, வானிலை பாதிப்பும் இல்லாதவை.
இவற்றில் 70 சதவீதம் வரை பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்படுவதால் உற்பத்தி செலவு என்பது சிமெண்ட் செலவு தான். பிலை ஆஷ் சாம்பல், தேசிய தெர்மல் ஆலையில் இருந்து பெறப்படுகிறது. இது நிலக்கரி பயன்பாட்டின் உப பொருளாகும்.
சவால்கள்
கல்லூரியில் இருந்து நேரடியாக தொழில் துவங்கியதால் நிறுவனர்கள் பலவிதமான சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.
“புதிய களம் என்பதால் இன்னும் கடினமாக இருந்தது. மக்கள் எங்கள் பொருளில் நம்பிக்கைக் கொள்ளவில்லை. எனவே ஆரம்ப நாட்களில் மக்களின் சம்மதம் பெறுவது கடினமாக இருந்தது. எனினும் எங்கள் தயாரிப்பின் தன்மை மற்றும் விலை வாடிக்கையாளர்களை மாற வைத்தது,” என்கிறார் செயல்பாடுகள், உற்பத்தி தலைவர் ரூபம்.
ரூ.2.5 லட்சம் முதலீட்டில் துவங்கிய நிலையில், நிதி விஷயத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர். எனினும், இரண்டு உள்ளூர் முதலீட்டாளர்கள் நிதி அளிக்க முன்வந்தனர்.
“2020 ஏப்ரல் வரல் ஐஐஎம் கொல்கத்தா NIDHI திட்டத்தில் பங்கேற்றோம். ஆய்வு மற்றும் வளர்ச்சியில் இதன் வழிகாட்டுதல் மிகவும் உதவியாக இருந்தது,” என்று நிறுவனர்கள் கூறுகின்றனர்.
நிதி பிரச்சனை தீர்ந்ததும் சீரான முன்னேற்றம் உண்டானது. கவுகாத்தி அசாராவில் மூல ஆலை அமைக்கப்பட்ட நிலையில், போன்கியாகோன் பகுதியில் இரண்டாவது ஆலை அமைக்கப்பட்டது.
வர்த்தக மாதிரி
நிறுவனம், சில்லறை வாடிக்கையாளர்கள், வர்த்தக வாடிக்கையாளர்கள் மற்றும் அரசு அமைப்புகளை இலக்கு வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.
நிறுவனம் மூன்று விதமான செயல்பாட்டை கொண்டுள்ளது. முதல் முறையில் செங்கற்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இரண்டாவதாக மொபைல் ஆலை மூலம் செயல்படுகிறது. மூன்றாவதாக ஏற்கனவே உள்ள ஏஏசி ஆலைகளில் தங்கள் நுட்பத்தை புகுத்துவதன் மூலம் செயல்படுகிறது.
அடுத்த கட்டமாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சத்தீஸ்கரில் மூன்றாவது மாதிரியை விரிவாக்கி சந்தையை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. பூட்டானிலும் செயல்படத் திட்டமிட்டுள்ளது. தற்போது தினமும் 10,000 செங்கற்கள் உற்பத்தியாகின்றன. இதை ஆண்டு இறுதிக்குள் 50,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
2019- 20 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, 20-21 நிதியாண்டில் வருவாய் 8 சதவீதம் அதிகரித்திருப்பதாக நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர். 2019 நிதியாண்டில் ரூ.69 லட்சம் விற்றுமுதல் ஈட்டிய நிலையில் 2020 நிதியாண்டில் ரூ.75 லட்சமாக அதிகரித்துள்ளது. 2021 நிதியாண்டில் ரூ.2.50 கோடி விற்றுமுதலுடன், 2023 நிதியாண்டில் ரூ.11 கோடி விற்றுமுதலை நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது.
நிறுவனம் வாடிக்கையாளர்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் அணுகி வருகிறது.
“எங்கள் இணையதளத்திற்கு சீரான போக்குவரத்து இருக்கிறது. இண்டியாமார்ட், ஜஸ்ட்டயல், டாடா பிஸ்னஸ் ஹப் போன்ற தளங்களிலில் பட்டியல் ஆகியுள்ளோம். சமூக ஊடக பக்கம் மூலமும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். வடகிழக்கு இந்தியாவில் விளம்பர பலகை மூலம் மார்கெட்டிங் செய்கிறோம். எனினும் வாய்மொழி விளம்பரம் தான் சிறந்த மார்கெட்டிங்காக இருக்கிறது” என்கிறார் டேவிட்.
சந்தை அளவு-போட்டி
உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் கட்டுமானத் திட்டங்கள் வளர்ச்சியால் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் செங்கல் துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.
ரிசர்ச்கேட் தகவல்படி, இந்தியாவில் ஆண்டுக்கு 250 பில்லியன் செங்கற்கள் தேவை இருக்கிறது. பல மாநிலங்களில் செங்கல் உற்பத்தி தொடர்பான பாதகமான அம்சங்கள் மற்றும் பிளை ஆஷ் செங்கற்களுக்கு வரவேற்பு அதிகரிப்பதால், நிறுவனம் வளர்ச்சி வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளது.
இந்த ஸ்டார்ட் அப் அண்மையில், NEDFi Venture Capital Ltd. (NVCL) நிறுவனத்திடம் இருந்து ஏ சுற்றுக்கு முந்தைய நிதி திரட்டியுள்ளது. இதுவரை ரூ.4 கோடி நிதி திரட்டியுள்ளது.
இந்தத் துறையில் நேரடி போட்டியாளர் இல்லை என்று கூறும் நிறுவனம் ஏற்கனவே உள்ள லேசுரக பிளாக் கற்களை ஆலைகளை எடுத்துக்கொண்டு தனது நுட்பத்தை புகுத்தி மொத்த விநியோக சங்கிலியையும் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
ஆங்கிலத்தில்: திரிஷா மேதி | தமிழில்: சைபர் சிம்மன்