பிஞ்சுக் குழந்தைகளுக்கு பருத்திப் பஞ்சு ஆடைகள்: 'அம்பரம்’ தொடங்கிய வெப் டெவலப்பர்!
மென்மையின் மென்மையை உணர்த்தும் குழந்தைகளின் மெல்லுடலுக்கு தீங்கு விளைவிக்காத மென்மையான பருத்தி ஆடைகளை தயாரிக்கிறார் மதுரையைச் சேர்ந்த அருண் குமார்.
நாம் உடுத்தும் உடை நமக்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை பார்ப்பதைவிட கண்ணுக்கு பளீச் என்று இருக்கிறதா மற்றவர்களிடத்தில் நம்முடைய தகுதியை உயர்த்திக் காட்டுகிறதா என்றே பலரும் உடைகளை உடுத்துகின்றனர். மொட்டை வெயிலில் கோட், சூட் போட்டுக் கொண்டு கவுரவம் என நினைத்து உள்ளுக்குள் வெந்து தணிவார்களே சிலர் அது போலத் தான். ஆடை மோகம் அதிகரித்தன் உச்சம் பிறந்த குழந்தைக்கும் கூட அதன் உடலுக்கு ஏற்ற உடையா என்பதை கூட பார்க்காமல் கண்ணுக்கு லட்சணமான துணி என்பதால் பாலிஸ்டர், பனியன் கிளாத்களில் ஆடைகளை உடுத்தி அவைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துபவர்கள் ஏராளம்.
இந்திய டெக்ஸ்டைல் துறையில் குழந்தைகளுக்கான ஆடை வகைகள் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக குழந்தை பிறந்தது முதல் 3 வயது வரையிலான வளர்ச்சிக்குத் தேவையான ஆடைகள், பொருட்கள் என்று விதவிதமான விளம்பரங்களோடு இணையதள பக்கத்தில் வரிசைகட்டி நிற்கும் நிறுவனங்கள் ஏராளம். ஆனால் எந்த விளம்பரமும் இல்லை, கண்ணை பறிக்கும் டிசைன்கள் இல்லை, பல வெரைட்டிகள் இல்லை என்றாலும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய அளவில் குழந்தைகளுக்கான உடைகளை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கிய 'அம்பரம்' இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பிரபலமடைந்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் அம்பரம் மென்மையின் மென்மையை உணர்த்தும் பச்சிளம் குழந்தைகளுக்கு மென்மையான பருத்தி ஆடைகளை குறைந்த விலையில் பரிசளிக்க உகத்ததாக இருப்பதே.
'அம்பரம்' தொடங்கப்பட்டதே எதிர்பாராமல் நடந்த ஒரு நிகழ்வு காரணமாகத் தான் என்கிறார் அதன் நிறுவனர் அருண்குமார்.
“ஒருநாள் மதிய வேளையில் தலையணை வைத்து படுத்திருந்த போது, உள்ளே இருந்து சில ஆடைகள் வெளியே எட்டிப் பார்த்தன. அவை என்னவென்று தலையணையை பிரித்து பார்த்த போது அதில் நானும் என்னுடைய தங்கையும் சிறு வயதாக இருந்த போது உடுத்தி இருந்த ஆடைகள் இருந்தன. என்ன ஆச்சரியம் 27 ஆண்டுகளாகியும் அந்த துணியின் தன்மை மாறாமல் மிருதுவான பஞ்சு போலவே இருந்தது. அம்மாவே கையால் தைத்து எம்பிராய்டரி செய்து எங்களுக்கு போட்டுவிட்ட ஆடைகள் அவை.
அப்போது தான் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. இப்போது இது போன்ற பருத்தி ஆடைகள் சந்தைக்கு வருவதில்லையே, பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் என்ற பெயரில் கொடுக்கப்படுபவை அனைத்தும் பனியன் துணி அல்லது பாலிஸ்டர் துணி போன்றே உள்ளதே என்று எண்ணினேன். இதன் விளைவாகவே நானும் என்னுடைய தங்கை பொன்மணியும் சேர்ந்து குழந்தைகளுக்கான பருத்தி ஆடைகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கினோம் என்கிறார் அருண்.
மதுரையைச் சேர்ந்த அருண்குமார் இளநிலை கணிதம் முடித்துவிட்டு சென்னையில் வெப் டெவலப்பராக பணியாற்றி இருக்கிறார். இயற்கை ஆர்வலரான இவர் பல ஊர்களுக்கு பயணித்து இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைக்கான பல பணிகளை தன்னார்வ அமைப்புகளுடன் செய்துள்ளார். உணவு, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் இயற்கை முறைக்கு நாம் திரும்பி வருகிறோம் பிறந்த குழந்தைகளுக்காக இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைக்காக எதுவும் செய்யவில்லையே என்று யோசித்து சொந்த ஊருக்கே திரும்பி ‘அம்பரம்’க்கான விதையை போட்டுள்ளார்.
என்னுடைய தங்கை பொன்மணி பேஷன் டிசைனர் என்பதால் பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான இருபாலர் குழந்தைகள் அணியக்கூடிய ஆடைகளுக்கான டிசைனை வடிவமைத்துக் கொடுத்தார். டிசம்பர் 2016ல் வீட்டில் இருந்தபடியே பருத்தி ஆடைகளை வாங்கி தைத்து தெரிந்தவர்களுக்கு கொடுத்து வந்தோம்.
\"நாங்கள் வடிவமைக்கும் ஆடைகளின் சிறப்பே இவை பருத்தி துணி, இயற்கை சாயம் மற்றும் குழந்தைகளுக்கு உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத டிசைன்களோ, பட்டன், கொக்கி போன்றவையோ கிடையாது. நண்பர்களுக்கு பரிசளித்து அவர்கள் திருப்தியடைந்து அதன் பின்னர் ஒருவர் சொல்லி மற்றவர் கேட்க என்ற ரீதியிலேயே அம்பரம் துளிர்விடத் தொடங்கியது,\" என்கிறார் அருண் குமார்.
2017ம் ஆண்டு முதல் அம்பரம் ஆடைகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்தன. நாங்கள் பெரிய அளவில் எந்த விளம்பரமும் செய்யவில்லை முகநூல் மூலமும் நண்பர்கள் மூலமுமே வாடிக்கையாளர்கள் கிடைத்ததாகச் சொல்கிறார் அருண்குமார்.
எங்களின் ஆடைக்கு இத்தனை ஆதரவு கிடைத்ததற்கு முக்கியk காரணம் நம்பகத்தன்மை அதை மட்டும் எந்த நிலையிலும் நாங்கள் சமரசம் செய்துகொள்ளவில்லை, நெசவாளர்களிடம் இருந்து நேரடியாக பருத்தி துணியை வாங்கி இயற்கையான பொருட்களில் இருந்து பெறப்படும் சாயங்களைக் கொண்டு மட்டுமே நிறம் ஏற்றுகிறோம்.
பருத்தி ஆடையை அணியும் குழந்தைக்கு எந்த உருத்தலும் இருக்கக் கூடாது, காற்றோட்டமாக இருக்க வேண்டும், சூரிய ஒளி குழந்தையின் தேகத்திற்கு அவசியம் அந்த ஒளி ஆடையின் சிறு சிறு துகள்கள் வழியே குழந்தைகளின் உடலில் ஊடுருவ வேண்டும் என்பதே அம்பரம் உருவானதன் தாத்பரியம்.
எனவே நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை 4 நிறங்கள் மட்டுமே நம்பகத்தன்மையோடு இருப்பதால் அவ்வாறு நிறமேற்றப்படும் துணிகளை ஆடைகளுக்கு பைப்பிங் செய்து அழகுபடுத்துகிறோம் என்கிறார் அருண்குமார்.
தொடக்கத்தில் என்னுடைய தங்கை பொன்மணி ஆடைகளை தைத்து கொடுத்து வந்தார், அவர் திருவண்ணாமலையில் பணியாற்றுவதால் அங்கிருந்து தைத்து அனுப்புவார் அதனை பின்னர் நான் சந்தைப்படுத்துவேன், இதில் அதிக செலவு ஏற்பட்டதோடு ஆடைகளை அதிக விலைக்கு விற்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. எனவே இந்த முறை கை கொடுக்காது என்று நானே தையல்கற்றுக் கொண்டு ஆடைகளை தைக்கத் தொடங்கினேன், மேலும் எங்கள் வீட்டைச் சுற்றி இருந்த சில தையல் தெரிந்த பெண்களும் ஆடைகளை தைக்க ஆர்வம் காட்டியதால் அவர்களுக்கு எங்கள் டிசைன்களுக்கு ஏற்ப பயிற்சி கொடுத்து ஆடைகளை வடிவமைக்க கற்றுக் கொடுத்தோம் என்கிறார் அருண்குமார்.
ஒரு பக்கம் பச்சிளம் குழந்தைகளுக்கான பருத்தி ஆடைகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அருண்குமார் மற்றொரு புறம் பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான சிறு உதவியாக வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.
அம்பரம் ஒரு நிறுவனமாக அதிக முதலீடு செய்து உடனடியாக தடாலென வளர்ந்து விடவில்லை, குழந்தையின் வளர்ச்சி போலவே தான் அம்பரத்தின் வளர்ச்சியும் இருந்தது என்கிறார் அருண்குமார்.
ஆடைகளை கணக்கில்லாமல் தயாரித்துவிட்டு அவற்றை சந்தைப்படுத்த வேண்டும் என்றெல்லாம் இலக்கு வைத்து செயல்படவில்லை, தைத்துவைத்திருக்கும் ஆடைகளை வாங்கிச் சென்ற பின்னர் தேவைக்கு ஏற்ப அடுத்தகட்டமாக ஆடைகளை உருவாக்கினோம்.
முதலில் ஆடைளை வடிவமைக்கத் தொடங்கினோம் பின்னர் கிப்ட் பாக்ஸ்கள் போல குழந்தைகள் கைகளில் கட்டும் வசம்பு காப்பு, மரச்சொப்பு, ஜப்லா, நிக்கர், நேப்பி, படுக்கை விரிப்பு உள்ளிட்டவை கொண்டு 0 முதல் 6 மாதம் மற்றும் 6 முதல் 12 மாதம் வரை என இரண்டு வகைகளாக தயாரிக்கத் தொடங்கினோம் என்கிறார் அருண்.
ஜப்லா, நிக்கர் அல்லது நேப்பி ரூ.300 மற்றும் ரூ. 400 விலையிலும் கிப்ட் பாக்ஸ்கள் ரூ. 800 முதல் ரூ.1,100 விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
எங்களிடம் பிறந்த குழந்தைகளுக்கான ஆடைகளை வாங்கி பயன்படுத்திய பெற்றோர்கள் அளித்த நல்ல வரவேற்பையடுத்து சில இயற்கை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தாங்களாகவே அணுகி அவர்களுடைய ஷோரூமில் வைப்பதற்காக ஆர்டர் கொடுத்தனர் என்கிறார் அருண். தற்போதைய அளவில் மதுரை, சென்னை, கோயம்புத்தூரில் இயற்கை அங்காடிகள் சிலவற்றில் அம்பரம் ஆடைகள் கிடைக்கின்றன. அம்பரத்தின் அடுத்த கட்ட முயற்சியாக 1 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான frockகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளோம் என்கிறார் அருண்குமார்.
லாபம் என்பதை எப்போதுமே நோக்கமாக வைத்திருக்கவில்லை திருப்திக்காக மட்டுமே இதனை செய்யத் தொடங்கினேன். சொல்லப்போனால் தொடக்கத்தில் இதன் மூலம் எந்த வருமானமும் கிடைக்கவில்லை, தைத்து கொடுத்து வாங்கும் பணத்திற்கும் போக்குவரத்திற்குமே சரியாக இருந்தது.
ஆனால் தற்போது வருமானம் தரும் தொழிலாக அம்பரம் மாறி இருக்கிறது மாதத்திற்கு சம்பளம் கொடுத்தல் மற்றும் இதர செலவுகள் போக ரூ.16 ஆயிரம் கிடைக்கிறது என்கிறார் அருண்குமார்.
எனக்கும் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் வேலைவாய்ப்பை அளிக்கிறது அம்பரம், இதே வகையிலான நீடித்த வளர்ச்சியில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார் அருண். அதிகபட்சமாக 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆடைகளை வடிவமைத்து பயனாளர்களை அதிகரிக்க வேண்டும் என்பதையே எதிர்கால இலக்காக வைத்து செயல்படுவதாகக் கூறுகிறார் அருண்குமார்.
முகநூல் பக்கம்: Ambaram
"