புல்லியிங், கிண்டலுக்கு ஆளாகும் மாணவர்களுக்கு உதவும் ஆப்: நிதி பெற்ற 13 வயது சிறுமியின் முயற்சி!
மாணவர்கள் கிண்டல் செய்யப்படுவதற்கு எதிராக 13 வயதுஅனுஷ்கா ஜாலி நிறுவியுள்ள Anti-Bullying Squad (ABS) நிறுவனம் Kavach என்கிற செயலியை உருவாக்கியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சக மாணவர்களை கிண்டல் செய்வது வழக்கம். ஆங்கிலத்தில் இதை 'புல்லியிங்’ என்று சொல்வதுண்டு. இதுபோன்ற கிண்டல், கேலிக்கு ஆளாகும் மாணவர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுபிடித்துள்ளார் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர்.
அனுஷ்கா ஜாலி புதுடெல்லி பாத்வேஸ் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். ஒருமுறை ஆறு வயது பெண் குழந்தையை இவரது நெருங்கிய நண்பர்கள் கிண்டல் செய்வதைப் பார்த்துள்ளார். அனுஷ்காவின் நண்பர்கள் அந்தச் சிறுமியின் பெயரைச் சொல்லி கேலி செய்துகொண்டிருந்தனர்.
“அந்த சிறுமி பயந்துவிட்டாள். அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் அவமானத்தில் குழப்பத்துடன் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன்,” என்கிறார் அனுஷ்கா.

அனுஷ்கா ஜாலி - நிறுவனர், ABS, Kavach app
அனுஷ்கா இளம் தொழில்முனைவோர் அகாடமி (YEA) வகுப்பிற்கு சென்றிருந்தார். அங்கு இந்தப் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அனுஷ்காவின் ஆலோசகர்கள் அவர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண ஊக்குவித்துள்ளனர். இப்படித் தொடங்கியதுதான் Anti-Bullying Squad (ABS).
ABS வலைதளம் ஒவ்வொரு பள்ளியிலும் தனிப்பட்ட முறையில் அமர்வுகள் ஏற்பாடு செய்கிறது. இளம் சமூகத்தினர் கிண்டல்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்க ஊக்குவிக்கிறது.
கேலி, கிண்டலுக்கு எதிராக ஒரு செயலி
கிண்டலுக்கு எதிராக அனுஷ்கா உருவாக்கியிருக்கும் செயலியின் பெயர் Kavach. ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியில் முதலீட்டாளர்களான அமன் குப்தா, அனுபம் மிட்டல் ஆகியோரிடமிருந்து இந்தச் செயலி 50 லட்ச ரூபாய் நிதித் தொகையை வென்றுள்ளது. இந்த செயலி உருவாக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டம் பற்றி அனுஷ்கா விவரிக்கும்போது,
“2018, 2019 ஆண்டுகளில் நான் நேரடியாக மக்களை சந்தித்து அமர்வுகள் எடுத்து வந்தேன். சுமார் 100 குழந்தைகளைத் தொடர்பு கொண்டிருப்பேன். 2020ம் ஆண்டில் பெருந்தொற்று பரவல் ஆரம்பித்த பின்னர் ஆன்லைன் மூலம் தொடர்பில் இருக்கிறேன். பாத்வேஸ் குருகிராம், பாத்வேஸ் நொய்டா, மதர்ஸ் பிரைட் பல்வேறு கிளைகள், பிரெசிடியம் போன்ற பள்ளிகளில் 700க்கும் மேற்பட்ட மாணவர்களை சென்றடைந்திருக்கிறேன். ஓரியன்ஸ்கொயர், பூமி போன்ற என்ஜிஓ-க்களுடனும் இணைந்து செயல்பட்டிருக்கிறேன்,” என்கிறார்.
2021ம் ஆண்டில் அனுஷ்கா ABS முயற்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். அமர்வுகளை பதிவு செய்தார். இதனால் மாணவர்கள் தங்கள் வசதியின்படி கற்றுக்கொள்ள முடிந்தது. ஜூம், இன்ஸ்டாகிராம் லைவ், ஆன்லைன் தளங்கள் என அனுஷ்கா எதையும் விட்டுவைக்கவில்லை. 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2,000 மாணவர்களிடையே இவர் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
கிண்டல்களைக் கையாள்வதில் அனுஷ்காவிற்கு மூன்றாண்டுகள் அனுபவம் கிடைத்தது. எப்படிப்பட்ட புகார் வந்தாலும் அதைத் தீர்த்து வைக்கமுடிகிறது என்பதை அவர் உணர்ந்தார்.
அப்பாவின் உதவியுடன் கிண்டல், கேலிகளுக்கு எதிராக Kavach என்கிற செயலியை உருவாக்கினார்.
“கேலி, கிண்டலுக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கபட்டவர்களோ அல்லது அவர்களது அருகிலிருப்பவர்களோ அல்லது பாதிக்கப்பட்ட/அருகிலிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களோ கிண்டல் குறித்து புகாரளிக்க இந்த செயலி உதவுகிறது. இவர்கள் பொதுவாக கிண்டல் செய்பவர்களைக் கண்டு பயந்துவிடுகிறார்கள். நாம் புகாரளிப்பது தெரிந்தால் நமக்கு பிரச்சனை வரும் என்கிற பயம். இதுபோன்றவர்கள் தங்கள் பெயரை வெளியிடாமல் புகாரளிக்கும் வசதியும் இதில் உள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளோ அல்லது ஆலோசகர்களோ இந்தப் புகார்கள் தொடர்பாக தீர்வு காண்பார்கள். பள்ளிகளில் கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் கேமராவில் கவர் ஆகாத இடங்களிலேயே நடக்கின்றன,” என விவரித்தார்.
இந்த செயலி விரைவில் ப்ளேஸ்டோரில் கிடைக்க உள்ளது. சமூக வலைதளங்கள், சொந்த வலைதளம் போன்றவற்றின் மூலமாகவும் மார்க்கெட்டிங் உத்திகள் வகுத்தும் இந்த செயலியை சந்தைப்படுத்த அனுஷ்கா திட்டமிட்டிருக்கிறார். அனுஷ்கா 15 பேர் கொண்ட குழுவுடன் செயல்பட்டு வருகிறார்.
ஷார்க் டேங்க் இந்தியா
அனுஷ்கா ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் குறித்து உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார்.
“மொத்தம் நான்கு சுற்றுகள். இரண்டு ஆன்லைனில் நடந்தது. ஒரு சுற்றில் நேரடியாக ஐடிசி டெல்லி செல்லவேண்டியிருந்தது. அடுத்ததாக இறுதிச்சுற்று மும்பையில் நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து மொத்தமாக 62,000 விண்ணங்கள் பெறப்பட்டன. இதில் 198 ஸ்டார்ட் அப்கள் தேர்வு செய்யப்பட்டன. 67 பேருக்கு மட்டுமே நிதி திரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த 67 பேரில் ஒருவராக எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்ததில் அளவுகடந்த மகிழ்ச்சி,” என்கிறார்.

ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரன்விஜய் சிங், அனுஷ்கா
“ABS, Kavach மட்டுமல்ல எனக்கும் ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சி ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மும்பை ஃபிலிம்சிட்டியில் நடந்த படப்படிப்பில் பல தொழில்முனைவோர்களுடன் நானும் பங்கேற்றிருந்தேன். ஒத்திகை, இறுதி படப்பிடிப்பு என மூன்று நாட்கள் செட்டில் நேரம் செலவிட்டேன். தொழில்முனைவோர்களுடன் இணைவதற்கு கிடைத்த வாய்ப்பு என் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம்,” என்கிறார்.
ஆரம்பத்தில் இரண்டு ஷார்க்குகள் நிகழ்ச்சியை விட்டு விலகியபோது சற்றே நம்பிக்கை இழந்ததாக அனுஷ்கா பகிர்ந்துகொண்டார்.
“அனுபம் நான் கேட்டதைக் கொடுக்க முன்வந்தார். இந்த சந்தோஷத்திலிருந்து மீள்வதற்குள்ளாகவே அமன் இரண்டு ஷார்க் டீல்களுக்கு ஒப்புக்கொண்டார். குழந்தைகளிடையே நான் அற்புதமான தகவலைக் கொண்டு சேர்ப்பதாகவும் எனக்கு வழிகாட்டுவதாகவும் நமீதா தெரிவித்தார். இந்த ஜாம்பவான்களின் ஆதரவுடன் Anti Bullying Squad, Kavach ஆகிய முயற்சிகள் புதிய உச்சத்தை அடையும் என திடமாக நம்புகிறேன்,” என்கிறார்.
நிதித் தொகையைக் கொண்டு கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார் அனுஷ்கா.
செயலியைப் பயன்படுத்தும் ஒரு நபர் மற்றவர்களும் பதிவிறக்கம் செய்ய ஊக்குவிப்பார்கள். இப்படி ஒருவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ எத்தனை பேரிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதைக் கண்காணிக்கும் வசதியும் உள்ளது என்கிறார் அனுஷ்கா.
மன ஆரோக்கியம் சார்ந்த பிரிவில் மெட்டாவெர்ஸ் அறிமுகப்படுத்தவும் அனுஷ்கா விரும்புகிறார்.
அனுஷ்காவின் முயற்சிக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்துள்ளன. நெட்வொர்க் 18 ’யங் ஜீனியஸ்’ நிகழ்ச்சியில் இந்தியாவின் இளம் மேதைகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்பம் சார்ந்து பெண்கள் தலைமையில் நடக்கும் ஸ்டார்ட் அப்களில் ‘Top 21 for 2021’ பட்டியலில் இடம்பெற்று இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது எட்டாம் வகுப்பு படித்து வரும் அனுஷ்கா நேரத்தை முறையாக திட்டமிட்டால் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தமுடியும் என்கிறார்.
“ஒரு நாளில் கிடைக்கும் 24 மணி நேரங்களில் அதிக வேலைகளை செய்து முடிக்கும் வகையில் நான் அட்டவணை போட்டு பின்பற்றுகிறேன்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா

