ஸ்காட்லாந்து அணியின் ஜெர்சியை வடிவமைத்த 12 வயது சிறுமி: டி20 உலகக் கோப்பை சுவாரஸ்யம்!

200 மாணவர்கள் கலந்துகொண்ட போட்டியில் வென்ற சிறுமி!
0 CLAPS
0

ஐசிசி டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில், தற்போது இருக்கும் அணிகளில் கவனம் ஈர்த்து வருவது ஸ்காட்லாந்து அணி.

உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் 12 அணிகளில் இடம்பிடிப்பதற்காக போராடி வரும் ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முன்னதாக, வங்கதேச அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தது. இரண்டு வெற்றிகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது ஸ்காட்லாந்து.

இந்நிலையில், ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் 12 வயது சிறுமி ரெபேக்கா டவுனி என்பவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தது. ஸ்காட்லாந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்தவாறு போட்டோவுக்கு போஸ் கொடுத்த அந்த சிறுமி தான், ஸ்காட்லாந்து அணியின் உடையை வடிவமைத்தவர். இதையடுத்து சிறுமிக்கு நன்றி தெரிவித்து ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டிருந்தது.

"ஹடிங்டனைச் சேர்ந்த 12 வயது ரெபேக்கா டவுனி. அவர் டிவியில் நமது அணியின் விளையாட்டைத் தொடர்கிறார். சிறுமி வடிவமைத்த உடையுடன் அணி பெருமையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. மீண்டும் நன்றி ரெபேக்கா!" என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, சிறுமிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதனிடையே, சிறுமியை கௌரவப்படுத்தும் வகையில் டின்பர்க்கில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 12 வயது சிறுமியும் அவரது குடும்பத்தினரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முன்னதாக, அணியின் ஜெர்சியை வடிவமைக்க, ஸ்காட்லாந்து பள்ளி குழந்தைகளை கேட்டுக்கொண்டது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் இருந்து சிறுமி டவுனி வடிவமைத்த புதிய உடை தேர்ந்தெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பேசியுள்ள சிறுமி,

“எனது வடிமைப்பு, மாணவர்களின் போட்டியில் வென்றதாக கேள்விப்பட்டபோது நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன், என்னால் நம்ப முடியவில்லை. வீரர்கள் எனது வடிவமைப்பால் உருவான ஜெர்சியை அணிந்து விளையாடுவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், அது அற்புதமாகத் தெரிகிறது. உலகக் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் ஜெர்சியை அணிந்து அவர்களை உற்சாகப்படுத்துவேன்," என்றுள்ளார்.

ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கைல் கோட்சர்,

“சிறுமியின் இந்த வடிவமைப்பு குறித்து அணி மிகவும் பெருமை கொள்கிறது." என்றுள்ளார்.

தகவல் உதவி: பிபிசி | தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world