Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

சமூக தொழில்முனைவு நிறுவனங்களுக்கு நிதி திரட்ட உதவும் 5 வழிகள்

சமூக தொழில்முனைவு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது என்பது நுட்பமான திறன்கள் தேவைப்படும் முயற்சி. அதற்கான 5 முக்கிய வழிகள் இவை.

சமூக தொழில்முனைவு நிறுவனங்களுக்கு நிதி திரட்ட உதவும் 5 வழிகள்

Monday March 20, 2023 , 6 min Read

நிதி திரட்டுவது என்பது காகிதத்தில் எளிதாக இருந்தாலும், செயல்படுத்துவது என்பது கடினமானது. முதலீட்டாளர்கள் ஸ்டார்ட் அப்கள் பற்றி யோசிக்கும்போது லாபம் மற்றும் அதிக பலன் பற்றி யோசிக்கின்றனர். ஆனால், சமூக நோக்கிலான நிறுவனம் எனும்போது, அதற்கான களம் வேறுபடலாம்.

நீங்களும் லாபம் மற்றும் பலனை எதிர்பார்த்தாலும், மிகப் பெரிய அளவில் சமூக மாற்றத்தையும் உருவாக்க விரும்புகிறீர்கள். இதை வழக்கமான முதலீட்டாளர்களிடம் விளக்குவது கடினம் என்றாலும், இன்று சமூக தாக்கத்தின் மொழியை புரிந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் அதிகம் உள்ளனர்.

ஆனால், நீங்கள் நிதி திரட்ட முயற்சிப்பதற்கு முன், அடுத்த ஆறு மாதங்கள், ஓராண்டு, ஐந்து மற்றும் பத்தாண்டுகளில் அடைய விரும்புவது என்ன எனக் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களிடம் ஒரு ஐடியா இருக்கலாம், உற்பத்தியைக் கூட நீங்கள் துவக்கியிருக்கலாம். ஆனால், உங்கள் விரிவாக்க திட்டம் தேசிய அல்லது சர்வதேச அளவிலா? ஓரளவு வெற்றியை எட்டிய பிறகு கையகப்படுத்தலா?

இவை முதலீட்டாளர்களுக்கான பதில் அல்ல; உங்களுக்கான வளர்ச்சி திட்டத்தை தேர்வு செய்து அதற்கேற்ப முதலீட்டாளர்களை அணுகுவது. இது, சரியான நபர்களிடம் கோரிக்கை வைப்பது எனும் அடுத்த விஷயத்திற்கு கொண்டு வருகிறது. எண்ணிக்கையைப் புரிந்து கொள்வது மற்றும் பணம் மிகவும் முக்கியம். ஆனால் அதற்காக, எல்லோரிடமும் நிதி கோரிக்கை வைக்க வேண்டும் என்றில்லை. நிதி அளிப்பவருடனான உறவு பணம் சார்ந்தது மட்டும் அல்ல, உங்கள் வர்த்தகத்தை மாற்றி அமைக்கும் ஆற்றலையும் அவர்கள் கொண்டிருக்கலாம்.

social

சமூக தொழில்முனைவோர் என்ற வகையில், சமூக விழிப்புணர்வு கொண்ட முதலீட்டாளரை தேர்வு செய்வது அவசியம். அவர்கள் சமூக தாக்கத்தை முதன்மையாக கருதுபவர்களாக இருக்க வேண்டும். ஒருவர் அல்லது இரண்டு பேரை மட்டும் நம்பியிருக்க வேண்டாம். நிதி திரட்டுவது சிக்கலானது, எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காமல் போகலாம். அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றும் வகையில் ஒரு நேரத்தில் குறைந்தது இரண்டு நிதி ஆதாரங்களையாவது கொண்டிருக்க வேண்டும்.

திட்டம் ‘ஏ’வுக்காக, ‘பி’ மாற்றுத் திட்டம் வைத்திருங்கள். ‘சி’ மாற்றுத் திட்டம் ‘டி’ மாற்றுத் திட்டம் என வரிசையாக மாற்றுத் திட்டம் வைத்திருங்கள். அதோடு காசோலை கையெழுத்திடப்பட்டு பணம் உங்கள் கணக்கிற்கு வரும் வரை எதுவும் இறுதியில்லை என உணருங்கள்.

அடிப்படை விஷயங்களை பார்த்துவிட்டோம் இனி, சமூக தொழில்களுக்கான ஐந்து நிதி திரட்டும் வழிகளைப் பார்க்கலாம்.

1. இன்குபேட்டர்கள் (Incubators)

இன்குபேட்டர்கள் மற்றும் ஆக்சலேட்டர்கள் உங்கள் வர்த்தகம் வளர்வதற்கு உதவுவதை நோக்கமாக கொண்டவை. பெரும்பாலான இன்குபேட்டர்கள் ரூ.20 லட்சம் முதல் நிறுவனங்களுக்கு நிதி அளிக்கின்றன. இன்குபேட்டருடன் இணைந்து செயல்படுவது, வழிகாட்டல், வலைப்பின்னல் அணுகல், சட்ட உதவி, வர்த்தக அனுபவம் உள்ளிட்ட பலன்களை கொண்டுள்ளது. இன்குபேட்டர்கள் பொதுவாக தீவிரமான தர பரிசோதனைகளை கொண்டுள்ளன. இவற்றோடு இணைந்து செயல்படுவது உங்கள் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. இன்று இன்குபேடர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இவற்றுக்காக விண்ணப்பிப்பது போட்டி மிக்கதாக அமையலாம்.

ஒவ்வொரு இன்குபேட்டரும் மாறுபட்ட இலக்குகள், நிறுவன நிலை தேர்வுகள், சேவைகளை கொண்டிருக்கலாம். எனவே, பொருத்தமான இன்குபேட்டரை தேர்வு செய்து விண்ணப்பிப்பது அவசியம். இதன் மூலம் அவர்கள் அளிக்கும் சேவைகள் உங்கள் தேவைக்கு ஏற்ப இருப்பதையும், அவற்றிடம் இருந்து சிறந்த பலனை பெறுவதையும் உறுதி செய்து கொள்ளலாம். ஒரு சில இன்குபேட்டர்கள் ஓராண்டு நீளமான விண்ணப்ப செயல்முறை கொண்டிருக்கலம். இன்னும் சில நெருக்கமான குழு அணுகுமுறை கொண்டிருக்கலாம். சரியான இன்குபேட்டரை தேர்வு செய்ததும், அவர்கள் விண்ணப்ப கெடுவை கவனிக்கவும்.

சமூக தொழில்முனைவோராக, தாக்கத்தின் தன்மைக்கேற்ப பலனை எதிர்பார்க்கும் இன்குபேட்டர்களை நாடுவது நல்லது. உதாரணத்திற்கு, வில்க்ரோ இன்னவேஷன்ஸ் பவுண்டேஷன் இன்குபேட்டர் சுகாதாரம், கல்வி மற்றும் வேளாண் துறையில் ஆரம்ப கட்ட நிறுவனங்களை கண்டறிந்து நிதி உதவி செய்கிறது. CIIE (எரிசக்தி, சுகாதாரம், வேளாண்மை), IIM அகமதாபாத் இன்குபேட்டர், UnLtd India இன்குபேட்டர் ( பல துறைகள்) மற்றும் தேஷ்பாண்டே பவுண்டேஷன் ஆகியவை சமூக தாக்கம் ஆர்வம் கொண்ட இன்குபேட்டர் நிறுவனங்கள்.

2. வர்த்தக நிறுவனங்கள் (Corporates)

கம்பெனிகள் சட்ட விதிகள் படி, வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நிகர லாபத்தில் 2 சதவீதத்தை சமூகப் பொறுப்புணர்வு செயல்பாடுகளுக்காக செலவிட வேண்டும். ஆனால், சமூக தொழில்முனைவு நிறுவனங்கள் லாப நோக்கிலானவை என்பதால், அவற்றால் நேரடியாக முதலீடு செய்ய முடியாது. எனினும், அரசு அங்கீகரித்த தொழில்நுட்ப இன்குபேட்டர் (டிபிஐ) மூலம் உதவலாம். இந்தியாவில் இத்தகைய டிபிஎம்கள் 130 உள்ளன. வலைப்பின்னல் அணுகல், மற்றும் இதர நிதி வசதிகள் இன்குபேட்டரில் இருந்து கிடைக்கின்றன.

வர்த்தக நிறுவன நிதி உதவி நம்பகத்தன்மையை வலுவாக்கும். பெரிய நிறுவனத்தின் ஆதரவு உங்கள் நிறுவனத்தின் பிராண்டை வலுப்படுத்துவதோடு, சரியான தொடர்புகளையும் அளிக்கும். எனினும் சமூக தொழில்முனைவு நிறுவனங்கள் மிகவும் புதியவை என்பதால் வர்த்தக நிறுவனங்களின் நிதி உதவி குறைவாகவே உள்ளது. 2016-17ல் சி.எஸ்.ஆர் நிதியில் ஒரு சதவீதம் மட்டும் ரூ.20 கோடி அளவில் டிபிஐ வாயிலாக சமூக நிறுவனங்களுக்கு கிடைத்தன.

சரியான வர்த்தக நிறுவனத்தை நாடுவது நிதி உதவி பெற முக்கியம். நிறுவனத்தின் நோக்கம் மற்றும் துறைக்கு ஏற்ற நிறுவனத்தை அணுக வேண்டும். வர்த்தக நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கும்போது, சமூக தொழில்முனைவு நிதி என்பது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சிஎஸ்ஆர் செயல்பாடாக அமையலாம் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த நிதியை பெற விடாமுயற்சியில் ஈடுபடுவது அவசியம்.

2015-ல் நடத்தப்பட்ட ரெஸ்பான்சிபில் பியூச்சர் சார்பிலான ஆய்வின் படி, 48 சதவீத வர்த்தக நிறுவனங்கள் சமூக நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன அல்லது முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு, Mphasis 2017-ல் வில்க்ரோ இன்குபேட்டர் நிறுவனமான ஸ்கில்டிரைனில் நிதி உதவி செய்தது. அதேபோல, CIIE-வில் இன்குபேட் செய்யப்பட்ட போதி ஹெல்த் சிஸ்டம்சில் டேக் சொல்யூஷன்ஸ் முதலீடு செய்தது. ஒன் எனர்ஜி நிறுவனம் வளர பஜாஜ் எலெக்ட்ரிக் நிதி உதவி செய்தது. வில்க்ரோ ஆதரவு பெற்ற பிளைபேர்ட் இன்னவேஷன்ஸ் நிறுவனத்திற்கு மகிந்திரா பைனான்ஸ் நிதி உதவி செய்தது.

3. நல்லெண்ண முதலீட்டாளர்கள் (Impact Investors)

தாக்கம் ஏற்படுத்துவதற்கான முதலீடு (இம்பேக்ட் இன்வெஸ்டிங்) தொடர்பான 2017 மெக்கின்சி அறிக்கை, 2025 வரை இந்தப் பிரிவில் 6 முதல் 8 பில்லியன் முதலீடு செய்யப்படலாம் என தெரிவிக்கிறது. வளர்ச்சி பாதை கொண்ட தாக்கம் மிக்க நிறுவனங்களுக்கு இந்த வகை முதலீடு சரியான வாய்ப்பாகும். சமபங்கு முதலீட்டின் இடர்கள் நன்கறியப்பட்டதே என்றாலும் சமூக நிறுவனங்களுக்கு இது மிகவும் தீவிரமானவை.

முதலீட்டாளர்காள் பொதுவாக தாக்கத்தை விட லாபத்தில் கவனம் செலுத்துவார்கள் என்பதால், உங்கள் மற்றும் நிறுவன இலக்கு ஒன்றாக இருப்பதும், எதிர்பார்ப்பு இணைந்திருப்பதும் அவசியம். சம்பங்கு முதலீட்டில், நீங்கள் நன்றாக உணரும் முதலீட்டாளரை நாடுவது அவசியம். ஏனெனில் அவர்கள் உங்கள் வர்த்தகத்தின் ஒரு பகுதியை நேரடியாக கட்டுப்படுத்துவார்கள். இயக்குனர் குழுவிலும் இடம்பெற்றிருக்கலாம். உங்கள் வர்த்தகத்தை குறிப்பிட்ட திசையில் கொண்டு செல்லும் ஆற்றலையும் பெற்றிருக்கலாம்.

எந்த முதலீட்டாளரிடம் இருந்தும் நிதி பெறுவது என்பது ஷார்க் டேங்கில் பங்கேற்பதற்கு குறைந்தது அல்ல. முதலீட்டை ஈர்க்கும் வகையில் வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ற வர்த்தக மாதிரியை உருவாக்கவும். இங்கு நன்றாக காட்சி விளக்கம் அளிக்கும் திறன் முக்கியம். தற்போது எண்ணற்ற நல்லெண்ண முதலீட்டாளர்கள் உள்ளனர். மெண்டரா வென்சர் அட்வைசர்ஸ், கல்வி, சுகாதாரம், வேளாண்மையில் கவனம் செலுத்துகிறது. லோக் கேபிடல், ஆவிஷ்கார் கேபிடல், லீப்பிராக் இன்வெஸ்ட்மண்ட்ஸ், ஆம்னிவோர் பாட்னர்ஸ் ஆகியவை உதாரணங்கள்.

4.போட்டிகள் (Competition)

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு வர்த்தக மாதிரி போட்டிகள் நடைபெறுகின்றன. ஐஎஸ்பி போன்ற கல்வி நிறுவனங்கள், இன்குபேட்டர்கள், முதலீட்டாளர்கள் இவற்றை நடத்துகின்றனர். போட்டியில் வெல்வது நிபந்தனை இல்லா நிதி பெற நல்ல வழி. மேலும், இத்தகைய பேட்டிகள் முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள், இதர பங்குதாரர்களை சந்திப்பதற்கான மேடையாகவும் திகழ்கின்றன. போட்டியில் வெல்வதை உங்கள் நிறுவனத்திற்கான ரெஸ்யூமை உருவாக்குவதாக கருதலாம்.

இந்தப் போட்டிகளை கண்டறிய பல வழிகள் உள்ளன. உங்களுக்கு ஏற்ற போட்டியை நாட வேண்டும். கல்லூரி விண்ணப்பம் போல உங்கள் விண்ணப்பம் தகுதியானதாக இருக்க வேண்டும். வில்க்ரோ ஐபிட்ச், கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மைக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. ரூ.1.5 கோடி உத்திரவாத நிதி மற்றும் ரூ.20 கோடி வரையான கூடுதல் நிதியையும் தருவதாக கூறுகிறது. சர்வதேச அளவில், DBS-NUS சமூக வென்சர் சாலஞ்ச், ஆசிய நிறுவனங்களுக்கான மேடையாக அறியபடுகிறது. இந்தியாவில் இருந்து, கமல் கிஸான், Haqdarshak Empowerment Solutions இதில் வென்றுள்ளன.

5. கூட்ட நிதி (Crowdfunding)

கூட்ட நிதி என்பது புதிய வழியாக அமைகிறது. இது மிகவும் சுவாரஸ்யமான வழியுமாகும். இதன் வாய்ப்புகள் அளப்பில்லாதவை. சிறிய அளவில் நிதி தேவைப்படும் நிறுவனங்களுக்கு மிகவும் ஏற்றது. தங்கள் சேவை அல்லது பொருளை சோதித்து பார்க்க விரும்பும் நிறுவனத்திற்கும் ஏற்றது. ஆனால் வெற்றி பெற்ற பிறகு, அதைத் தொடர்ந்து செயல்படும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான பேர் ஆதரவு அளித்தால், அந்த ஆர்டர்களை பூர்த்தி செய்யும் திறன் பெற்றிருகக் வேண்டும். இல்லை எனில் நன்மதிப்பு பாதிக்கப்படும்.

social

உங்கள் பார்வையாளர்கள் பற்றி தெரியாது என்பதால் கூட்ட நிதி பிரச்சாரத்தை மேற்கொள்வது கடினமானது. வர்த்தக மாதிரி அல்லது தாக்கத்தில் கவனம் செலுத்துவதா எனும் குழப்பம் ஏற்படலாம். எனினும், உங்கள் பிராண்டுக்கு ஏற்ற விஷயத்தை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். சம்பங்கு, கடன் சார் மற்றும் நன்கொடை என பலவிதமான கூட்ட நிதி வழிகள் உள்ளன. கிக்ஸ்டிராட்டர், இண்டிகோகோ, கெட்டோ, மிலப் என பலவித மேடைகள் உள்ளன.

ஆக, முயற்சிக்குப் பிறகு நிதி கிடைத்தால் வாழ்த்துகள்.

ஆனால், இத்துடன் பயணம் முடிந்துவிடவில்லை. திரட்டிய நிதியை நிறுவனத்திற்காக பயன்படுத்த வேண்டும். தாக்கம் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடு தொடர்பாக நிதி அளித்தவர்களுக்கு, அறிக்கைகள்,செய்தி மடல், வீடியோ வாயிலாக தெரிவிக்கவும்.

முயற்சிகள் தோல்வி அடையும்போது, நிதி அளிப்பவர்களிடம் இருந்து கருத்து கேட்கவும். இவற்றைக் கொண்டு உங்கள் நிறுவனத்தை வளர்க்கலாம் மற்றும் அவர்களுக்கு தொடர்ந்து தகவல் அளிக்கவும்.

நிதி திரட்டுவது ஏற்ற இறக்கங்கள் கொண்ட கடினமான செயல்பாடு. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் ஆதரவை நாடவும். சிக்கலான பாதை என்றாலும் தொடர்ந்து முன்னேறவும்.

- சார்வி பதானி | தமிழில்: சைபர்சிம்மன்

(பொறுப்புத் துறப்பு: இதில் தெரிவிக்கப்படும் கருத்துகள் கட்டுரையாளருடையவை, யுவர்ஸ்டோரி பார்வையை பிரதிபலிப்பவை அல்ல.)


Edited by Induja Raghunathan