ஹமாரா சாஹாஸ்: பெண்களுக்காக பெண்களால் தொடங்கப்பட்ட முயற்சி
சமீபத்தில் 10 மாதங்களுக்கு முன்பு தமன்னா பாட்டி என்பவரால் ஹமாரா சாஹாஸ் தொடங்கப்பட்டது. பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் அமைப்பு. இது குடும்பத் தலைவிகள், உயர் கல்வித்தகுதி பெற்ற திறமையான பெண்களால் சமூகத்தில் வாய்ப்புகள் கிடைக்காத பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது.
“பெண்களான நாங்கள் மற்ற பெண்களின் தேவைகளையும் சவால்களையும், எல்லைகளையும் மற்றும் போராட்டங்களையும் புரிந்துகொள்கிறோம். இந்த நுண்ணறிவையும் கருத்துகளையும் எங்களுடைய முயற்சிகளில் இணைத்துக்கொள்வோம்” என்கிறார் ஒரு குழந்தைக்குத் தாயான தமன்னா,
“நான் ஒரு பயிற்சிபெற்ற பேஷன் டிசைனர். எனக்கு திருமணம் ஆனபோது, ஜோத்பூரில் உள்ள ரடநாடாவில் பக்கத்து வீடுகளில் பெண்கள் வசிப்பதைக் கவனித்தேன். அவர்கள் வாழ்க்கை படுமோசமாக இருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் பால்ய விவாகம் மற்றும் சிறுவயது குழந்தைப் பிறப்பால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்களில் சிலர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து நிறுத்தப்பட்டு, வீட்டு வேலைக்காரர்களாக முடக்கப்பட்டனர்” என்று நிலைமையைப் பகிர்ந்துகொள்கிறார் தமன்னா பாட்டி.
“இந்தப் பெண்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். வெளியே வண்ணமயமான உலகம் இருப்பதைக் கண்டேன். அதை இந்தப் பெண்களும் கூட காணவேண்டும் என்று விரும்பினேன். மாற்றத்துக்கான என்னுடைய உணர்வுகளை அவர்கள் புரிந்துகொண்டதற்கு அவர்களுக்கு நன்றி கூறவேண்டும்” என்கிறார் அவர்.
இதற்கு முன்பு மற்றொரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய தமன்னா, தற்போது ராஜஸ்தானின் ஜோத்பூர் வட்டாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஹமாரா சாஹாஸ் அமைப்பு சில பணிகளை ஜோத்பூர் ரடநாடாவில் தொடங்கியது. அந்தப் பகுதியில் முக்கியமாக மண்பானை செய்பவர்கள் வறுமையிலும் துயரத்திலும் வாழ்ந்துவந்தார்கள். இங்குள்ள ஆண் சமூகம் பெரும்பாலும் குடிகாரர்கள் மற்றும் பெண்களையும் குழந்தைகளையும் பலாத்காரம் செய்கிறவர்களாக இருந்தார்கள். பெண்கள், தேவையான நம்பிக்கையோ விழிப்புணர்வோ இல்லாமல் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தமக்குள்ளே புதைத்துக்கொண்டார்கள்.
இங்குதான் ஹமாரா சஹாஸ் தனது பணியைத் தொடங்கி அங்குள்ள சூழ்நிலையில் மாற்றத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த இலட்சியம் தற்போது வெற்றிபெற்றிருக்கிறது. பயிற்சி பெற்ற பெண்களை அரசு சார்ந்த நிறுவனங்கள் வேலைக்கு எடுத்திருக்கின்றன. இந்த அமைப்பு தன்னுடைய தளத்தை ஜோத்பூரில் உள்ள ஜெலோரி கேட் பகுதிக்குச் சென்று வேலைகளைத் தொடங்கினார்கள்.
“மேரி கோமை நாங்கள் உதாரணமாக எடுத்துக்கொண்டோம்” என்று கூறும் தமன்னா, “தன் சூழ்நிலையை மீறியும் அவர் என்ன சொன்னாரோ அதை சாதித்தார். அது எங்களுக்கு ஊக்கமாக இருந்தது” என்கிறார்.
ஹமாரா சாஹாஸ் முயற்சி
ஹமாரா சாஹாஸ் அமைப்பு உருவாக்கியவர் தமன்னா பாட்டி, ஒரு பேஷன் டிசைனர். தன்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை இந்த முயற்சிக்கு விரிவுபடுத்தினார். “இந்தப் பெண்களின் துயரத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று வீட்டுக்கு வெளியே உள்ள வாழ்க்கையை அவர்கள் பார்க்கவேயில்லை. பொருளாதார சுதந்தரம் தேவையாக இருந்தபோதும் அவர்கள் பயிற்சி பெற்று எந்தப் பணிக்கும் செல்லவில்லை. இந்த முட்டாள்தனத்தை எல்லாம் முடிவுக்கு கொண்டுவந்தார்கள். ஏனெனில் அவர்கள் எங்கும் போகத் தேவையில்லை” என்கிறார் தமன்னா.
“ஹமாரா சாஹாஸில் நாங்கள் எம்ராய்டரி, தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வது பற்றிய குறுகிய கால தொழில் பயிற்சி தருகிறோம். அது அவர்களை வாழ்க்கையில் உயர்த்துகிறது. என்னுடைய பேஷன் டிசைன் படிப்பு நல்ல உதவியாக இருக்கிறது” என்கிறார்.
ஒவ்வொரு பெண்ணும் வறுமையில் இருந்து வெளியேறி பொருளாதார சுதந்தரம் பெற்று தனிக்காலில் நின்று, ஆரோக்கியமாகவும் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையுடன் வாழவேண்டும் என்பதுதான் ஹாமாரா சாஹாஸ் அமைப்பின் முக்கிய நோக்கம்.
சவால்கள்
பொருளாதார சுதந்தரம் மற்றும் பாதுகாப்புக்கான கூறுகளை அளித்தபோதிலும், ஹமாரா சாஹாஸ் ஆழமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பெண் சிசுக்கொலை, தீண்டாமை, கல்லாமை, வரதட்சணை மற்றும் குழந்தைத் திருமணம் ஆகியவற்றை அழிக்க அவர்கள் முயற்சி செய்தார்கள். “இளையவர்கள் மற்றும் முதியவர்கள் மாற்றத்திற்கான சிந்தனையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் மத்திய தர வயதினரைத்தான் சமாதானம் செய்யவேண்டியிருந்தது” என்று சுட்டிக்காட்டுகிறார் தமன்னா.
இந்த சவால்களை எல்லாம் பலவகைப்பட்ட அணுகுமுறைகளின் மூலம் ஹமாரா சாஹாஸ் எதிர்கொண்டது. “பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமான, சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பாலியல் சமத்துவமின்மையை முதலில் நாங்கள் எதிர்கொண்டோம். இதனை முதன்மையாக எங்களுடைய கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளின் மூலமாக இளையவர்களுக்கு கற்பித்தோம்” என்று கூறுகிறார் தமன்னா.
தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக ஹமாரா சாஹாஸ் குழந்தைகளுக்கு இலவச அடிப்படைக் கல்வியைக் கொடுத்தது. தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் புரோபஷனல்கள் மூலமாக பெண்களுக்கு தொழில் பயிற்சியும், தனித்திறனை வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. “இளைய மனங்களை மிகப் பரந்த அளவில் சிந்தி்ப்பவர்களாக மாற்ற கல்வி உதவியது. அவர்கள் சமமான வாய்ப்புகள் கொடுப்பதைப் பற்றியும், தற்சார்பு மற்றும் ஒவ்வொருவரையும் கண்ணியத்துடன் மரியாதையுடன் மதிக்கவேண்டும் என்பதையும் புரிந்துகொண்டார்கள்” என்று விளக்குகிறார் தமன்னா.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டங்களைத் தவிர்த்து, வறுமையில் உழன்ற பெண்களுக்கான தொழில் பயிற்சி அவர்களுக்கான தலைமைப் பண்பையும் தன்னம்பிக்கையையும் முடிவெடுக்கும் திறனையும் அளித்தது. “தையல் பயிற்சி, கைவினைப் பொருள் உருவாக்கம், எம்ப்ராய்டரி போன்ற பல பயிற்சிகள் பலருடைய வறுமையை ஒழித்துக்கட்டியது. அவர்கள் எல்லாரும் சுயசார்புள்ள தொழில் முனைவோர்களாக இருந்தனர். மிக முக்கியமாக அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான மனிதர்களாக இருந்தார்கள்” என்று சுட்டிக்காட்டுகிறார் தமன்னா.
“எங்களுக்கு அடுத்த பெரிய சவாலாக நிதி இருந்தது. அரசு நிறுவனங்கள் நிதி உதவி செய்வதில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தன. அதற்கான முயற்சியைத் தொடங்க குறைந்தபட்சம் ஓர் ஆண்டு தேவையாக இருந்தது. அது நீண்டகாலம் பிடித்தது. இப்போது நாங்கள் உள்ளூர் நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஆதரவை பெற்றுவிட்டோம். ஆனால் அரசு உதவி கிடையவே கிடையாது” என்கிறார் தமன்னா.
“ராஜஸ்தானில் பெண்களால் நடத்தப்படுகிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஹமாரா சாஹாஸ் மட்டுமே” என்று பெருமையுடன் கூறுகிறார் தமன்னா. “இந்த சமூகம் பெண்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் பார்க்கவேண்டும் என்பது என் ஆசை. அந்த அழகான பெண்கள் தன்னம்பிக்கையுடன் சுயசார்புள்ளவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் வலிமையானவர்களாக மாறும்போதுதான் அவர்கள் சுயசார்புடையவர்களாக மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள்” என்று நம்பிக்கையுடன் பேசிமுடிக்கிறார் தமன்னா பாட்டி.