'இதைக்கூட முயற்சிக்காவிட்டால் எப்படி? பரமாவின் வெற்றிக்கதை!
"தில் தடக்னே தோ” எனும் ஹிந்தி திரைப்படத்தில் வரும் ஷெஃபாலி ஷா, தன் முகத்தில் கேக்கை பூசிக்கொண்டு அதை தன் கண்ணீரால் துடைப்பார். இதுபோன்ற நிலைமை நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டிருக்கும். காராணம் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம். என்னுடைய ஸ்டார்ட் அப்பும் இதுபோன்ற நிலைமையில் தான் தொடங்கியது.
என்னைப்பற்றிய ஒரு போலியான அறிமுகத்தை நான் விரும்பவில்லை. மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உண்மையை வெளிப்படுத்தவே விரும்புகிறேன். சலிப்பூட்டும் வேலை காரணமாக உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்துபோனேன். மனமுடைந்து போனேன். சட்டத்துறையில் எட்டு ஆண்டுகள் இருந்தேன். திருமணம் முடிந்து ஒன்பது ஆண்டுகள் முடிந்தும் குழந்தை பிறக்கவில்லை. நம் நாட்டில்தான் இது மிகப்பெரிய குற்றமாயிற்றே! இதனால் என் பொறுமை எல்லைமீறி போனது. உடைந்த கால்களையும் கைகளையும் குணப்படுத்த மருத்துவமனை இருக்கிறது. மனமுடைந்து போனவர்களுக்கு ஆறுதலளிப்பதற்கு ஒன்றுமில்லை.
ஒவ்வொருநாளையும் கடத்துவதே பெரும்பாடாக இருந்தது. பொது இடங்களில் சந்திப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கேள்விக்கணைகளை தொடுப்பார்கள். “எல்லாரும் இதைப்பற்றித்தான் கேட்கிறார்கள். எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள போகிறாய்?”. இன்று இரவு சாப்பாட்டுக்குமுன் என் கையில் நிச்சயமாக குழந்தை இருக்கும்” என்று பதிலளிக்கத்தோன்றும். ஆனால் சொல்லமுடியுமா? இந்த பதிலை நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சோர்வான தருணத்தில்தான் ஒரு சொந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கு உதித்தது. “வாழ்க்கை உனக்கு எதைத் தருகிறதோ அதை விற்றுவிடு. தொழில் தொடங்கு. பெரிய ராஜ்ஜியத்தை உருவாக்கு”. இந்த பொன்மொழிதான் அதற்குக் காரணம்.
வேலையும்-தொழில்முனைவும்
ஸ்டார் அப் என்னுடைய திட்டமிடப்படாத குழந்தை. இவ்வாறு நான் சொல்வதற்கு காரணம் என்னுடைய பணி. என் குடும்பத்தில் நான்கு தலைமுறையாக வக்கீலாக இருக்கிறார்கள். நானும் அவர்கள் வழியை பின்பற்றினேன். நஸ்ருதீன் ஷா ஒரு இந்தி திரைப்படத்தில் சொல்வது போல “தவறு செய்வது மனித இயல்பு”. இந்தியாவின் புகழ் பெற்ற சட்ட நிறுவனதில் பணிபுரிந்தேன். அலுவலகம் கொல்கத்தாவில் இருந்தது. தொடர்ந்து வேலையில் மந்த நிலை காணப்பட்டது. என் மானசீக குழந்தை பிறந்ததற்கு இதுதான் காரணம்.
என்னுடைய பன்னிரன்டாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த சமயம் ஓவியத்தில் எனக்கிருந்த ஆர்வத்தை வீட்டில் தெரிவித்தேன். கொல்கத்தா அரசு ஓவியக் கல்லூரியிலோ அல்லது பிஸ்வா பாரதி, சாந்தினிகேதனிலோ ஓவியம் பயில்வதற்கு ஆர்வமாக இருந்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. காரணம் ஓவியமும் சிறந்த எதிர்காலமும் வெவ்வேறு துருவமாக பார்க்கப்பட்டது. மனதிற்கு நிம்மதியளிக்கும் பணியைவிட உடலுக்கு போஷாக்களிக்கும் பணிதான் சிறந்ததாக கருதப்பட்டது. சட்டம் படித்தேன். ஏறக்குறைய எல்லா ஆண்டும் முதலிடம் வகித்தேன். பட்டம் பெற்றதும் நகரத்தின் பழமைவாய்ந்த மதிப்புமிக்க சட்ட நிறுவனத்தில் சேர்ந்தேன். வங்கி சேமிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் மனம் வறுமையால் வாடியது.
வீட்டை அழகுப்படுத்தும் (DIY) பொழுதுபோக்கில் கவனம் செலுத்தினேன். பழைய புடவைகள் திரைச்சீலையானது, சீப்பு கழுத்தில் அணியும் அட்டிகையானது, மிச்சமிருக்கும் சின்ன சின்ன துணிகள் ஒன்றுசேர்ந்து மெத்தை உறையானது. இந்த பொழுதுபோக்கு என்னுடைய தொழிலாக மாறும் என்று நினைத்ததில்லை. முதலீடு எனும் பெயரில் வரும் ஆபத்துதான் இதற்கு முக்கியக்காரணமாகும். பொறுமையிழக்கும் வரை இந்த பயம் தொடர்ந்தது. பின் மனதில் தெளிவு பிறந்தது. என்னுடைய தினசரி சலிப்புகளுக்கு நடுவே இது போன்ற ஒரு உற்சாகம் தேவைப்பட்டது.
வெளியேறுவதற்கு தைரியத்தை திரட்டினேன்
என்னுடைய ஸ்டார்ட் அப்பில் நான் எப்போதும் பின்பற்றும் ஒரு முக்கிய கொள்கை: எப்போதும் அலுவலகத்தில் தனிப்பட்ட வேலைகளைச் செய்யக்கூடாது. பணியிடத்தை பாதிப்பதோடு அல்லாமல் நிறுவனத்தை அரை மனதோடு கவனிப்பது போலாகிவிடும். அதனால் நான் தூங்கும் நேரத்தை குறைத்துக்கொண்டு வார இறுதியில் தொழில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினேன். பணியை ஒரு அறையிலும் விருப்பத்தை மற்றொரு அறையிலும் பூட்டி வைத்தேன். இரண்டும் சந்தோஷமாகத்தான் வளர்ந்தது. ஆனால் விருப்பத்தின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது. சில சமயங்களில் இரவு முழுவதும் கண் விழித்திருக்கிறேன். மனிதன் விசித்திரமானவன் அல்லவா? (உயிரற்ற குழந்தைகூட இரவு முழுவதும் தூங்கவிடாது என்று தெரிந்துகொண்டேன்).
தொழிலில் எனக்கு உதவுவதற்கு யாருமில்லை. வேலையையும் ஸ்டார்ட் அப்பையும் சேர்த்து சமாளிக்க சற்று திணறினேன். பொருட்களை வாங்குவது, கைவினைப்பொருட்கள் செய்வோரை கையாள்வது, குறிப்புகள் எழுதுவது, புகைப்படம் எடுத்து அதை வெளியிடுவது, பொருட்களை வாடிக்கையாளர்களிடம் சென்று ஒப்படைப்பது என அனைத்திற்கும் நான்தான் பயணிக்க வேண்டியிருந்தது. இது சுலபமல்ல. அதனால் முழுநேர சட்ட அலுவல்களிலிருந்து விடுபட முடிவெடுத்தேன்.
நன்மை தீமைகள் குறித்து ஆராய்ந்தேன். தொழிலில் நல்ல முன்னேற்றம்தான். ஆனாலும் பணியில் கிடைத்ததுபோன்ற தொகையை தொழில் மூலம் மாதாமாதம் பெறமுடியவில்லை. இது ஆபத்தானது ஏனென்றால் கணவருக்கும் நிரந்தர வருமானம் கிடையாது. அவரும் இரண்டு வருடங்களுக்கு முன்னால்தான் சுயதொழில் தொடங்கினார். குடும்பத்தில் இருவரும் தொழில் தொடங்குவது மகிழ்ச்சிதான் ஆனால் புத்திசாலித்தனம் அல்ல. சட்டத்துறையில் பல வருடங்கள் கழித்த நிலையில் அதை வாழ்க்கையிலிருந்து முற்றிலும் அகற்றிவிடவும் மனதில்லை. சில நாட்கள் இது குறித்து தீவிரமாக யோசித்தபின் ஒரு முடிவிற்கு வந்தேன். ஒரு ஸ்டார்ட் அப் சட்ட நிறுவனத்திற்கு வாரத்தில் மூன்று நாட்கள் ஆலோசகராக பணி புரிய முடிவெடுத்தேன். மற்ற நாட்கள் என் நிறுவனம் “பராமா” விற்கு செலவிட்டேன். இதுவும் ஆபத்துதான். இருப்பினும் விருப்பம் அதிகமாகும்போது பயம் தணிந்துவிடுகிறது.
களத்தில் இறங்க ஆயத்தமானேன்
எதற்கும் தயாராகி துணிந்துதான் களத்தில் இறங்கவேண்டும். எனக்கு மிகப்பெரிய தடங்கலாக தோன்றியவர்கள் தையல்காரர்களும் கைவினைப்பொருள் செய்பவர்களும். சிலர் என்னை அவர்கள் வீட்டு பெண்ணைப் போல நடத்தினார்கள். மற்ற சிலர் என்னிடம் அன்பாக நடந்துகொள்ளவில்லை. ஒருவர் என்னுடைய பணத்தையும் துணியையும் எடுத்துச் சென்றுவிட்டார். மற்றொருவர் என் வடிவமைப்பை தன்னுடையது என்று கூறி விற்றுவிட்டார். மேலும் கவனமாக இருக்கக் கற்றுக்கொண்டேன்.
நிறைய நிபந்தனைகளை விதித்துக்கொண்டேன். என் நிறுவனத்திற்காக நான் கடன் வாங்கவில்லை. முழு நேர பணியை துறந்ததால் பல செலவுகளை குறைத்துக்கொண்டேன். “என்ன செலவு செய்கிறோம் என்பதை எப்போதும் கவனமாக கண்காணிக்கவேண்டும்” என்பார் என் நண்பர் ஒருவர். இந்த உபதேசம்தான் பல மாற்றங்களுக்கு வழிவகுத்தது. தேவையற்ற செலவுகள் குறைக்கப்படவும் கண்காணிக்கப்படவும் வேண்டும். சேமிப்பு கட்டாயமானது. முதலில் சற்று கடினம்தான். ஆனால் மாத இறுதியில் சேமிப்பைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.
பேப்பர் வொர்க், கணக்குகளை குறிப்பெடுப்பது, லோகோ, ட்ரேட்மார்க் பெறுவதற்கான வேலைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது. கணக்குகள் ஒழுங்கான முறையில் கண்காணிக்கப்பட்டது. மூலதனம் குறித்த விவரங்கள் பட்டியலிடப்பட்டது. குறிப்பாக பொருட்களைக் குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய அட்டவணை தயாரிக்கப்பட்டது. அனைத்து வேலைகளும் ஒழுங்காக சிறப்பாக நடக்கத் தொடங்கியது. என்னை விட்டு சற்று தள்ளியே இருந்த முக்கிய பண்பான நல்லொழுக்கம் என்னைத் தழுவியது.
துணிகள் குறித்த பரிச்சயம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. நாம் கையாளும் பொருள் குறித்த அறிவு நமக்கு மிகவும் அத்தியாவசியமானது என்று நம்புகிறேன். இல்லையேல் ஒவ்வொரு கட்டத்திலும் தடுமாற்றம் ஏற்படும். நம் விற்பனைப் பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கு முன் அறிந்து வைத்திருக்கவேண்டும்.
புதிய வாழ்க்கை
நாம் சரியான முடிவுதான் எடுத்திருக்கிறோமா என்று ஒவ்வொருமுறை நான் யோசிக்கும்போதும் என் ஆன்மீக குருவின் வரிகள்தான் நினைவிற்கு வரும். “நாம் தவறுகள் இழைக்கக்கூடும். தவறு செய்யும்போதுதான் புதிய விஷயங்களை செய்கிறோம், முயற்சிக்கிறோம், கற்கிறோம், வாழ்கிறோம், உந்தப்படுகிறோம், நம்மையே மாற்றிக்கொள்கிறோம், உலகத்தையும் மாற்றுகிறோம். நாம் இதுவரை செய்யாத ஒரு விஷயத்தை செய்கிறோம். முக்கியமாக, ஏதோ ஒன்றை செய்கிறோம்.” இதைக்கூட முயற்சிக்காவிட்டால் எப்படி?.
பராமா தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. சோர்ந்துபோன மனதிற்கு இவள் ஒரு மெல்லிசை. என் பயங்களை அடியோடு அகற்றிவிட்டாள். உயிரற்ற குழந்தை எவ்வளவு அழகு என்று புரியவைத்தாள். தனியாக பயணம் செய்ய வைத்தாள். பேரம் பேச வைத்தாள். நம்பிக்கைவைக்க கற்றுக்கொடுத்தாள். தேவைப்படும் இடங்களில் நம்பக்கூடாது என்றும் எச்சரித்தாள். அந்நியமாக பழக ஆரம்பித்து நெருங்கிய நண்பராவது வரை பல நல்ல மனிதர்களை சந்திக்கவைத்தாள். எனக்கு லாபமும் அளித்தாள்.
இன்று என் விருப்பமான கைவினைக்கலைஞர் சொந்தமாக வீடு தயாரித்து என்னையும் அதில் ஈடுபடுத்துவதை பார்க்கும்போது நான் செய்தது சரிதான் என்று தோன்றுகிறது. ஒவ்வொருமுறை அவர் “ஒரு நாள் நீ பெரிதாக வளர்வதை நான் பார்க்கத்தான் போகிறேன்” என்று சொல்லும்போதும், எனக்குத் தெரியும் நான் செய்வது சரிதான் என்று. என் நண்பர்கள் சிலர் இதேபோன்ற தொழிலில் இருந்தாலும் என் ஸ்டார்ட் அப்பின் வளர்ச்சிக்காக சற்றும் தயங்காமல் எனக்கு உதவ முன்வந்தபோது, எனக்குத் தெரியும் நான் சரியான விஷயத்தைதான் செய்கிறேன் என்று”.
நான் செய்வது சரிதான் என்று எனக்குத் தெரியும் ஏனென்றால் நான் செய்வதை விரும்பிச் செய்கிறேன்.
இதுதான் ஒவ்வொரு தொழில்முனைவில் ஈடுபடுவோருக்கான முதல் மற்றும் முக்கிய கொள்கையாகும். வெறுமனே பெயருக்காக தொழில்முனைவில் ஈடுபடக்கூடாது. அனைவரும் செய்கிறார்கள், நாமும் ஏன் செய்யக்கூடாது என்று தொடங்கக்கூடாது. நீங்கள் விரும்புகிறீர்கள் அதனால் தொடங்குங்கள். நிச்சயமாக உங்கள் தொழிலும் உங்களை விரும்பத்தொடங்கும்.
ஆசிரியர் குறிப்பு : பரமா கோஷ் ஒரு வக்கீல் மற்றும் ஓவியர். “பரமா” என்ற நிறுவனத்தை 2015-ல் தொடங்கினார். இதில் துணிகள் குறித்த பல கதைகளை எழுதியுள்ளார். பகுதி நேரமாக வக்கீல் வேலை, குடும்பம், அவருக்கு மிகவும் பிடித்த வேலையை செய்வது இவை அனைத்திற்குமிடையில் கொல்கத்தாவை சுற்றிப்பார்ப்பது, ஓவியம் வரைவது, படிப்பது, எழுதுவது போன்றவை அவரது மற்ற விருப்பங்களாகும்.
(பொறுப்புத்துறப்பு : இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் சொந்த கருத்துக்களாகும். யுவர் ஸ்டோரியின் கருத்துக்கள் அல்ல)
தமிழில் : ஸ்ரீ வித்யா
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்