கோழியும் கறுப்பு, கறியும் கறுப்பு: கல்லா கட்டும் ‘கடக்நாத்’ கோழி வளர்ப்பு தொழில்!
எம்புட்டு அங்காளி, பங்காளியாய் பழகினாலும், சோறுனு வந்துவிட்டால் முறைப்படி கவனிக்காவிட்டால் சண்டை, சச்சரவு, தான். அந்த அளவுக்கு பவர் புல்லானது சோறு.
அப்படித்தான், ஒரு கோழிக்காக இரு மாநிலங்கள் கட்டி உருண்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ‘கடக்நாத்’ கோழிகள் எங்களுக்கே சொந்தம் என்று 'புவிசார் குறியீடு' கேட்டு மனு அளிக்க, மத்திய பிரதேச மாநிலமோ ‘செல்லாது... செல்லாது’ கோழி எங்கூருக்கே சொந்தம் என்று கூறியதுடன், கடக்நாத் கோழிகளின் விற்பனைக்காக ’MP kadaknath’ என்ற செயலியையும் வெளியிட்டது. இறுதியாய், மத்திய பிரதேசத்துக்கே கடக்நாத் கோழிக்கான புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு மாநிலங்கள் அடித்துக் கொள்ளும் அளவுக்கு கடக்நாத் கோழியில் அப்படியின்ன ஸ்பெஷல் என்றால்... ஸ்பெஷல் தான்.
அது என்ன கடக்நாத் சிக்கன்?
மத்திய பிரதேசத்தின் நாட்டுக் கோழிகளான இக்கோழியை அம்மாநில மக்கள் ‘காளி மாசி’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். காளி மாசி என்றால் காளியின் தங்கை என்று பொருள்படும். நம்மூரில் கருங்கோழிகள் என்றும் அழைக்கப்படுகிறது.
நல்லா கரு, கருவெனயிருக்கும் கடக்நாத் கோழியின் இறக்கைகள் மட்டுமின்றி, அதன் இறைச்சி, எலும்பு, இரத்தம், என சகலமும் கறுப்பு தான். இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம்.
ஷாஜகான் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் 'கறுத்தக்கோழி மிளகுப் போட்டு வறுத்து வச்சிருக்கேன்' என்று நடிகை மீனா சொல்வதும் கடக்நாத்தை தான்.
இந்தக் கோழியைச் சாப்பிடுவதால், இதன் மெலனின்தன்மை காரணமாக நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது என்றும், ஆஸ்துமா மற்றும் கல்லீரல் பிரச்னைகளை போக்கவல்லது என்றும் சொல்லப்படுகிறது. இதன் மருத்துவ குணங்களுக்காகவே கடக்நாத் கோழிகளுக்கு சந்தையில் மவுசு ஜாஸ்தி.
தமிழகத்திலும் கருங்கோழி பண்ணைகள் வைத்து நடத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அவர்களில் ஒருவர் தான் தமிழ்ச்செல்வன். சென்னை - புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் வெண்ணாங்குபட்டு கிராமத்தில் கோழிப்பண்ணை அமைத்திருக்கிறார். கடக்நாத் மட்டுமின்றி அசில், சிறுவிடை, நிகோபாரி இனக் கோழிகளையும் மேய்ச்சல் முறையில் கடந்த 5 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.
“கால்நடை மற்றும் விவசாயத்தின் மீது பள்ளி வயதிலிருந்தே ஆர்வம் அதிகம். கோழிப் பண்ணை வைக்கத் திட்டமிட்டப் பின்னும், அதிகப்படியான முதலீடு போடுவதில் தயக்கமும், அச்சமும் இருந்ததது. 2001ம் ஆண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் பிராய்லர் கோழி பண்ணை அமைத்தேன். சொந்த முதலீட்டில் பண்ணை அமைத்துவிட்டால், கோழிக்குஞ்சும், தீவனமும் நிறுவனங்களே கொடுத்துவிடுவர். அதில் வளர்ப்புக் கூலி மட்டும் பண்ணையாளர்களுக்கு கிடைக்கும். ஆனால், அது பண்ணையாளர்களை நசுக்கும் நாசக்கார வேலை.
தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயச் சங்கத்தில் மாநில துணைத் தலைவராக பதவி வகித்து அதை எதிர்த்து தொடர் போராட்டங்களும், எதிர்ப்புக் குரலும் கொடுத்து வந்தேன். ஆனாலும், நிறுவனங்களிடமே மீண்டும் செல்ல வேண்டிய நிலை.
”அதனால், 35 லட்ச ரூபாய் நஷ்டத்தினையும் பாராமல் பிராய்லர் கோழி வளர்ப்பை கைவிட்டேன். 2013ம் ஆண்டு நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுப்பட்டேன்,” என்றார்.
நம் ஊரில் சந்தைக்காகவும், இறைச்சிக்காகவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ‘அசில்’ ரக கோழிக் குஞ்சுகள் நூறை முதலீட்டாகக் கொண்டு பிசினசை தொடக்கியுள்ளார். அப்போது தான் தனித்தன்மையடன் புதிததாக செய்யவேண்டும் என்று சிந்தித்தவருக்கு, கடக்நாத் கோழிகள் பற்றி தெரிய வந்துள்ளது. மருத்துவக் குணங்கள் மிகுதியாகவும், சந்தையில் அதிக வரவேற்புடன் கருங்கோழிகள் இருந்ததால், நண்பரின் உதவியுடன் மத்திய பிரதேசத்தில் இருந்து 250 கோழிக் குஞ்சுகள் வாங்கி வந்து வளர்ப்பைத் தொடங்கி உள்ளார்.
இன்று 300 கடக்நாத் கோழிகள், மற்றும் 200 சிறுவிடை, நிகோபாரி 200, 100 ஒரிஜினல் அசில் கோழிகளுடன் தொழிலை விரிவுப்படுத்தியதுடன் பதினைந்து பண்ணைகளின் ஆலோசராகவும் இருக்கிறார்.
கோழிக் குஞ்சுக்கான பல்புகளும், பராமரிப்பும்...
“முட்டை பொரிச்சு கோழிக்குஞ்சுகள் பிறந்த முதல் 20 நாளுக்கு செயற்கையா வெப்பம் கொடுக்கணும். தகரத்தை வட்ட வடிவில் அமைத்து 100 வாட்ஸ் பல்புகளைத் தொங்கவிட்டால் போதும். 100 குஞ்சுகளுக்கு 100 வாட்ஸ் பல்பு போதுமானதாக இருக்கும். அதிகமான எண்ணிக்கையில் கோழிக்குஞ்சுகள் இருப்பின், பல்புகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரவு நேரங்களில் கோழிக்குஞ்சுகள் மீது குளிர் காத்து தாக்காத அளவுக்கு மறைப்பு அமைக்கனும். 20 நாட்களுக்கு பின் குஞ்சுகளை கொட்டகைக்கு மாற்றிவிடலாம். நான்கு புறமும் 2 அடி உயரத்துக்குச் சுவர் எழுப்பி, அதுக்கு மேல வலையால அடைத்து கொட்டகை அமைக்க வேண்டும். தரைப்பகுதியில் நிலக்கடலை தோலைப் பரப்பிவிட்டால், மெத்தை போன்று இருக்கும். கோழிகளுக்கு நாட்டு மருந்து மட்டுமே கொடுக்கிறேன். மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி கோழிகளுக்குக் கொடுத்து வந்தால், ரத்தக் கழிச்சல் வராது. பஞ்சகவ்யா கரைசலைக் கொடுப்பதால் வயிற்றில் இருக்கிற கிருமிகள் அழிந்திடும். சின்ன வெங்காயத்தை விளக்கெண்ணெய் சேர்த்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
குஞ்சுகளுக்கு வைக்கிற தண்ணீர்ல வசம்பைக் கலந்துவிட்டாலும் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். குளிர்காலத்தில் தண்ணீர்ல அதிமதுரம் பொடியைக் கலந்து கொடுத்தால் சளிப் பிடிக்காது. இந்த நாட்டு வைத்தியத்தை தொடர்ச்சியாய் கொடுத்து வந்தாலே கோழிக்கு எந்தவொரு நோய்சீக்கும் வராது.
ஒரு கோழிகக்கு தீவனம் என்று எடுத்துக் கொண்டால் அருந்தீவனம் 40 சதவீதமும், பசுந்தீவனம் (அகத்துக்கீரை, முருங்கைக்கீரை, சிறுக்கீரை) 60 சதவீதமும் தேவைப்படும். ஒரு ‘சிறுவிடை’ நாட்டுக்கோழிக்கு 5 மாதத்துக்கு 3 கிலோ 400 கிராம் தீவனம் தேவைப்படும். இதில் அருந்தீவனம் மட்டும் எடுத்துக் கொண்டால் ஒன்றரை கிலோ, பசுந்தீவனம் 2கிலோ.
அருந்தீவனத்துக்கு 37.50 ரூ, பசுந்தீவனத்துக்காக 12.50ரூ என ஒரு கோழிக்குஞ்சு தாய்கோழி ஆவதற்கு தீவனச் செலவு 50 ரூபாய் ஆகும். ஒரு கோழிக் குஞ்சு 65ரூபாய்க்கு விலைக்கு வாங்கி வளர்த்தால், 65+ தீவனச்செலவு + இதர செலவு = 125ரூபாய். ஒரு கோழிக்கான செலவு 125ரூபாய் மட்டுமே. அதன் விற்பனை விலை 300ரூபாய்க்கு குறையாமல் விற்கலாம். ஒவ்வொரு இனத்துக்கும் ஏற்றவாறு முன்னப்பின்ன மாற்றங்கள் இருக்கும்,” என்கிறார்.
இப்படி நூறு கடக்நாத் கோழிக்குஞ்சுகளுடன் பண்ணை அமைப்பதில் உள்ள வரவு, செலவுகளை பகிரத் தொடங்கினார்.
கல்லாவை நிரப்பும் ‘கடக்நாத்’கோழி வளர்ப்பு
“கடக்நாத் கோழிக் குஞ்சுகள் 100 வாங்கி பண்ணையாளர் தொழில் தொடங்கினால், விற்பனைவாய்ப்புக்கு ஏற்றவாறு கடக்நாத் கோழிகள் பன்மடங்கு லாபம் தரும். நாட்டுக் கோழி வளர்ப்பில் முட்டை விற்பனை, குஞ்சுகள் விற்பனை, வளர்ந்தக் கோழி விற்பனை என்று மூன்று வகையில் வருமானம் ஈட்ட முடியும்.
முட்டை விற்பனை என்று எடுத்துக் கொண்டால் நூறு தாய்க்கோழிகளிடமிருந்து ஆண்டுக்கு தலா நூறு முட்டை என்ற கணக்கில் 10 ஆயிரம் முட்டைகள் கிடைக்கும். ஒரு கடக்நாத் முட்டையின் விலை 40 ரூபாய். பத்தாயிரம் முட்டைகளுக்கு 40 ரூபாய் வீதம் மொத்தம் ரூ 4 லட்சம் வருமானம் பார்க்கலாம்.
அதுவே குஞ்சு விற்பனை என்றால், பத்தாயிரம் முட்டைகளையும் குஞ்சுகளாக வளர்க்கையில் நூறு சதவீதமும் குஞ்சுகள் கிடைப்பதில்லை. 75 சதவீதம் என்று வைத்துக் கொண்டாலும் 7 ஆயிரத்து 500 கோழிக்குஞ்சுகள் கிடைக்கும். ஒரு கோழிக்குஞ்சு 60 ரூபாய்க்கு விற்பனைவயாகிறது. எனில் 7 ஆயித்து 500 கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ 4லட்சத்து 500 வருமானம் ஈட்டலாம்.
இறைச்சிக்காக கோழி வளர்க்கையில் 7 ஆயிரத்து 500 கோழிக் குஞ்சுகளையும் வளர்க்கையில் அதில் 10 சதவீதம் கழிந்து 750 கோழிகள் இல்லாமல் போனாலும் 6 ஆயிரத்து 750 தாய்க் கோழிகளை வளர்த்துவிடலாம். சராசரியாய் 6 ஆயிரம் கோழிகள் என்று வைத்து கொண்டாலும் ஒரு உயிர்க் கோழி 400ரூபாய், 6 ஆயிரம் கோழிக்கு ரூ 24 லட்சம் வருமானம் கிடைக்கும்.
”ஆனால், பண்ணையாளர்கள் அவர்களுக்கான கஸ்டமர்களை தேடிக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு 6 ஆயிரம் கோழிகளை விற்க வேண்டும் என்றால் மாதத்துக்கு 500 கோழிகளை விற்க வேண்டும். அப்படியானால், ஒரு பண்ணையாளர் மாதம் 500 கோழிகளை விற்பதற்கு 700 வாடிக்கையாளர்களையாவது கொண்டிருக்க வேண்டும். 700 கஸ்டமர்களை கையாளக் கூடிய திறமையானப் பண்ணையாளராக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்,” என்கிறார் அவர்.