கோடையில் பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்கள் - ஊட்டச்சத்து நிபுணர் தரும் டிப்ஸ்!
கோடை வெயில் என்றாலே மக்கள் பதைபதைக்கும் காலமாக மாறிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் வெப்பத் தாக்குதலுக்கு இரையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வெயிலில் இருந்து பிழைத்துக்கொள்ள பெரும்பாலானோர் தங்களின் உணவு வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருதிகாவிடம் நீர் ஆகாரங்கள் மற்றும் உணவு குறித்து கேள்விகள் கேட்டோம். இதோ அவர் தரும் கோடை டிப்ஸ்...
1. பொதுவாக வெயில் காலங்களின் உடல் எவ்விதமான பிரச்சனைகளை சந்திக்கும்?
வெயில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். அதிகமான நீர்போக்கினால் உடல் சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரனம், மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதைத் தடுக்க நீர் மற்றும் சரியான உணவுகள் அருந்துவது அவசியம்.
2. வெயில் காலத்தில் உடலின் நீர்நிலையைச் சீராக வைத்துக்கொள்ளவும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் என்னென்ன நீர் ஆகாரங்கள் பருகலாம்?
வெப்பத்தின் தாக்கம் எவ்வளவு இருந்தாலும் சரி, தினசரி பழக்கத்தில் முக்கியமான ஒன்று குடிநீர். நீர்ப்போக்கை சமாளிக்க நிறைய குடிநீர் குடிப்பது அவசியமான ஒன்று. எங்குச் சென்றாலும் குடிநீர் கையில் வைத்துக்கொள்வது அவசியம். எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோமோ உடல் நிலை அவ்வளவு சீறாக இருக்கும். ஏனெனில் ஒருவருக்கு அதிகமாக வியர்க்கும் வேலையில் அவருக்கு உடலில் இருந்து நீர் குறைவதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள எலெக்டரோலைட்ஸ், சோடியாம் மற்றும் பொடாசியம் அளவும் குறையக் கூடும். இதை தவிர்க்க இளநீர் பருகலாம். இளநீரில் அதிக அளவு பொடாசியம் உள்ளது. எலுமிச்சை ஜூஸ் அருந்துகையில் வைட்டமின் ஸி உடல் சத்துக்கு உதவும். இது மட்டுமின்றி புதினா, துளசி, பெர்ரி பழங்கள் கொண்டும் ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். இவற்றில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் பாதை நோய் (Urinary tract infection) கட்டுக்குள் கொண்டு வர இயலும். நீர்மோர் சுலபமாக தயாரிக்கலாம். நீர்மோரில் ப்ரோபயாடிக்ஸ் உள்ளதால் உடல்வெப்பநிலையை சமமாக வைத்துக்கொள்ளும்.
3. எந்த நீர் ஆகாரங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்?
பொதுவாகக் காபி மற்றும் டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காபி மற்றும் டீ உடல் வெப்பத்தை அதிகரிக்கும் குணங்கள் கொண்டவை எனவே வெப்ப சூட்டை தவிர்த்துக்கொள்ள டீ மற்றும் காபியை தவிர்ப்பது நல்லது. இதைத் தவிர கிரீன் டீ அருந்த வேண்டும். கிரீன் டீயில் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் உடல் நிலையைச் சீராக வைத்துக்கொள்ளும் அதோடு சருமத்தில் ஏற்படும் உபாதைகளைக் கட்டுக்குள் கொண்டுவரும். முக்கியமாக குளிர்பானங்கள், சோடா போன்றவற்றை வெயில் காலம் மட்டுமல்ல எந்தக் காலத்திலுமே அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது அதற்கு பதில் பழசாறு அருந்துவது நல்லது.
4. மேலே குறிப்பிட்ட நீர் ஆகாரங்களைப் போலவே உணவு வகைகளில் என்னென்ன அருந்தலாம் என்னென்ன அருந்தக் கூடாது?
வெயில் காலத்தில் உணவு வகைகளில் பெரிதாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரிசி, சப்பாத்தி போன்றவற்றை மாமுலாக சாப்பிடுவதுபோல் சாப்பிடலாம். உணவில் மோர் தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்சத்து அதிகம் உள்ள பழங்கள் காய்கள் அருந்தலாம். ஆனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில ராகி. ராகி உடல் வெப்பத்தை அதிகரிப்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் இறைச்சி, முழு பருப்பு வகைகள் மற்றும் எண்ணைப் பலகாரங்கள். இவை அனைத்தும் வெயில் காலத்தில் பலருக்கு அஜீரனத்தை தரும் இதனால் வயிற்றுப் போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் தவிர்ப்பது நல்லது.
சுட்டெரிக்கும் வெயிலில் உடலைச் சீராக வைத்துக்கொள்ள, ஒவ்வொருவரும் அதற்குத் தகுந்த உணவுமுறையில் கட்டுப்பாட்டை கொண்டு வருவது அவசியம்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரை:
கோடை வெயிலை சமாளிக்க ஆண்களுக்கான சில டிப்ஸ்!
வெப்ப அலை எச்சரிக்கை! சுட்டெறிக்கும் சூரியனை எதிர்கொள்வது எப்படி?