யூபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் 13 வயது மாணவன்!
பதிமூன்று வயதான அமர் சாத்விக் தொகிடி, 1.87 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்ட தனது சொந்த யூட்யூப் சானல் வாயிலாக யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியடைய விரும்புபவர்களுக்கு புவியியல் மற்றும் அரசியல் அறிவியல் கற்றுக்கொடுத்து வருகிறார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறுவது மிகவும் கடினமானதாகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பட்டதாரிகளும் முதுகலை பட்டதாரிகளும் இதில் தேர்ச்சி பெற ஆர்வம் காட்டினாலும் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சியடைய விரும்புவோர்களுக்கு உதவும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு பயிற்சி மையங்கள் செயல்பட்டு ஒரு தனித்துறையாகவே செயல்பட்டு வருகிறது. 13 வயதான அமர் சாத்விக் தொகிடியும் அவ்வாறு பயிற்சி மையங்கள் நடத்தி வருபவர்களில் ஒருவர்.
அமர்; தனக்கு பத்து வயதிருக்கையில், அதாவது 2016-ம் ஆண்டு, ’லேர்ன் வித் அமர்’ என்கிற யூட்யூப் சானலைத் துவங்கினார். இன்று இவரது சானலில் 1,87,000-க்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். தெலுங்கானாவின் மான்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த அமர் ஒன்பதாவது படிக்கிறார். யூபிஎஸ்சி தேர்வெழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்பது அமரின் கனவு என ’ஃபர்ஸ்ட் போஸ்ட்’ தெரிவிக்கிறது.
அமர் தனது யூட்யூப் சானல் வாயிலாக பார்வையாளர்களுக்கு அரசியல் அறிவியல் கற்றுக்கொடுக்கிறார். பதிமூன்று வயதான இவர் நாட்டின் பெயர், அதன் இருப்பிடம், ஆறுகளின் பெயர் போன்றவற்றை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள பல்வேறு குறிப்புகளை வழங்குகிறார்.
தி இண்டியன் எக்ஸ்பிரஸ் உடனான உரையாடலில் அமர் குறிப்பிடுகையில்,
எனது யூட்யூப் பார்வையாளர்களில் பலர் போட்டித் தேர்வுகள் எழுதுபவர்கள். இவர்களது கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நான் பாடங்களை பயின்று வீடியோ உருவாக்குகிறேன். ஒரு தலைப்பு குறித்து ஆராய சுமார் இரண்டு வாரங்கள் எடுத்துக்கொள்கிறேன். அதன் பிறகு நான் ஒன்றிரண்டு முறை பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகே வீடியோவாக பதிவிடுகிறேன்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
”எங்களுக்கு சில சமயம் எதிர்மறையான விமர்சனங்களும் வருவதுண்டு. நான் பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்தி வருவதால் வார இறுதியில் மட்டுமே வீடியோக்களை உருவாக்க நேரம் ஒதுக்குகிறேன். எனவே அதை நினைத்து கவலைப்படுவதில்லை,” என்றார்.
அமரின் அப்பாவான கோவர்தன் ஆச்சாரி தொகிடி அரசுப் பள்ளி ஆசிரியர். தனது முயற்சிக்கு தனது அப்பாதான் முக்கியக் காரணம் என்கிறார் அமர். இந்த முயற்சி எவ்வாறு துவங்கப்பட்டது என்கிற கேள்விக்கு அமர் பதிலளிக்கையில்,
5-ம் வகுப்பு படிக்கும்போதே அட்லாஸில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு புவியியல் மீதிருந்த ஆர்வத்தைக் கண்ட என் அப்பா எனக்கு புவியியல் கற்றுத்தரத் துவங்கினார். ஒரு முறை நான் கற்றுக்கொண்டதை விவரித்துக்கொண்டிருந்தபோது என் அம்மா அதை வீடியோவாக பதிவு செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார். அந்தப் பதிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போதிருந்து இந்த முயற்சி தொடர்கிறது,” என்றார்.
அமரின் தம்பியான அங்க் விக்னேஷும் பயிற்சி எடுப்பதில் இணைந்துகொண்டுள்ளார். இவர் இதுவரை சானலில் 10-13 வீடியோக்கள் உருவாக்கியுள்ளார். கோவர்தன் தனது மகன்களிடம் இருக்கும் திறன் குறித்து குறிப்பிடுகையில்,
என் மகன்கள் திறமைசாலிகள். மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுக்கும் அதே நுணுக்கங்களையே இவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறேன். இவர்கள் இருவரும் விரைவாக புரிந்துகொள்கின்றனர். இருவரும் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு மேற்கொண்டு படிக்க நகருக்கு அனுப்ப விரும்புகிறேன். அவர்கள் இங்கே இருக்கும் வரை அவர்கள் அதிக அறிவுத்திறன் பெற்று தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுவேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA