‘கலையே சிறந்த புரட்சி’ - எழுத்தாளர், இயக்குநர் தமயந்தி
தன்னுடைய முதல் புனைவுப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் தமயந்தி பகிரும் சுவாரசியமான விஷயங்கள்!
படைப்புலகில் அடிக்கடி காணப்படுகிற எழுத்தாளர் தமயந்தி, தற்போது திரை இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். பெரிய திரை கலைஞராவதற்கு திறமை இருந்தும், மிரட்சியோடு விலகி நிற்கும் பெண்களுக்கு இப்படத்தின் வழியே முன்னுதாரணம் ஆகியிருக்கிறார் தமயந்தி. அவர் இயக்கி வெளிவரவிருக்கும் ‘தடயம்’ படம் தொடர்பான நேர்காணலின் தொகுப்பு இதோ:
உங்களைப் பற்றிய சின்ன அறிமுகம்?
திருநெல்வேலியில் பிறந்தேன். அப்பா காலேஜ் புரொஃபசர். அம்மா டீச்சர். சாதாரண மிடில் க்ளாஸ் குடும்பத்துல, மதக்கட்டுப்பாடுகள் இருக்குற ஒரு சின்ன சமூகத்துல வளர்ந்தேன். ஏழாவது படிக்கும் போதிலிருந்தே எழுதிட்டு இருக்கேன். பதினொண்ணாவது படிக்கும் போது என்னுடைய இரண்டு கதைகள் விகடன்ல வெளியாச்சு. கல்கி-ல ஒரு வாரம் விட்டு ஒரு வாரம்னு கிட்டத்தட்ட ஒரு வருஷம் என்னுடைய கதை வந்திருக்கு. நிறைய தடைகளை கடந்து வந்தாலும், எனக்கு வெளிய இருந்த சப்போர்ட்டால நிறைய செய்ய முடிஞ்சிருக்கு.
காட்சி ஊடகத்துல உங்களுக்கு இருக்க அனுபவம் பற்றி சொல்லுங்க?
திரைக்கதைகள் எழுதிருக்கேன். இயக்குனர் சமுத்திரகனியோட முதல் சீரியல் என்னுடைய கதை தான். நான் ஆவணப்படங்கள் டைரக்ட் பண்ணிருக்கேன். சிவகாசியோட தொழிலாளர்கள் பற்றி ‘கந்தக பூமி’னு ஒரு டாக்குமெண்டரி பண்ணிருக்கேன். சிவகாசி வெடி விபத்துல செத்து போறவங்க பாக்கியவான்கள்; விபத்துல காயப்பட்டு வாழறவங்க பத்தி நம்ம கிட்ட ஒரு தகவலும் இருக்காது. இதை வெச்சு ஒரு படம் பண்ணேன். அதுக்கு அரசாங்கத்திடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் இருந்துச்சு. பாலியல் வர்த்தகம் பற்றியும் ஒரு படம் பண்ணிருக்கேன்.
‘தடயம்’ சிறுகதைய சினிமாவா கொண்டு வரணும்னு நினைக்க என்ன காரணம்?
நான் அதை எழுதும் போது சினிமாக்குன்னு எழுதல. சொல்லப்போனா, தமிழ் சமூகத்துல இருக்கற கலாச்சார வரையறைகள் காரணமா அந்த கதை யாருக்கும் பிடிக்காதுனு நினைச்சேன். ஆனா, அதற்கு கிடைச்ச வரவேற்பு ஆச்சரியமா இருந்தது. கூடவே, பெரிய இயக்குநர்கள் இரண்டு பேர் என்கிட்ட இந்த கதைய படமாக்குறதுக்கு கேட்டாங்க. யோசிக்கும் போது, நம்மளே பண்ணா என்னன்னு தோணுச்சு. அப்படி உருவானது தான் ‘தடயம்’.
எந்த கலை வடிவத்துக்குமே உடனடியான விளைவு சமூகத்துல இருக்காது. நீங்க ஒரு சமூகத்துல ஒவ்வொரு விதையா விதைச்சுட்டே வரீங்க, எங்கயோ ஒரு மழை பெய்யுறப்போ அது முளைச்சு ஒரு மரமா வளரும். கலை தான் புரட்சியின் சிறந்த வடிவம்.
‘தடயம்’ பெண்களோட தேர்வுகள் பற்றியது. பாரதி சொன்ன மாதிரி காதல் மூலமா தான் இந்த உலகத்துல சமத்துவத்தை கொண்டு வர முடியும். ஆனா, எந்த அளவுக்கு சமூகம் பெண்களுடைய தேர்வை மதிக்குதுங்குறது தான் கதை. இருபது வருஷங்களுக்கு பிறகு இரண்டு பேர் சந்திக்குறாங்க. அந்த ஒரு மீட்டிங் தான் அந்த படம். படம் ஒரு சீன் தான்.
சிறுகதைய திரைக்கதையாக்குனது எப்படி இருந்தது?
நான் மீரா கதிரவன், குட்டி ரேவதி, பரத் பாலா கூட திரைக்கதை பண்ணிருக்கேன். ஒரு கதையோட எழுத்து வடிவம் வேற, அதுவே காட்சி ஊடகத்துக்காக அதை எழுதும் போது அதோட வடிவம் வேற. நம்ம பக்கம் பக்கமா எழுதுறதை, காட்சி ஊடகத்துல ஒரே ஒரு வசனம் வழியா கடத்திடலாம். அதை மொதல்ல புரிஞ்சுக்கிட்டு திரைக்கதை உருவாச்சு. இது ஃபுல்லா ஒரூ மீட்டிங்க்ல நிறைய வசனம் இருக்குற மாதிரி இருக்கும்... அந்த டயலாக்கை குறைக்கணும் ஆனா அதோட தாக்கம் குறைஞ்சிடக் கூடாது. அப்புறம், ஒரே ரூம்ல ஒரே காட்சில ரெண்டு பேரும் பேசிட்டே இருக்கும் போது போரிங்கா ஆயிடக் கூடாது. அதொரு பெரிய சவாலா இருந்துச்சு.
உங்களுடைய குழுவைப் பற்றிச் சொல்லுங்கள்?
எழுத்து தனிப்பட்ட ஒரு நபரோட முயற்சி. ஆனா, சினிமாவுக்கு எல்லாருமே அவங்களோட பெஸ்ட்ட குடுக்கணும். கனி குஸ்ருதி, இந்த நூற்றாண்டோட சிறந்த நடிகர்னு கூட சொல்லலாம். அவங்களோட திறமைக்கான வாய்ப்புகளை நிறைய கொடுத்து, அவங்களோட பங்களிப்பை நம்ம எடுத்துக்கணும். கூத்துப்பட்டறையில இருந்து கணபதி முருகேசன். ஓரங்க நாடகங்கள் நிறைய பண்ணிருக்கார் கணபதி. இப்படியான வலிமை எனக்கு இருந்தது. எல்லாருமே ஒரு ஈடுபாட்டோட வேலை செய்ற போது அது ஆன் - ஸ்க்ரீன்ல பிரதிபலிக்கும் இல்லையா?
ஆவணப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்கிற ஆண்டனி தான் ‘தடயம்’ படத்திற்கு கேமரா. ‘யான்’ படத்துல வேலை செஞ்சிருக்கற ஏழுமலை என்னோட இணை-இயக்குநர். திருநெல்வேலி ஹலோ எஃப்.எம் - ல இருக்க ஜஸ்டின் தான் ம்யூசிக். அழகு குட்டி செல்லம், சாலை படங்கள்ல எல்லாம் வேலை செஞ்சிருக்க ப்ரவீன் பாஸ்கர் தான் எடிட்டர்.
படத் தயாரிப்பு செலவுகள்?
இதொரு சுயாதீன க்ரவுட்-ஃபண்டிங் படம். ஒரு க்ரியேட்டிவான நபருக்கு நிதி நிலைமை பற்றிய கவலை இருக்கக் கூடாது. க்ரியேட்டிவ் வேலைகளில மட்டுமே கவனம் செலுத்துற மாதிரியான சுதந்திரம் இருக்கணும். அப்படி ஒரு சுதந்திரம் எனக்குக் கிடைக்கல. நிஜமாகவே அதொரு பெரிய சவாலாகத் தான் இருந்துச்சு. அடுத்த நாள் இருபதுக்கும் மேற்பட்ட ஆளுங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ண வேண்டியதா இருக்கும், ஆனா ஏ.டி.ஏம் பேலன்ஸ் குறைவா இருக்கும்.
இதனால படைப்புல எதாவது சமரசங்கள் செஞ்சுக்க வேண்டி இருந்ததா?
நிச்சயமா இல்லை. ஆஃப்-ஸ்க்ரீன்ல எதாவது காம்ப்ரமைஸ் பண்ணிருந்தாலும், ஆன்ஸ்க்ரீன் எந்த காம்ப்ரமைஸுமே பண்ணிக்கல. இன்னைக்கு ஒரு ஹெலி-கேம் வேணும்னா, ஹெலி-கேம் வரும். எனக்கு தேவை உண்டாகுறப்பவே அதை நிறைவேத்துற மக்கள் என் கூட இருக்கறது தான் எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட்னு நான் நினைக்குறேன். அது எல்லார்க்கும் கிடைக்குமான்னு தெரியல.
தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் வேலைகளில் இருக்கும் ‘தடயம்’ திரைப்படம் விரைவில் அதற்கான இடத்தை கலை உலகில் நிலைநாட்டும்.