காலையில் பணிப்பெண், மாலையில் மும்பையை கலக்கும் ஸ்டாண்ட் அப் காமெடியன்...
அவமானங்களை அலட்சியமாய் கடந்து, பணிப்பெண்ணாக இருந்து இன்று மும்பை சிட்டியின் மோஸ்ட் வான்டட் ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறியுள்ள தீபிகாவின் கதை இது...
அடுத்த தலைமுறையினரையும் வயிறு குலுங்கச்சிரிக்க வைக்க தலைவன் வடிவேலு காமெடிகளே போதுமானதாக இருந்தாலும், அவருக்கு அடுத்ததாய் படையெடுத்த காமெடி நடிகர்கள் தொடங்கி ரியாலிட்டி டிவி ஷோ காமெடி கிங்குகளும் கிச்சு கிச்சு மூட்ட தொடங்கிவிட்டனர். இவர்களுக்கெல்லாம் அடுத்ததாய் ஒரு தலைமுறை, மேடை, யூடியுப் என்று நேரடியாக களமிறங்கியுள்ளது. அவர்கள் தான் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள். ஆனால், நீங்கள் பார்த்த மற்ற ஸ்டாண்ட் அப் காமெடியன்களுள் ஒருவரல்ல, தீபிகா மஹட்ரே.
ஏனெனில், அவர் பகலில் பணிப்பெண்... இரவில் ரகளையான ஸ்டாண்ட் அப் காமெடியன்... நாள் முழுவதும் விழி அகலவைக்கும் வொண்டர் வுமன்!
ஆம், ஒரு நாள் பொழுதின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரங்களை விடாது துரத்தும் வறுமையை விரட்டியடிக்க பயன்படுத்தி வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறார். மகாராஷ்டிராவின் நளசோபரா பகுதியைச் சேர்ந்தவரான தீபிகாவுக்கு, ‘3 மகள்கள், ஒரு கணவர்’.
தன் பயோடேட்டா கேட்பவர்களுக்கு இப்பதிலை தான் அளிக்கிறார் அவர். கணவர் ஆஸ்துமாவினால் அவதிப்பட, பதினைந்து வருடங்களாக படுக்கையிலே வாழ்க்கையை கழித்து வருகிறார். வறுமை தாண்டவமாடும் வீட்டின் துயரங்களை மற்றவர்களை சிரிக்க வைத்து மறைய வைக்கிறார் தீபிகா.
அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது தீபிகாவின் நாள். 4:30 மணிக்கு பணிக்கு செல்வதற்கான லோக்கல் ட்ரையின் பயணத்தை தொடங்குகிறார். தீபிகா வேலைக்கு செல்வதோ மும்பையில் மலாட் பகுதியில். தினந்தோறும் 3 மணி நேரம் பயணிக்கும் ரயிலையும் வருமானம் ஈட்டுவதற்கான தளமாக பார்த்தார் அவர். மகளிர் ஸ்பெஷலாய் கவரிங் நகைகளை ரயில் பெட்டிகளில் விற்று, தான் வேலைப்பார்க்கும் ஐந்துவீடுகளில் முதல் வீட்டை 7 மணிக்கு அடைகிறார். மட்ட மத்தியானம் ஆன பிறகும் அவர் சமைப்பது நிற்கவில்லை. ஒரு வீடு முடித்து மறுவீடு, அங்கிருந்து அடுத்த வீடு என்று 5 வீட்டுக்கான மதிய உணவை சமைத்து முடிக்கையில் மணி இரண்டாகிவிடுகிறது. மீண்டும் வீட்டை நோக்கிய 90 நிமிடப் பயணம். கணவர் மற்றும் மகள்களுக்கு ரைட் டின்னரை சமைத்து வைத்து விட்து, நாளின் பிற்பகுதியில் ஸ்டாண்ட் காமெடியனாக அவதாரம் எடுத்து, மும்பையின் காமெடி கிளப்களை அதிரவிடுகிறார்.
“ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் பலரும் பணி ஆட்களை பற்றிய கதைகளை பேசி கேட்டுள்ளேன். இப்போ, இது எங்க டெர்ன்...” என்று ஸ்மைலிங் பேஸுடன் கெத்து காட்டும் தீபிகாவின் ரகளை பேச்சுக்கென்று ஒரு கூட்டம் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது.
சல்வார் கமீசுடன் மேடையேறுபவர், தான் ரொம்ப ஸ்பெஷல் என்றும்... தான் வேலைப் பார்க்கும் வீட்டில் தனக்கென்று பிரத்யேக லிப்ட் உள்ளது. ஏன், தனக்கு தனியாக பிளேட், டம்பளர் கூட உண்டு என்று சொல்லி முடிக்க, அப்லாஸ்களை குவிக்கும் அரங்கத்தினர் சில நொடிகளுக்கு பின்னரே, டிரைவர்கள் மற்றும் பணியாட்களை ‘சுத்தம்’ என்ற போலிக்கூற்றால் தனித்து வைக்கும் இந்தியாவின் பரவலான பணக்காரர்களை பகடி செய்கிறார் என்பதை உணர்கின்றனர். அவரது காமெடி கன்டன்டே சமத்துவத்தை அறியாத வசதி படைத்தோரை கலாய்ப்பது தான்.
ஆனால், பணிப்பெண் டூ ஸ்டாண்ட் அப் காமெடியனாக எப்படி மாறினார்?
“சங்கீதா மேடம் (தீபிகா பணிபுரியும் வீட்டும்மாக்களில் ஒருவர்) ‘பாய் லாக்’ என்ற டாலன்ட் ஷோவை எங்களுக்காக நடத்தினார். அப்பார்மென்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எங்களுக்கு எந்தவொரு சந்தோஷமும் கிடைப்பதில்லை என்பதால் எங்களுக்காகவே இந்த நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது தான் இதெல்லாம் தொடங்கியது. சாதரணமா யாருமே இது போன்ற ஒரு நிகழ்த்தியை ஒருங்கிணைக்க மாட்டங்க இல்லையா? ஆனால், சங்கீதம் மேடம் செய்தார்கள்.
மற்ற பணியாட்கள் டான்ஸ், பாட்டு என செலக்ட் செய்யும் போது, நான் எங்கள் ‘மேடங்களை’ பற்றியே பேசினேன். அங்கு தான் நான் முதன் முதலில் எனக்குள்ளே பேசி சிரித்த ஜோக்குகளை மற்றவர்களிடம் பகிரந்து கொள்ள தொடங்கினேன்,” எனும் தீபிகாவின் அதிரடி பேச்சை கேட்ட மும்பை பத்திரிக்கையாளர் ஒருவர், அதிதி மிட்டலிடம் தீபிகாவை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இந்தியாவின் தி பெஸ்ட் ஸ்டாண்ட் அப் காமெடியன்களுள் ஒருவரான அதிதி மிட்டலுக்கு, தீபிகா பற்றி தெரிய வந்தவுடன் அவரை சந்திக்க தயாராகினார். சங்கீதா மேடம் வீட்டில் நடந்த சந்திப்பே, தீபகாவின் ஹுயூமர் சென்சை அறிய போதுமானதாக இருந்துள்ளது.
“அதிதி மேடம் புரபோஷனல் காமெடியனாக விருப்பமானு கேட்டாங்க. நான் அதுவரைக்கும் பெரிய மேடைகளில் ஏறி மைக் பிடித்தது இல்லை என்பதால் தயக்கமாக இருந்தது. ஆனால், அதிதி மேடம், அவங்க பெர்பார்ம் செய்யும் இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போய் சொல்லிக் கொடுத்தார்கள். இறுதியாக,
’அதிதி மேடமின் யூடியுப் ஷோவான ‘பேட் கேர்ல்ஸ்’சில் நானும் ஒரு காமெடியனாகினேன். இப்போது பொது நிகழ்ச்சிகள், தியேட்டர்கள், கிளப்கள் என வாரத்து மூன்று ஷோவில் பங்கேற்கிறேன்,”
எனும் தீபிகா ஃபுல் டைம் காமெடியனாக மாறிய பின்னும், கவரிங் நகை விற்கும் தொழிலை விடவில்லை. உடல்நலக் குறைவு காரணமாகத் தான் பணிப்பெண் வேலையையும் விட்டிருக்கிறார்.
“என் கணவர் ஆஸ்துமா பேஷன்ட். எனக்கு சக்கரை நோய் இருக்கு. குடும்பம் இன்னும் ஸ்டேடி ஆகவில்லை. என் மூத்த மகள் இப்போதான் வேலைக்கு போக ஆரம்பிச்சுருக்கா. நிகழ்ச்சிகளும் ஈவ்னிங் அல்லது நைட் தான் இருக்கும் என்பதால், இரவு 12:30 மணிக்கு வீட்டுக்குச் செல்வேன். அடுத்த அதிகாலை 4 மணிக்கு என் ரெகுலர் வாழ்க்கை தொடங்கி விடும்,” எனும் தீபிகா இப்போது அகில இந்திய பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பதில் பயங்கர பிஸி.
கிண்டல் + கலாய் + கருத்து
காமெடி ஷோக்களில் சீரியஸ் விஷயங்களை சிரிப்போடு சொல்வதில் தீபிகா கில்லாடி. தான் சந்தித்த சம்பவங்கள், கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து, பார்வையாளர்களை சிரிக்க வைத்தாலும் தீபிகாவின் ஒவ்வொரு வரி பேச்சும் சர்காசம் நிறைந்தது. “சங்கீதா மேடம் போன்றவர்கள் எங்களுக்கு நல்லதே செய்கின்றனர். ஆனால்,
”நான் வேலைக்கு செல்லும் இடத்தில் தரையில் தான் உட்காரணும், தனி டம்பளர், தனி தட்டு என பிரித்து வைத்திருப்பார்கள். அவர்களுடைய பாத்திரங்களையெல்லாம் மறைத்து வைத்து கொள்ளட்டும். ஆனால், என் கையால் செய்த சப்பாத்தியை தானே சாப்பிடுகிறீர்கள்? உடல்வலியில் மசாஜ் தேவைப்படும் போதும் என் கையால் தானே செய்கிறேன்” என்கிறார்.
“சிறு வயதில் ஸ்பெஷல் லட்சியம் என்றெல்லாம் இல்லை. ஆனால், இப்போது வாழ்க்கை மாறிவிட்டது. ஒரு சிறந்த காமெடியன் என்பதை தாண்டி எண்டெர்டெயினராக வேண்டும். எனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள எண்ணுகிறேன்,” எனும் அவர் ஆல்ரெடி, ஸ்டார் பிளசில் ஒளிப்பரப்பாகவுள்ள ‘இந்தியா’ஸ் காட் டெலன்ட்’-ன் லேட்டஸ்ட் சீசனுக்கான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தகவல் உதவி : theguardian.com மற்றும் thebetterindia.com