7 ஆண்டுகளில் 25,000 அறுவைசிகிச்சைகள், இலவச மருத்துவம் வழங்கும் அமானுல்லா!
கடந்த 7 ஆண்டுகளாய் இலவசமாய் மருத்துவம் அளித்து, மேல் அறுவை சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு ஆயிரக்கணக்கானோரின் வாழ்வை மாற்றியுள்ளார் டாக்டர் அமானுல்லா.
“என் பேரு கோபால். வேப்பணப்பள்ளி தான் எங்க ஊரு. மூணு வருஷத்துக்கு முன்னாடி வயித்து வலினு ஆஸ்பத்திரிக்கு போனப்ப, அப்பண்டீஸ்னு சொன்னாங்க. அப்படின்னா என்னனு கூட தெரியாது. ஆபரேஷன் பண்ணனும் சொன்னதும் கையிலிருந்த காசு போக, கடன் வாங்கி ஓசூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில 40,000ரூபாய் செலவு செய்து ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். ஆனாலும், என்னோட வயித்தவலி மட்டும் போகவே இல்ல. ஆஸ்பத்திரிக்கு போனா திரும்பி ஆபரேஷன் செய்யனும்னு சொன்னாங்க. வயித்தவலியில் வேலைக்கு போக முடியுமா ஒரு வருஷமா வெறும் கஞ்சி குடிச்சு பிள்ளைகளுக்கு சோறு போட முடியாத நிலையில இருக்கிறப்போ, எங்குட்டு ஆபரேஷன் செய்வது?
அப்பதான், அமானுல்லா ஐயாவோட ஆஸ்பத்திரிக்கு போனோம். முழுசா என்னோட வைத்திய செலவுலாம் பாத்திக்கிட்டு பெங்களூர் கூட்டிட்டு போய் அம்பேத்கர் ஆஸ்பத்திரியில் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தார். சாப்பாட்டு செலவில் இருந்து எல்லாத்தையும் பாத்துக்கிட்டதும் இல்லாம ஒரு நாளைக்கு மூணு தடவையாச்சும் செலவுக்கு காசு இருக்கா, எதுவும் வேணுமானு கேட்டுருவார். அப்படியொரு நல்ல மனுசன் அவரு. நிசமா சொல்றேன், அவரு இல்லைன்னா கண்டிப்பா ஆபரேஷன்லாம் செஞ்சு இருக்க மாட்டேன். செத்துருப்பேன்மா...” என்று தன்னுடைய வேதனைகளை வார்த்தைகளால் உதிர்க்கும் கோபால் போன்ற பல கோபால்களின் துயர் துடைத்து வருகிறார் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அத்திமுகம் பகுதியைச் சேர்ந்த மருந்தியலாளர் அமானுல்லா.
இதுவரை 25,000-க்கும் அதிகமானோருக்கு அறுவை சிகிச்சைக்கனக்கான மொத்த செலவுகளையும் ஏற்று உதவிவருகிறார்.
மருத்துவம் மட்டுமின்றி ஏழை மக்களது அடிப்படைத் தேவைகளை தம்மால் இயன்றவரை பூர்த்தி செய்யும் நன்நோக்கத்தை கொண்டவர் அமானுல்லா. ஆம், இலவச மருத்துவ சேவையை அடுத்து ஆதிக்காலங்களில் பழங்களை தட்சணமாக பெற்றுக் கொண்டு கல்வி கற்பித்த பள்ளி முறையினை பின்பற்றி இலாப, நஷ்ட நோக்கமற்ற மெட்ரிகுலேஷன் பள்ளியை தொடங்க உள்ளார்.
“நான் படிச்ச காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு தான் காலேஜ் முடிச்சேன். மைசூரில் பார்மஸி படித்துவிட்டு, பெங்களூரில் பிடிஎஸ் இரண்டு ஆண்டுகள் படித்தேன். அதற்குமேல் தொடர முடியவில்லை. பெங்களூரிலே மருத்துவக் கல்லூரியில் 15 ஆண்டுகள் வேலைசெய்தேன்,” என்றார்.
முதல் பணிக்கு பின்னதாக ஓசூரில் மெடிக்கல் ஷாப் வைத்திருந்த சமயம். அப்பகுதியில் மருத்துவ வசதிகளற்று இருந்துள்ளது. அப்போதே, நோயால் வாடுவோருக்கு தம்மால் இயன்ற சிறுசிறு உதவிகளை செய்துள்ளார். அச்சிறு துளியின் பெரு வெள்ளமே, 50 படுக்கை வசதிகளுடன் அத்திமகத்தில் அமைந்துள்ள அமானுல்லா இலவச மருத்துவமனை.
“பெங்களூர் அம்பேத்கர் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து அத்திமகம் சுற்றியுள்ள பகுதியில் வாரம் இருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்தி வந்தோம். சர்க்கரை நோயாளிக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மாத்திரை, மருந்துகளையும் வழங்கிவிடுவோம். வேறு எங்கும் அலைந்து செல்லாமல் இருக்குமிடத்திலே இந்த மக்களுக்கு சிகிச்சை கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் என்னுடைய நீண்டநாள் ஆசையான இலவச மருத்துவமனையை அத்திமகத்தில் எனக்கு சொந்தமாய் உள்ள 100 ஏக்கர் தோட்டத்துக்குள் 2011ம் ஆண்டு கட்டி முடித்தேன்,” என்கிறார்.
நாளொன்றுக்கு 500 முதல் 700 நோயாளிகள் வரை இவரை தேடி வருவது வழக்கம். அமானுல்லா பொதுவான நோய்களை சிகிச்சை அளித்து குணப்படுத்துவார். மேல் அறுவைசிகிச்சை தேவைப்படுவோரை பெங்களூருவில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அறுவை சிகிச்சைக்கான பொருள் உதவிகளை அவரே ஏற்றுகொள்கிறார். தவிர 4ஆம்புலன்சுகளையும் வாங்கி முழுக்க முழுக்க மக்கள் பயன்பாட்டுக்காக இலவசமாய் இயக்குகிறார்.
மருத்துவமனைக்கு தன்னை நாடி வருபவர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதுடன் தன் குடும்பத்தின் ஒரு அங்கத்தினாராய் கவனித்து கொள்கிறார். ஓசூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 5 குழந்தைகளில் மூன்று குழந்தைகள் மாற்றுதிறனாளிகளாக இருப்பதையும், அதில் மூத்த குழந்தை உடல்நல பாதிப்பில் உயிரிழந்தநிலையில் அக்குடும்பம் சிகிச்சை அளிக்க முடியாமல் கஷ்டப்படுவதையும் அறிந்த அமானுல்லா, அவர்களுக்கு உதவ முன்வந்ததுடன், மாற்றுதிறனாளிகள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடிய விடுதியையும் கட்டுவதற்கு இம்மாதத் தொடக்கத்தில் அடிக்கல் நாட்டியுள்ளார். ஆனால், இச்சேவைகளுக்காக பிற உதவும்கரங்களை அவர் எதிர்பார்ப்பதில்லை.
“தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறோம். இடங்களை தொழிற்சாலைகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளேன். அதனால், அந்த பணங்கள் வருவதால், அதை வைத்து செலவினங்களை சரிக்கட்டிக் கொண்டு வருகிறேன். கடவுள் அருள்புரியும் வரை மக்களுக்கு உதவி செய்வேன்,” என்கிறார்.
அமானுல்லாவின் மருத்துவச் சேவையை பாராட்டி உலக தமிழ் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. ஆனால், அமானுல்லாவின் கனவு ஏழை மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை கிடைக்க பெற, மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பதே.
“ஒரு மருந்து ஆளுநராக மருந்தை எங்கு, எப்படி வாங்க வேண்டும் என்பது தெரியும். இப்போ மருந்துவிற்பனை பணம் பார்க்கும் வணிகமாகிவிட்டது. ஹாஸ்பிட்டலில் ஏற்றப்படும் ஒரு குளூக்கோஸ் பாட்டிலின் விலை வெறும் 16ரூபாய். ஆனால், ஒவ்வொரு இடங்களில் அவர்கள் நோக்கத்திற்கு பில் போடுகின்றனர். அதனால் தான், என் மகனை எம்பிபிஎஸ் படிக்க வைத்து எம்.டி பார்மாக்காலஜி படிக்க வைத்துள்ளேன். பயிற்சி காலத்தில் இருக்கும் அவர் வந்துவிட்டால், நிறுவனத்தை தொடங்குவதற்கான திட்டமிடல் தொடங்கிவிடும்” என்கிறார் அவர்.