120 கோடி ரூபாய் முதலீடு பெற்றது சென்னை விவசாய தொழில்நுட்ப நிறுவனம்!
சென்னையைச் சேர்ந்த விவசாய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் ’வேகூல்’ (WayCool) 120 கோடி ரூபாய் நிதி உயர்த்தியுள்ளது. இந்தத் தொகையை எல்ஜிடி இம்பேக்ட், முக்கிய ஏஞ்சல் முதலீட்டாளர்கள், நார்தர்ன் ஆர்க் கேப்பிடல், கேஸ்பியன் உள்ளிட்ட கடன் வழங்கும் நிறுவனங்கள் போன்றவற்றிடம் இருந்து ஈக்விட்டி மற்றும் கடனாகப் பெற்றுள்ளது.
வேகூல் ஃபுட்ஸ் 2015-ம் ஆண்டு கார்த்திக் ஜெயராமன் மற்றும் சஞ்சய் தாசரி ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் இந்தியாவில் விரைவாக வளர்ச்சியடைந்து வரும் உணவு விநியோகத் தளமாகும். இந்நிறுவனம் அதன் வளர்ச்சிக்கும் சிக்கலான விநியோக சங்கிலி நடவடிக்கைகளுக்கும் புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்நிறுவனம் ஃப்ரெஷ் விளைச்சல், அத்தியாவசிய உணவுப்பொருட்கள், பால் போன்ற பிரிவுகளின் கீழ் பல்வேறு பொருட்களை விநியோகித்து 4,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கின்றனர்.
இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் முழுவதும் தங்கள் செயல்பாடுகளை விரிவடையச் செய்யவும், அதன் தொழில்நுட்பத் தளத்தை வலுப்படுத்தவும், பொருட்களை கொள்முதல் செய்வதற்கான வசதிகளை மேம்படுத்தி விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், மதிப்புக்கூட்டல் பொருட்களுக்கும், விநியோகத்தை தானியங்கிமயமாக்கவும் இந்த நிதியை பயன்படுத்திக்கொள்ள வேகூல் ஃபுட்ஸ் திட்டமிட்டுள்ளது.
வேகூல் நிறுவனம் நிதி உயர்த்த, வேதா கார்ப்பரேட் அட்வைசர்ஸ் பிரத்யேக நிதி ஆலோசகராக செயல்பட்டது.
நிதி உயர்த்தப்பட்டது குறித்து இணை நிறுவனர் சஞ்சய் தாசரி குறிப்பிடுகையில்,
“விரைவாக வளர்ச்சியடைவதில் மட்டுமின்றி லாபகரமாக செயல்படுவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். கிட்டத்தட்ட எல்லா வணிக முயற்சிகளும் லாபகரமாகவே உள்ளது. கடந்த முறை நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உயர்த்தியபோது மூன்று பகுதிகளில் செயல்படுவோம் என உறுதியளித்திருந்தோம். தற்சமயம் நாங்கள் 13 பகுதிகளில் செயல்பட்டு வருகிறோம்.”
பொருட்களின் கொள்முதல் அளவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவு நேரடியாக விவசாயிகள் மற்றும் விவசாய பார்ட்னர்களிடமிருந்து பெறப்படுகிறது என்பதில் வேகூல் பெருமிதம் கொள்கிறது. 3-5 நாட்களில் டிஜிட்டல் வாயிலாக கொள்முதல் தொகையை செலுத்திவிடுகிறோம். இதனால் விவசாயிகளின் முதலீட்டின் மீதான லாபம் சிறப்பாக உள்ளது.
விவசாயிகளின் வருவாயை சராசரியாக 20 சதவீதம் உயர்த்தியதற்கும் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
மேலும் பல்வேறு பிரிவுகளிலும் பகுதிகளிலும் நுகர்வோர் வாங்கும் நடத்தை குறித்த அதிகப்படியான தரவுகளைக் கொண்டுள்ளோம். விநியோகச் சங்கிலி திறனை மேம்படுத்தும் வகையில் எங்களது தொழில்நுட்பத் தளத்தை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
வேகூல் ஃபுட்ஸ் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ கார்த்திக் ஜெயராமன் கூறுகையில், “இந்தியாவின் உணவு சார்ந்த விநியோக சங்கிலியில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வுகாணவேண்டும் என்பதிலும் அதேசமயம் விவசாயிகள் மற்றும் நுகர்வோரிடையே குறிப்பிடத்தக்க விதத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். திறம்பட செயல்படுவதற்கும் விநியோக சங்கிலியின் தகவல்களில் காணப்படும் சீரற்றதன்மையைக் குறைக்கவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.
பல்வேறு வணிக பிரிவுகளிலும் இடங்களிலும் தொடர்ந்து வளர்ச்சியடைய, தொடர்ந்து நிதி உயர்த்துவோம். அதேசமயம் முதலீட்டையும் தொடர்ந்து திறம்பட நிர்வகித்து வணிகத்தின் நிலையையும் நிதித்தேவைகளையும் கவனமாக அளவிட்டு பெரியளவில் செயல்படுவோம்,” என்றார்.
வேகூல் நிறுவனத்தின் ஆரம்பகட்ட முதலீட்டாளரான Aspada நிறுவனத்தின் நிர்வாக பார்ட்னர் கார்த்திக் ஸ்ரீவத்சவா கூறுகையில், “வேகூல் நிறுவனத்தின் செயல்படுத்தும் திறன் எங்களைப் பெரிதும் கவர்ந்தது. சந்தையில் பல்வேறு தடங்கல்கள் இருந்தபோதும் உயர்தர விநியோக சங்கிலியை உருவாக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவர்களால் விரைவாகவும் நிலையாகவும் வளர்ச்சியடைய முடிகிறது. கடந்த நிதிச்சுற்றுக்குப் பிறகு முதலீட்டை சிறப்பாகப் பயன்படுத்தி இந்நிறுவனம் 20 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது,” என்றார்.