1.5 லட்சத்துக்கும் அதிகமான பேட்டரிகளை மறுசுழற்சி செய்துள்ள 12 வயது சிறுவன்!
நிஹல் தம்மனா தொடங்கியுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த `ரீசைக்கிள் மை பேட்டரி’ என்ஜிஓ பேட்டரிகளை சேமித்து மறுசுழற்சி செய்வதுடன் பேட்டரிகள் முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
இன்று மாணவர்கள் ஏட்டுப் படிப்புடன் நிறுத்திக்கொள்வதில்லை. ஒரு விஷயத்தை பல கோணங்களில் இருந்து அலசுகிறார்கள். புதிய சிந்தனைகளால் பல பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை உருவாக்குகின்றனர்.
இந்திய அமெரிக்கரான நிஹல் தம்மனாவிற்கு 12 வயதாகிறது. இவர் பேட்டரிகள் கழிவுகளாகக் கொட்டப்படும் பிரச்சனைக்குத் தீர்வளிக்கிறார். மூன்று ஆண்டுகளாக இந்தப் பணியில் மும்முரம் காட்டி வருகிறார்.

நிஹல் 2019-ம் ஆண்டு ‘ரிசைக்கிள் மை பேட்டரி’ (Recycle My Battery) என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். இது ஒரு அரசு சாரா நிறுவனம். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த என்ஜிஓ பேட்டரிகள் மறுசுழற்சி செய்யப்பட உதவுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
நிஹல் 150 குழந்தைகளை குழுவாக ஒன்று திரட்டியிருக்கிறார். நிஹலும் இந்தக் குழுவினரும் சேர்ந்து இதுவரை 1,50,000-க்கும் மேற்பட்ட பேட்டரிகளை மறுசுழற்சி செய்துள்ளனர்.
பேட்டரிகள் மறுசுழற்சி செய்யப்படவேண்டியதன் முக்கியத்துவம் பற்றி 1.5 மில்லியன் பேருக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தியிருக்கின்றனர்.
“குழந்தைகளே வருங்காலத் தூண்கள் என்பதால் அதிகளவில் பள்ளிகளை இணைத்துக்கொண்டு வருகிறோம்,” என்கிறார் டெட்எக்ஸ் பேச்சாளர் நிஹல்.
ரீசைக்கிள் மை பேட்டரி நிறுவனம் இந்தியாவில் செயல்படுவதற்காக சமீபத்தில் தெலுங்கானா அரசாங்கத்துடனும் பேட்டரி தயாரிக்கும் Aloe Ecell நிறுவனத்துடனும் கைகோர்த்துள்ளது.
தொடக்கம்
நிஹலுக்கு பத்து வயதிருக்கும். அந்த சமயத்தில் கலிபோர்னியாவைச் சேர்ந்த கழிவு ஆலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய சொத்து எரிந்து நாசமானது. நிஹல் டிவியில் இந்த செய்தியைப் பார்த்தார். இதுபற்றி மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் பிறந்தது. அப்போதுதான் அப்புறப்படுத்தப்பட்ட லித்தியன் அயன் பேட்டரிதான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்பது தெரிய வந்தது.
“செய்தியை பலரும் பார்த்தார்கள். ஆனால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண யாரும் முன்வரவில்லை,” என்று நிஹல் நினைவுகூர்ந்தார்.

பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் நச்சு நிறைந்த 15 பில்லியன் பேட்டரிகள் கழிவுகளாக அப்புறப்படுத்தப்படுகின்றன. இவை நச்சு நிறைந்தவை. முறையாக அப்புறப்படுத்தாததால் மாசுபாடு ஏற்படுகின்றன. தீ விபத்துகள் ஏற்படுகின்றன. மனிதர்கள், விலங்குகள் என ஏராளமான உயிர்சேதங்களும் ஏற்படுகின்றன. இந்த விவரங்கள் நிஹலுக்குத் தெரிய வந்தன.
பூமிக்கு இத்தனை ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய பேட்டரிகள் கழிவுகளாக கொட்டப்படுவதைத் தவிர்க்க விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கினார் நிஹல். பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள் முறையாக மறுசுழற்சி செய்ய எண்ணினார். இவற்றை சேமிப்பதற்காகப் பெட்டிகள் வழங்கினார்.
இவரைப் போன்றே சமூக நல சிந்தனைகள் கொண்ட குழந்தைகளை ஒன்றிணைத்தார். மறுசுழற்சி செய்வதற்காக அனைத்து வகையான பேட்டரிகளையும் சேகரிக்க இந்த மாணவர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் முன்வந்தன.
மறுசுழற்சி செயல்முறை
“பேட்டரி என்பது பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு பொருள். இதைப் பயன்படுத்துவோர் இவற்றை மறுசுழற்சி செய்வது பற்றி சிந்திப்பதில்லை. இதனால் இவை கழிவுகளாக நிலத்தில் கொட்டப்படுகின்றன,” என்கிறார் நிஹல்.
ஆரம்பத்தில் இந்த என்ஜிஓ அமெரிக்காவைச் சேர்ந்த Call2Recycle என்கிற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது. Call2Recycle ரீசார்ஜபிள் பேட்டரி மற்றும் செல்போல் சேகரிக்கும் நிறுவனம். இந்நிறுவனத்தின் உதவியுடன் அலுவலகங்கள், பள்ளிகள், நூலகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் சான்றிதழ் பெற்ற அட்டைப்பெட்டிகள் வைக்கப்பட்டன.
மக்கள் தாங்கள் பயன்படுத்திய பேட்டரிகளை எந்தவித கட்டணமும் இன்றி இதில் போடலாம். பெட்டிகள் நிறைந்ததும் அருகிலிருக்கும் வகைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்படும். இங்கு பேட்டரிகளின் வகைகளைப் பொருத்து பிரிக்கப்படும். இதனால் பேட்டரிகள் ஒன்றுடன் ஒன்று உராய்வது தடுக்கப்பட்டு ரசாயன மாற்றமோ தீ விபத்தோ ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
இப்படி வகைப்படுத்தப்பட்ட பேட்டரிகள் அந்தந்த மறுசுழற்சி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். இங்கு மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு புதிய பேட்டரிகளாகவோ மற்ற பொருட்களாகவோ மாற்றப்படும்.
அமெரிக்காவில் சுமார் 200 இடங்களில் இத்தகைய பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு செல்லும் செலவு உட்பட அனைத்து செலவுகளையும் Call2Recycle ஏற்றுக் கொண்டுள்ளது.

Call2Recycle மட்டுமல்லாது Best Brains கற்றல் மையத்துடனும் ரீசைக்கிள் மை பேட்டரி இணைந்துள்ளது. இவைதவிர நிஹல் தன் குழுவினருடன் பள்ளிகளுக்கும் வீடுகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பேட்டரிகளை சேமிக்கிறார்.
இந்திய செயல்பாடுகள்
தற்சமயம் இந்தியாவில் சுமார் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்களிக்கின்றனர். இந்தியாவில் Call2Recycle போன்ற நிறுவனத்தைக் கண்டறியும் பணியில் இருப்பதாக நிஹர் தெரிவிக்கிறார்.
இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் பேட்டரிகளை மறுசுழற்சிக்கு உட்படுத்துவதை ஒரு பழக்கமாகவே மாற்றிவிடமுடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Aloe Ecell என்கிற அலோவெரா சார்ந்த பேட்டரி தயாரிப்பு நிறுவனம் அதன் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த என்ஜிஓ-விற்கு உதவ உள்ளது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 30,000-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட உதவுவதாக உறுதியளித்துள்ளது.
ரீசைக்கிள் மை பேட்டரி சமீபத்தில் தெலுங்கானா அரசாங்கத்துடன் இணைந்துள்ளது. தெலுங்கானா அரசாங்கம் பேட்டரி மறுசுழற்சி தொழிற்சாலையை அமைத்து வருகிறது. எனவே கூட்டு முயற்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேட்டரி மறுசுழற்சி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவிலிருந்து மட்டுமல்லாது கனடா, ஐக்கிய அரபு நாடுகள், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளும் ரீசைக்கிள் மை பேட்டரி முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
முற்றிலும் பேட்டரி கழிவுகளே இல்லாத நிலையை ஒரு நாள் எட்டவேண்டும் என்பதே நிஹலின் கனவு. இதை தனது என்ஜிஓ மூலம் சாத்தியப்படுத்தவேண்டும் என்பதில் நிஹல் உறுதியாக இருக்கிறார். இந்த நோக்கம் எட்டப்பட ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு சில குழந்தைகளாவது இந்த முயற்சியில் கைகோர்க்கவேண்டும் என விரும்புகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா

