குழந்தைகளின் ஆன்லைன் பயன்பாட்டை குறைக்க ‘ஆக்டிவிட்டி கிட்’ உருவாக்கிய 18 வயது தொழில்முனைவர்!
18 வயது வாணி ஜெயின் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுமுள்ள குழந்தைகள் வேடிக்கையாக கற்றுக்கொள்ளும் வகையில் ஆக்டிவிட்டீஸ் பாக்ஸ் உருவாக்கி Mystery Crate என்கிற பெயரில் வழங்கி வருகிறார்.
வாணி ஜெயின் டெல்லியில் உள்ள தி ஸ்ரீராம் ஸ்கூல் மாணவி. இவருக்கு சிறு வயதில் இருந்தே நிறுவனங்களில் சேர்ந்து வேலை செய்வதில் விருப்பமில்லை. சொந்தமாக ஒரு வணிகத்தைக் கட்டமைக்கவேண்டும் என்பதே இவரது கனவு.
இந்த கனவை நோக்கிய பயணத்தின் முதல் அடியாக Thapar Entrepreneurship Academy (YEA) அகாடமியில் சேர்ந்தார்.

எந்தத் தொழிலைத் தேர்வு செய்வது என்கிற கேள்வி எல்லோருக்கும் வருமல்லவா? ஆனால், இவருக்கு அந்த சிக்கலே இல்லை. இவரது வீட்டிலேயே இவருக்கான கேள்வி கிடைத்துள்ளது.
”எனக்கு ஒரு தம்பி. எப்போதும் ஆன்லைனில்தான் ஏதாவது செய்துகொண்டிருப்பான். நானும் என் அம்மாவும் திட்டிக்கொண்டே இருப்போம். உடம்பைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்போம். ஆனால் கேட்கமாட்டான். குழந்தைகள் பயனுள்ள வகையிலும் சுவாரஸ்யமாகவும் நேரம் செலவிட ஏதாவது உருவாக்கினால் என்ன? இந்தக் கேள்வி மனதில் எழுந்தது. அதற்கு நான் கண்டுபிடித்த விடைதான் `மிஸ்ட்ரி கிரேட்’ (Mystery Crate),” என்கிறார் வாணி ஜெயின்.
வாணி, கிரியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ’’ தொடங்கினார்.
Mystery Crate கிரியேடிவ் பிராஜெக்டுகளை வழங்குகிறது. இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுமுள்ள குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறது.
“Mystery Crate என்பது ஒரு சப்ஸ்கிரிப்ஷன் பாக்ஸ். இதில் இரண்டு ஆக்டிவிடீஸ், இரண்டு பரிசுகள் ஆகியவை இருக்கும். வேடிக்கையாகக் கற்றுக்கொள்ளும் வகையில் வெவ்வேறு ஆக்டிவிடீஸ், விளையாட்டு போன்றவை இருக்கும். ஒவ்வொரு மாதமும் இது வாடிக்கையாளார்களின் வீடுகளிலேயே டெலிவர் செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பாக்ஸ் வரும் என்பதால் மாணவர்களின் ஆர்வம் தூண்டப்படும்,” என்கிறார் வாணி.
வீட்டில் இந்த பாக்ஸை குழந்தைகளுக்கு வெகுமதியாகக் கொடுத்து பழகலாம். குழந்தைகள் ஏதேனும் நல்ல விஷயம் செய்து முடிக்கும்போது இந்த பாக்ஸை பரிசாகக் கொடுக்கலாம்.
இதுதவிர பார்ட்டிகளில் ரிட்டன் கிஃப்டாகக் கொடுக்கலாம், பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசாகக் கொடுக்கப் பயன்படுத்தலாம். மாதாந்திர சர்ப்ரைஸ் கிஃப்டாகக் கொடுக்கலாம்.
”இந்தியாவில் இதற்கான சந்தை அளவு மிகப்பெரியது. இங்கு பிறப்பு விகிதம் 25 மில்லியன். மாணவர்களின் கற்றல் திறனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறோம். இதனால் சந்தை வாய்ப்பு அதிகமுள்ளது. தாப்பர் அகாடமியில் சரியான வழிகாட்டல் எனக்குக் கிடைத்தது,” என வாணி விவரிக்கிறார்.
Mystery Crate ஒரு மாதத்திற்கான கட்டணம் 699 ரூபாய், மூன்று மாதங்களுக்கான கட்டணம் 1,899 ரூபாய். டெல்லி என்சிஆர் பகுதிக்குள் டெலிவரி செய்வதற்கான கட்டணமும் இதில் அடங்கும்.
“Flintobox STEAM பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால், Mystery Crate குழந்தைகள் வேடிக்கையாகக் கற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆர்வத்தை தூண்டுகிறது. மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் எங்கள் கட்டணம் மிகவும் குறைவு,” என்கிறார்.

Mystery Crate சிந்திக்கும் திறன், அறிவுசார் வளர்ச்சி, படைப்பாற்றல் திறன், கற்றல் திறன், பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் திறன் போன்றவற்றை மேம்படுத்துகிறது.
சரியான விற்பனையாளரையும் தயாரிப்பாளரையும் கண்டறிவது, சரியான நேரத்தில் டெலிவர் செய்வது போன்றவை ஆரம்பகட்ட சவாலாக இருந்ததாக வாணி தெரிவிக்கிறார்.
“எனக்கு டீன் ஏஜ் வயது என்பதால் இந்த வணிகத்தில் தொடர்புடையவர்கள் என்னை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் என்னுடைய முயற்சியில் உறுதியாக இருந்தேன். தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இருப்பேன். இப்படி இந்த சவாலை எதிர்கொண்டேன்,” என்கிறார்.
தனித்துவம்
குருகிராமில் ஒரு மாதத்திற்கு 50,000 Mystery Crates தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. வாணி இதைப் பயன்படுத்திக்கொள்கிறார்.
ஒவ்வொரு பிராடக்டும் தனித்துவமானது என்பதால் சந்தையிலிருந்து வெவ்வேறு மூலப்பொருட்களை வாங்கவேண்டியிருக்கும். இருப்பினும் தடையின்றி தயாரிப்புப் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்கிறார்.
“என்னுடைய சேமிப்பைக் கொண்டு வணிகத்தைத் தொடங்கினேன். இது புதிய, தனித்துவமான முயற்சி என்பதால் மாணவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லி புரியவைப்பது கடினமாக இருந்தது. எனது ஆலோசகர்களின் உதவியுடன் வாடிக்கையாளர்களுக்கு எளிமையாகப் புரியவைக்கக் கற்றுக்கொண்டேன்,” என்கிறார்.
வாணி பேக்கேஜிங் குறித்து ஆலோசகர்களுடனும் பிரிண்டிங் நிறுவனத்தின் உயர் அதிகாரியுடனும் கலந்து பேசினார். அவர் டிசைன் செய்தபோதும் பலரது கருத்துகளும் இதில் ஒன்று சேர்ந்துள்ளது. தற்சமயம் மார்க்கெட்டிங் வேலைகளை வாணியே கவனித்துக்கொள்ளும் நிலையில் தேவை அதிகமிருப்பதால் விரைவில் ஆட்களை நியமிக்க உள்ளார்.
Mystery Crate தயாரிப்பை இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் ஆர்டர் செய்துகொள்ளலாம்.
“ஓராண்டில் குறைந்தது ஆயிரம் ஆர்டர்களாவது பெறவேண்டும் என்பதே என் நோக்கம். இதன் மூலம் 38 சதவீதம் லாபம் கிடைக்கும். இந்த தயாரிப்பு இன்ஸ்டாகிராமில் பிரபலமாகி வரும் நிலையில் இது எட்டக்கூடிய இலக்காகவே பார்க்கிறேன். தாப்பர் தொழில்முனைவோர் அகாடமியில் இரண்டாம் பரிசு வென்றேன். இந்தத் தொகை என் வணிகத்தை கட்டமைக்கவும் அதிக வாடிக்கையாளார்களைச் சென்றடையவும் உதவுகிறது,” என்கிறார் வாணி.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா

