ஃபேன் மேட் வீடியோ மூலம் 19 வயது யூடியூபர் KGF: Chapter 2 எடிட்டர் ஆன கதை!
கேஜிஎப் 2 மேக்கிங் மிரட்டலாக இருப்பதாக விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், அப்படத்தின் எடிட்டர் உஜ்வால் பற்றி ஆச்சர்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேன்மேட் எடிட்டராக ஆரம்பித்து முழுப்பட எடிட்டராகி பாராட்டுகளை பெற்று வரும் உஜ்வாலுக்கு வயது 19 என்பதுதான் இந்த ஆச்சர்யம்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படம் KGF. முதல் பாகத்தில் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலையில் படக்குழு இறங்கியது.
கருடன் எனும் வில்லன் கதாபாத்திரம் இறந்த பிறகு, கேஜிஎப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெறும் அதிகாரப் போட்டிகளையும், அதன் பின் யாஷ் நடத்தும் அதிரடிகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.
கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில், கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு நேற்று உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியானது.

முழுக்க முழுக்க மாஸ் மசாலா விருந்தாக அமைந்துள்ள இந்தப் படம், முதல் பாகத்தைக் காட்டிலும் கூடுதல் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ரிலீசான நாளிலேயே இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. நடிகர்கள், பின்னணி இசை, சண்டைக்காட்சிகள், படத்தொகுப்பு என கேஜிப்- சேப்டர் 2 பட வெற்றிக்குப் பின்னணியில் பலரின் உழைப்பு உள்ளது.
KGF Chapter 2 படம் பற்றிய பல விமர்சனங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றில் பலரும் ஆச்சர்யப்படும் தகவல் ஒன்று உள்ளது. அது, கேஜிஎப் 2 படத்தின் இயக்குநர் 19 வயது சிறுவன் என்பதுதான். இந்தத் தகவல்தான் சமூகவலைதளங்களில் இப்போது டிரெண்டிங்.
பொதுவாக பெரிய பிரம்மாண்ட படங்களில் பணிபுரிபவர்கள் பெரும் அனுபவசாலிகளாக, ஏற்கனவே பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், இதில் இருந்து மாறுபட்டு, சிறுவனான உஜ்வல் குல்கர்னியிடம் பிரசாந்த் நீல் எப்படி ஒப்படைத்தார் என்பதுதான் பலரது வியப்பிற்குக் காரணம். ஆனால் தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி, பலரது பாராட்டுகளுக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் உஜ்வல்.
கேஜிஎப் என்ற பிரம்மாண்ட படக்குழுவுக்குள் உஜ்வல் வந்த கதையே சுவாரஸ்யமானது.
கடந்த 2019ம் ஆண்டு கேஜிஎப் படத்தின் முதல்பாகம், யாரும் எதிர்பார்க்காத அளவில் இந்திய அளவில் மாபெரும் பெற்ற போது, உஜ்வல் குல்கர்னிக்கு வயது 17 தான். யூடியூப் வீடியோக்கள் மற்றும் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்களை எடிட் செய்து பிரபலமானவர் இவர்.
மற்றவர்களைப் போலவே கேஜிஎப் படத்தின் ஃபேன் மேட் (Fan made) டிரைலரை உருவாக்கி, பிரசாந்த் நீலின் கவனத்தைப் பெற்றார். கேஜிஎப் படம் பற்றிய உஜ்வலின் படத்தொகுப்பு வீடியோக்களைப் பார்த்து அசந்துபோனார் நீல்.
அதன் தொடர்ச்சியாக, உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் டிரைலரை கட் செய்யும் பணியை உஜ்வலுக்கு நீல் வழங்கினார். தன் ஸ்டைலில் அதையும் பிரமாதமாக செய்து தந்தார் உஜ்வல். இதனால் உஜ்வலின் படத்தொகுப்பு மீது நீலுக்கு நம்பிக்கை அதிகமாக, முழுப்படத்தையும் படத்தொகுப்பு செய்யும் பணியை உஜ்வலிடம் அவர் ஒப்படைத்தார்.

நீலின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்து, இன்று கேஜிஎப் 2 படத்தின் வெற்றியில் முக்கியப் பங்காளர் ஆகி இருக்கிறார் உஜ்வல்.
ஆச்சர்யப்படுத்திய உஜ்வால் குல்கர்னி
இந்தப் படத்தில் ஏராளமான வில்லன்கள், கிளைக்கதைகள், முன்-பின் கதை சொல்லும் முறைகள் எனப் பல்வேறு டீடெயில்ஸ் இருப்பதால் இதன் படத்தொகுப்பு நிச்சயம் சவாலான ஒன்றுதான் என்பது திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், படத்தை பார்த்த ரசிகர்களுக்கும் நன்கு தெரியும். இதனாலேயே உஜ்வலை ஆச்சர்யத்துடன் மக்கள் பார்க்கின்றனர்.
இந்தச் சின்ன வயதிலேயே ஒரு பேன் இந்தியன் படத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்தும், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டது குறித்தும் ஒட்டு மொத்த இந்திய திரையுலகமும், சினிமா ரசிகர்களும் உஜ்வலுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய பிரஸ்மீட் ஒன்றில் கேஜிஎப் பட ஹீரோ யஷ்,
“எங்க டெக்னிசியன்ஸ் மேடையில் பேச மாட்டாங்க, ஸ்கீர்ன்ல பேசுவாங்க,'' எனத் தெரிவித்திருந்தார். உஜ்வல் உட்பட படக்குழு அனைவரின் உழைப்பும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
கேஜிஎப் சேப்டர் 2 படத்தை பார்த்த அனைவரும் உஜ்வலின் பணியை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். அவரது படத்தொகுப்பு பல திரைப்பட தயாரிப்பாளர்களை ஈர்த்துள்ளது, நிச்சயமாக, அவர் விரைவில் பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு படத்தொகுப்பு செய்யும் வாய்ப்புகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் படத்திலேயே டாக் ஆப்தி டவுன் ஆகி விட்டார் உஜ்வல்.

