பஸ் பயண டிக்கெட் புக்கிங்கை எளிதாக்கும் 'டிக்கெட்கூஸ்.காம்'
நினைத்த நேரத்தில் நினைத்த இலக்குகளை நோக்கி பயணம் செய்ய தனிவொரு மனிதனுக்கு சிறகு ஒன்றும் தேவையில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் தொலைவில் இருக்கும் உறவுகளை காண்பதை போல் சொப்பனம் கண்டு துயில் கலைந்தாலும் அக்கனவை நினைவாக்கும் காலம் இது. நினைத்த பொழுது பயணிக்க, அதற்கு உடன் டிக்கெட் புக் செய்ய 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஆன்லைன் தனியார் பஸ் டிக்கெட் சேவையை வழங்குகிறது "டிக்கெட்கூஸ்.காம்".
வசதியானவர்களுக்கு உடனடி விமான பயணச் சீட்டை வழங்குவதற்க்கு அதிக அளவில் நிறுவனங்கள் இருந்தாலும், நடுத்தர மக்களின் தேவைக்காகத் தொடங்கப்பட்ட குறைந்த கட்டண ஆன்லைன் பஸ் டிக்கெட் சேவை மையமாக டிக்கெட்கூஸ்.காம் செயல்படுகிறது.
நாளை பயணம் செய்ய இன்றே காத்து கிடக்கும் பல பயணிகளுக்கிடையே, தானிருக்கும் இடத்தில் இருந்தே அருகாமையில் இருக்கும் பஸ்களை பற்றிய விவரங்களை "GPS" அமைப்பு முறை மூலமாக பின் தொடரக்கூடிய அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது டிக்கெட்கூஸ்.காம். அது மட்டும் அல்லாமல், விரும்பிய இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளக் கூடிய வசதியும் இதில் உள்ளது. அதாவது, பேருந்து என்றாலே ஜன்னல் சீட்டுகளுக்கு பயணிகளிடையே ஒரு போட்டி இருக்கும், அத்தகைய இருக்கைகளை ஏற்படுத்தி தேர்ந்தெடுக்கக் கூடிய வசதி மற்றும் பல தேவைகளோடு, சிக்கல் எதுவும் இன்றிச் சிறகாய் பயண வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது இந்த "மூவர்" கூட்டணியில் தொடங்கப்பட்ட டிக்கெட்கூஸ்.காம். இந்நிறுவனத்தின் நிறுவனர்களுடன் தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய உரையாடல் இதோ,
டிக்கெட்கூஸ்.கம் தொடக்கம்
மூன்று பொறியியல் நண்பர்கள், அருண் ஆதியப்பன், கார்த்தி ஈஸ்வரமூர்த்தி, மற்றும் வாசு ராமசாமி இவர்களின் ஒன்று பட்ட சிந்தனையால் 2007-ம் ஆண்டில் இனிதே தொடங்கப்பட்ட சேவைதான் 'டிக்கெட்கூஸ்.காம்' Ticketgoose.com
சிறுவயதிலிருந்தே நண்பர்களான கார்த்தியும் அருணும் ஈரோடை சேர்ந்தவர்கள். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி சில வருடங்கள் வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு பின்னர் அமெரிக்காவில் ஒரு நல்ல பணியில் இருந்து அனுபவம் பெற்றவர் அருண்.
பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் சில வருடம் நல்ல சம்பளத்திற்கு பணியாற்றி பின்னர் அமெரிக்காவில் ஒரு நல்ல வாய்ப்பு வர, கடல் கடந்து சில வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர் கார்த்தி ஈஸ்வரமூர்த்தி.
கார்த்தியின் நண்பரான வாசு ராமசாமியும் நல்ல அறிவாற்றலை பெற்றது மட்டுமின்றி முதலிலிருந்தே தொழில்முனைவராக வேண்டும் என ஆர்வமிக்கவர். இவர்கள் மூவரும் ஒன்று கூடி ஒருமனதுடன் குடும்ப உறவினர்கள் உறுதுணையுடன் தொடங்கியதே டிக்கெட்கூஸ்.காம்
எண்ணம் முதல் செயல்பாடு வரை
எந்த ஒரு வெற்றியும் பல தோல்விகளுக்குப் பின்னரே உதயமாகும் அது போல பல தோல்விகளுக்கு பின்னர் நான்காவதாக அருணுக்கு எழுந்த ஒரு சிந்தனை, கார்த்தி மற்றும் வாசுவின் உதவியால் வெற்றியை நோக்கி புறப்பட்டது.
"அப்போது பெங்களூருவில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பணியில் எனக்கு 15 நாட்கள் விடுமுறை கிடைத்தது. பெங்களூரில் இருந்து என் நண்பன் அருணை சந்திக்க ஈரோடு செல்ல விரும்பி, பேருந்து பயணச் சீட்டைப் பெறுவதற்கு அலைந்ததில் எனது ஒரு நாள் கழிந்து விட்டது. கடும் சிரமமும் வெறுப்பும் அடைந்தேன்" என்று கூறிய கார்த்தி இதைப்பற்றி தன் நண்பரிடம் ஈரோடு சென்றடைந்ததும் பகிர்ந்துள்ளார். அப்போது ஏற்பட்ட சிந்தனைத் துளி, விஷ்வரூபம் எடுத்து இன்று டிக்கெட் கூஸ்.காம் எனும் பெரிய மரமாக வளர்ந்துள்ளது.
தற்போதைய நிலை
ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் சுய முதலீட்டுடன், ஒரே ஒரு ஊழியருடன் தொடங்கிய டிக்கெட்கூஸ்.காம் நிறுவனம் இப்பொழுது 100 கோடி ரூபாய் வரை வருமானத்தை ஈட்டி இன்று நூற்றிற்கும் மேற்பட்ட உழியர்களைப் பணியில் அமர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது டிக்கெட்கூஸ் மொபைல் செயலி வடிவிலும் வாடிக்கையாளர் பயன்பாட்டிற்கு உள்ளது. டிக்கெட்கூஸ் செயலி ஆண்டிராய்டு மற்றும் ஆப் ஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதன்மூலம் சுலபமாக பஸ் டிக்கெட் புக் செய்து பயணிக்கலாம். செயலியை வைத்துள்ள ஒருவர் தமது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என எவருக்கும் பதிவு செய்து உடனடியாக அவர்களுக்கு டிக்கெட்டை அனுப்பி வைக்கமுடியும். அதேசமயம் டிக்கெட் வேண்டாமெனில் அதை கான்சல் செய்யும் வசதியும் இதில் உள்ளதாக கார்த்தி தெரிவிக்கிறார்.
பஸ் செல்லும் வழித்தடங்களில் உள்ள ஹைவே மோட்டல்கள் பற்றிய தகவல்களையும் க்ரெளட் சோர்சிங்க் முறையில் வெளியிடுகிறது. இது பயணிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
டிக்கெட்கூஸ்.காம் தளத்தில் சுமார் 40 ஆப்பரேட்டர்கள் தங்களுடைய பஸ் சேவை விவரங்களை வெளியிட இதில் பதிவு செய்துள்ளனர் என கூறிம் கார்த்தி, இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் உடனடியாக டிக்கெட் பதிவு செய்து பயணிக்க ஏதுவாக உள்ளது என்கிறார்.
அதுமட்டுமல்லாமல், சென்னையில் மட்டும் தொடங்கிய இச்சேவை பெங்களுர், ஹைதராபாத் போன்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளதாக உற்சாகமாகப் பகிர்ந்து கொண்ட கார்த்தி, சமீபத்தில் கடல் கடந்து தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு அங்கும் தங்களது சேவையை தொடங்கியுள்ளதாக கூறுகிறார்.
ஊக்கமும் உந்துதலும்
"என்னதான் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் என பலர் இருந்தாலும் என் பாட்டி என்றால் எனக்கு ஸ்பேஷல். நான் குழம்பி இருக்கும் தருணங்களில் உறுதுணையாக தெளிவான முடிவுகளை எடுத்துரைப்பதால் என்னவோ எனக்கு என் பாட்டி மீது அலாதி பிரியமும், மரியாதையும் உண்டு" என்கிறார் கார்த்தி.
“அதிபுத்திசாலி சந்தைக்கு போனா வெங்காயம் கூட வாங்க முடியாது” என்று அவர் சொல்லும் கருத்து என் நினைவில் இருந்து கொண்டே இருக்கும் என சிரித்துக் கொண்டு சொல்லும் கார்த்தி, இளைஞர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான் "ரொம்ப யோசிக்காதீர்கள்" என்று. அதாவது மனதில் ஒரு எண்ணம் தோன்றினால் வெற்றி தோல்விகளைப் பற்றி எந்தவித அச்சமும் கொள்ளாமல், மேலும் மேலும் யோசிக்காமல் நம்பிக்கையுடன் அதைத் தொடங்க வேண்டும். அதுவே ஒருவரின் வெற்றிப்படியாக அமையும்" என்று உறுதியாக கூறி உரையாடலை நிறைவு செய்கிறார் கார்த்தி.
இணையதள முகவரி: Ticketgoose, செயலி தரவிறக்க