ஹோட்டல்களில் இனி உணவு பார்சலுக்கு பாத்திரம் கொண்டு வந்தால் விலையில் டிஸ்கவுன்ட்!
உலகளவில் பெரும் பிரச்சனையாய் இருப்பது சுற்றுச்சூழல் பாதிப்பு. கடல், நிலம் என சகலமும் மாசு அடைந்துள்ளது, இதில் மிகப்பெரிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் மாசை கட்டுப்படுத்த பிளாஸ்டிக்கை ஒழிக்க பல சமூக அமைப்பும் தன்னார்வலர்களும் முயன்று வருகின்றனர். அந்த வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தங்களுக்கான பங்கை அளித்துள்ளது தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம்.
உணவு பார்சலுக்கு வீட்டில் இருந்து பாத்திரத்தை கொண்டுவந்தால் டிஸ்கவுன்ட் அளிக்கப்டும் என தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. உணவு வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்சல் பெறுவதற்கு வீட்டில் இருந்து பை அல்லது பாத்திரம் கொண்டுவந்தால் மொத்த விலையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். இந்த சங்கத்தில் சுமார் 10,000 உறுப்பினர்கள் உள்ளனர், இவர்கள் ஒன்றுகூடி இந்த தீர்மானத்தை அமல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
“பொதுவாக உணவு பார்சல் பெருபவர்களின் பில் தொகை 3-4 % அதிகமாகவே இருக்கும், அதனால் வாடிக்கையாளர்கள் உணவுக்கான பாத்திரத்தை கொண்டுவந்தால் பணத்தை மிச்சப்படுத்தலாம். ஹோட்டல் உறுப்பினர்களை அவர்களது உணவு விடுதியில் இது குறித்து அறிவிக்க வலியுறித்தி உள்ளோம்,”
என்கிறார் சென்னை சங்கத்தின் தலைவர் ரவி புதியதலைமுறைக்கு அளித்தப் பேட்டியில். பிளாஸ்டிக் பொருட்களுகு தடை விதிக்க பல மாநிலங்கள் அதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டு வருகிறது. முதலில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து இந்த சமூகச் செயலை மகாராஷ்டிரா அரசு துவங்கி வைத்தது. அதாவது ஒரு முறை பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் பொருளின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசு வரும் ஜனவரி 2019 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கும் என்று கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.
அதாவது பால், தயிர், எண்ணெய் மற்றும் மருந்து பொருட்கள் தவிர வேறு எதுக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என முதல் அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்திற்கு பிளாஸ்டிக் தடை வருவதற்குள் தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் இந்த முடிவை எடுத்தது பாராட்டத்தக்கது.
அரசு முடிவை வரவேற்று, சமூக அக்கறை கொண்ட அமைப்புகளுக்கு ஒத்துழைத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை நாமும் குறைப்போம்!
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் | தகவல் உதவி: புதிய தலைமுறை