ஆல்பர்ட் ஐன்ஸ்டன், ஹாகிங்க்கை விட அதிபுத்திசாலி என நிரூபித்த 11 வயது சிறுமி!
லண்டனில் உள்ள பார்கிங்சைட் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது அனுஷ்கா தீக்ஷித் 40 நிமிடங்களில் மொத்த தனிம அட்டவணையையும் மனப்பாடம் செய்துள்ளார். மென்சா அறிவுத்திறன் போட்டியில் 162 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
11 வயதில் பெரும்பாலான இளம் மாணவர்கள் பதின்ம வயதிற்கே உரிய மனக்கவலையில் இருப்பார்கள். ஆனால் லண்டனின் பார்கிங்சைட் பகுதியில் வசிக்கும் அனுஷ்கா தீக்ஷித் அறிவுத்திறனில் உலகளவில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.
ஏப்ரல் 20-ம் தேதி கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மென்சா அறிவுத்திறன் போட்டியில் கலந்துகொண்ட அனுஷ்கா வெறும் 40 நிமிடங்களில் மொத்த தனிம அட்டவணையையும் மனப்பாடம் செய்துள்ளார். இவர் இந்தத் தேர்வில் 162 மதிப்பெண்கள் பெற்றார். இது இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் மதிப்பெண்ணைக் காட்டிலும் இரண்டு புள்ளிகள் அதிகம்.
ஹாக்கிங்கோ, ஐன்ஸ்டனோ இந்தத் தேர்வை எழுதவில்லை என்று நம்பப்படும் நிலையில் இவர்களது ஐக்யூ அளவு 160 என்று மதிப்பிடப்படுகிறது.
நாட்டின் பிரதமர் ஆகவேண்டும் என்கிற விருப்பம் கொண்ட அனுஷ்கா இந்தத் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோரைக் காட்டிலும் சுமார் முப்பது வயது இளையவர். இவர் அனைவரையும்விட அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளார். தற்போது மென்சா உறுப்பினர் தகுதி பெற்றுள்ளார்.
இந்தத் தேர்வு மிகவும் கடினமாக இல்லை என்றும் சற்றே கடினமாக இருந்ததாகவும் அனுஷ்கா She The People உடனான உரையாடலில் தெரிவித்துள்ளார்.
”நான் 11-பிளஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மென்சா தேர்வெழுத விரும்பினேன். எனக்கு முழு மதிப்பெண்கள் கிடைத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தவறாக இருக்கும் என்று எண்ணி தேர்வெழுதி முடித்த பிறகு அழத் தொடங்கினேன். 162 என்பதையே இலக்காகக் கொண்டிருந்தேன். இருப்பினும் எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது,” என்றார்.
அனுஷ்கா அதிக மதிப்பெண் எடுத்ததில் அவரது அம்மா ஆர்த்தி தீக்ஷித் பெரும் பங்களித்துள்ளார். ஆரம்ப நாட்களில் இருந்தே அனுஷ்கா புத்திசாலி மாணவியாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார். அனுஷ்கா ஆறு மாத குழந்தையாக இருந்தபோதே தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் வார்த்தைகளை கேட்டுப் பேசத் தொடங்கியதாக தெரிவித்தார்.
அனுஷ்கா 11-பிளஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு புதிய சவாலை முயற்சிக்க விரும்பியதால் மென்சா அறிவுத்திறன் தேர்வெழுத அம்மாவிடம் அனுமதி கோரியதாக ’மெட்ரோ’ குறிப்பிட்டுள்ளது. அனுஷ்கா தனது எதிர்காலம் குறித்து பேசும்போது,
“நான் வருங்காலத்தில் மருத்துவராக விரும்புகிறேன். அது சாத்தியமில்லாமல் போகும் பட்சத்தில் எனக்குப் பிடித்த மற்றொரு துறையைத் தேர்வு செய்வேன். உதாரணத்திற்கு நிதித்துறையில் கவனம் செலுத்துவேன். எனக்கு கணிதம் பிடிக்கும். அனைத்து பாடங்களும் பிடிக்கும். பள்ளியில் எனக்கு பிடிக்காத பாடம் என்று எதுவுமே இல்லை,” என்றார்.
2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ்கௌரி பவார் பிரிட்டிஷ் மென்சா அறிவுத்திறன் போட்டியில் ஆல்பர்ட் ஐன்ஸ்டன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரைக் காட்டிலும் அதிக மதிப்பெண் எடுத்தார். 12 வயதான இவர் மான்செஸ்டரில் இந்தத் தேர்வில் பங்கேற்று 162 மதிப்பெண்கள் பெற்றதாக ’தி நியூஸ் மினிட்’ குறிப்பிடுகிறது.
அதே ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது அர்னவ் ஷர்மாவும் ஆல்பர்ட் ஐன்ஸ்டன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரைக் காட்டிலும் அதிக மதிப்பெண் எடுத்ததாக ’இண்டிபெண்டண்ட்’ குறிப்பிடுகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA