கேம் மூலம் குழந்தைகளுக்கு கோடிங் செய்யக் கற்றுக் கொடுக்கும் 11 வயது மாணவி!
சமைரா மேத்தா உருவாக்கியுள்ள விளையாட்டு; கோடிங், கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை குழந்தைகள் எளிதாகவும் வேடிக்கையாகவும் கற்றுக்கொள்ள உதவுகிறது.
ஆறாம் வகுப்பு படிக்கும் சமைரா மேத்தா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கலிபோர்னியாவில் வசிக்கும் இந்த 11 வயது சிறுமி ஒரு கண்டுபிடிப்பாளர். CorderBunnyz என்கிற STEM கோடிங் போர்ட் கேம் கண்டிபிடித்துள்ளார். இது நான்கு முதல் பத்து வயது வரையுள்ளவர்களுக்கு கோடிங் கற்றுக்கொடுக்க உதவும் விளையாட்டாகும்.
சமைரா சிலிக்கான் வேலி பகுதிக்குச் சென்றார். 50-க்கும் அதிகமான மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். இவரது போர்ட்கேம் பற்றி எடுத்துரைக்கும் வகையில் 60 பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்துள்ளார். மவுண்டன் வியூ பகுதியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகமான கூகிள்ப்ளெக்ஸில் 50 கூகிள் கிட்ஸ் உட்பட 2,000க்கும் அதிகமான குழந்தைகளுக்கு பயிற்சியளித்துள்ளார். இவரது பணிக்காக அப்போதைய ஃபர்ஸ்ட் லேடி மிச்சல் ஒபாமாவிடமிருந்து இந்த சிறுமிக்கு வெள்ளை மாளிகையில் இருந்து கடிதம் வந்தது.
சமைரா போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்காத பெண்களுக்கு கோடிங் கற்றுக்கொடுக்க Girls U Code என்கிற மற்றுமொரு முயற்சியை சமீபத்தில் தொடங்கியுள்ளார். இந்த இளம் தொழில்முனைவரின் கண்டுபிடிப்பு குறித்தும் கோடிங் மீது இவருக்குள்ள ஆர்வம் குறித்தும் செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பம் குறித்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள எவ்வாறு உதவ திட்டமிட்டுள்ளார் என்பன குறித்து மேலும் தெரிந்துகொள்ள ஹெர்ஸ்டோரி இவருடன் உரையாடியது.
சமைராவின் அப்பா அவரிடம் வேடிக்கையாக நடந்துகொண்ட சம்பவமே கோடிங் மீது அவருக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.
"அவர் தனது லேப்டாப்பில் ஏதோ ஒன்றைக் காட்டினார். அதில் ஒரு பட்டன் இருந்தது. ’நீங்கள் அழகாக இருந்தால் இதை அழுத்தவும்’ என எழுதியிருந்தது. அதை முயற்சி செய்து பார்க்கச் சொன்னார். ஆனால் என்னுடைய மவுஸ் பாயிண்டர் தொட்டபோது பட்டன் மறைந்தது. இது எப்படி நடக்கும்? நான் அழகாக இல்லையா என்று கேட்டதற்கு இது கோடிங் மூலம் செய்யப்பட்டது என்றார். நானும் இதைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றேன். இப்படித்தான் கோடிங் பயணம் தொடங்கியது,” என்றார்.
சமைராவைப் பொறுத்தவரை அவருக்குப் பிடித்த இரண்டு விஷயங்களில் ஈடுபட்டார். ஒன்று கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங். மற்றொன்று போர்ட் கேம். 2015-ம் ஆண்டு கோடிங் செய்யக் கற்றுக்கொண்டார். முதல் விளையாட்டில் ஒன்றரை ஆண்டுகள் பணிபுரிந்தார்.
”2017-ம் ஆண்டு அது அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவிலேயே அமேசானில் #1 ட்ரெண்ட் ஆனது. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது,” என்றார்.
இவர் இதுவரை தனது விளையாட்டை 17,000 யூனிட்கள் வரை விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கூடுதல் விளையாட்டுகளை உருவாக்குகிறார். விற்பனையின் ஒரு பகுதியை வீடில்லாதோருக்கு வழங்குகிறார். இந்த விளையாட்டை வாங்கி குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். சமைரா தொடர்ந்து 'Yes, One Billion Kids Can Code' என்கிற தனது பிரச்சாரத்தின் மூலம் அதிக குழந்தைகள் கோடிங் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறார்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவினர்
கிராஃபிக்ஸ் டிசைனர்கள், ஒப்பந்த உற்பத்தியாளர்கள், செயல்பாடுகள் என ஒரு குழு சமைரா உடன் இணைந்துள்ளது. இவரது பெற்றோர்களான மோனிகா, ராகேஷ் மேத்தா இருவரும் விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் நடவடிக்கைகளில் உதவுகின்றனர். இவரது சகோதரர் ஆதித் விளையாட்டுகளை சோதனை செய்ய உதவுகிறார்.
சமைரா தனது கனவு நனவானதற்கு இணையமே காரணம் என்கிறார்.
”இணையம் மிகவும் அற்புதமானது. இதனால் உலகம் முழுவதும் உள்ளவர்களை ஓரளவிற்கு தொடர்புகொள்ள முடிகிறது. லோவா, ஓஹியோ மற்றும் நியூசிலாந்து பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சிறந்த கிராஃபிக் டிசைனர்கள் என்னுடைய யோசனைகளுக்கு வடிவம் கொடுத்து உதவினார்கள். ப்ராடக்டை உருவாக்குவதில் உலகம் முழுவதும் இருக்கும் தயாரிப்பாளர்கள் உதவினார்கள். இன்றைய உலகில் தொழில்நுட்பம் மிகவும் சக்திவாய்ந்தது. அதேபோல் குழந்தைகளும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நம்மால் உதவமுடியும். நம் தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வினை உருவாக்கி நாம் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான இடமாக உலகை மாற்றமுடியும்,” என்றார். சமைராவின் ஆசிரியரான லோரின் வில்சன் அவருக்கு ஆதரவளித்தார்.
CoderBunnyz : கோடிங் விளையாட்டு
CoderBunnyz ஒரு விரிவான கோடிங் போர்ட் விளையாட்டு. ஸ்டேக், அல்காரிதம் எழுதுதல், பட்டியலிடுதல், வரிசைப்படுத்துதல் போன்ற கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங்கை எளிதாக்குகிறது.
இந்த போர்ட் விளையாட்டு தற்போதைய காலகட்டத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. கோடிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உள்ள அனைத்து கோட்பாடுகளையும் இந்த விளையாட்டு வேடிக்கையாகவும் ஊடாடும் வகையிலும் கற்றுக்கொடுக்கிறது.
குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவு கோட்பாடுகளை கற்றுக்கொடுக்கும் CoderMindz என்கிற விளையாட்டை இவர் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். இது போன்ற விளையாட்டு அறிமுகமாவது இதுவே முதல் முறை என்கிறார் சமைரா. இதை உருவாக்குவதற்கு ஓராண்டு செலவிட்டுள்ளார்.
சமைரா செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், ப்ரோக்ராமிங், தரவு அறிவியல் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களுக்கேற்ப செயல்படுகிறார்.
”நான் இணையதளங்களில் வாசிப்பேன். என்னுடைய அப்பாவின் ஆலோசனைகளை கேட்டறிவேன். புதிய தொழில்நுட்பம் குறித்த தகவலக்ளைத் தெரிந்துகொள்ள அவர் வழிகாட்டுகிறார்,” என்றார். இவரது அப்பா செயற்கை நுண்ணறிவு சாதனங்களை வடிவமைக்கிறார்.
சந்தித்த முக்கிய சவால்
விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கிய சவால்களில் ஒன்றாக இருந்தது. கோடிங் தொடர்பான பயிற்சி பட்டறைகள் வேடிக்கையாக இருப்பதுடன் உற்சாகமளிப்பதாகவும் இருக்கும் என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பது சிரமமாக இருந்தது.
நான் என் சகோதரருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய போர்ட் விளையாட்டைக் கற்றுக்கொடுத்தேன். நான் பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்யலாம் என என்னுடைய அம்மா கூறினார். நான் சில நூலகங்களுக்குச் சென்றேன். ஆரம்பத்தில் சற்று சவால் நிறைந்ததாகவே இருந்தது. முதலில் சென்ற நூலகத்தில் ஏற்கெனவே ஆன்லைன் கோடிங் ப்ரோக்ராமிங் இருப்பதாக தெரிவித்தனர். நான் மற்றொரு நூலகத்தை அணுகினேன். அடுத்த வருடம் தொடர்பு கொண்டால் மேலும் விரிவாக இதுகுறித்து பேசலாம் என்றார்கள்.
"என்னுடைய விளையாட்டு நன்றாக இல்லை என்று நினைத்தேன். ஆனால் நான் மனம் தளர்ந்துவிடவில்லை. விடாமுயற்சிக்குப் பலன் கிடைத்தது. மிகப்பெரிய நூலகமான சாண்டா க்ளாரா செண்ட்ரல் பார்க் லைப்ரரி என்னுடைய விளையாட்டு குறித்து கேட்டு உற்சாகமடைந்தனர். நூலகங்களில் ஏற்பாடு செய்யப்படும் பயிற்சி பட்டறைகள் இப்படித்தான் தொடங்கியது,” என்று சமைரா நினைவுகூர்ந்தார்.
உந்துதல்
சமைராவிற்கு அவரது பெற்றோர் ஆதரவளித்தனர். வேலியில் (ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள்) சில சிறந்த நபர்களை சந்தித்தார். அவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து சமைராவிற்கு உந்துதலளிக்கின்றனர்.
”பெண்களில் உலகின் முதல் கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் அடா லவ்லேஸ், சென்சஸ் மற்றும் சோஷியல் செக்யூரிட்டி இயங்குவதற்கான முதல் கம்ப்யூட்டரை வடிவமைத்த இடா ரோட்ஸ், அப்போலோ 11 விண்ணில் ஏவப்படுவதற்கான மென்பொருளை எழுதிய மார்கரேட் ஹேமில்டன் போன்றோர் மட்டுமல்லாது அனிதா போர்க், க்ரேஸ் ஹாப்பர் என மிகச்சிறந்த ப்ரோக்ராமர்கள் உள்ளனர்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
”இன்று இந்தத் துறையிலும் கூகுள் மற்றும் யூட்யூபிலும் பல சிறந்த பெண்கள் இணைந்துள்ளனர். இவர்களில் பலர் எனக்கு உந்துதலளிக்கின்றனர்,” என்றார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்
சமைராவிற்கு தொழில்நுட்பம் தவிர மற்ற பகுதிகளிலும் ஆர்வம் உள்ளது. இவர் வலைப்பதிவு எழுதுவதிலும் பாடுவதிலும் இசையமைப்பதிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்த ஐந்தாண்டுகளில் மேற்படிப்பிற்கான சரியான கல்லூரியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட உள்ளார்.
CoderBunnyz, Coder Mindz இரண்டையும் உலகளவில் பிரபலமாக்க இந்த இளம் தொழில்முனைவர் விரும்புகிறார்.
”ஆறு கண்டங்களிலும் உள்ள அனைத்து முக்கிய பகுதிகளிலும் நாடுகளிலும் ”Yes, One Billion Kids Can Code” பிரச்சாரம் சென்றடையும். போர்ட் விளையாட்டுகள் மற்றும் சமூக நலம் இரண்டையும் கருத்தில் கொண்டு புதிய யோசனைகளை தற்போது உருவாக்கி வருகிறேன். அடுத்த ஐந்தாண்டுகளில் அவை அறிமுகப்படுத்தப்பட்டு சமூகத்திற்கு நன்மை பயக்கும் என நம்புகிறேன்,” என்றார். இவர் சிறுமி என நினைப்பவர்களுக்கு,
“வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே. நீங்கள் எந்த வயதினராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சிறந்த யோசனை உங்களிடம் இருக்குமானால் உலகை மாற்றும் திறன் உங்களிடம் உள்ளது என்று பொருள்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: தன்வி துபே | தமிழில்: ஸ்ரீவித்யா