சாக்லெட் அவதார 'கபாலி' ரஜினி!
சாக்லெட்களில் எத்தனை விதம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் இந்த சாக்லெட் கடந்த சில வருடங்களாக மனித உரு எடுத்து வருகின்றது. அதுபோல் சென்னையிலும் தற்போது சாக்லெட் புதிய அவதாரம் எடுத்துள்ளது.
சென்னை மயிலாபூர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள 'சூகா கபே' (zuka cafe) பேஸ்ட்ரி கடையில் மக்களின் கண்காட்சிக்கு பிரபலத்தின் சாக்லெட் சிலைகள் வைக்கப்டுவது வழக்கம். கடைக்கு வரும் பார்வையாளர்கள் பிரமித்து போகும் வகையிலும், ரசிகர்கள் பூரித்து போகும் வகையிலும், தமிழகத்தின் பிரபல நட்சத்திரத்தின் உருவை தற்போது அமைத்துள்ளது இந்த கடை. கடைக்குள் நுழையும் வாயிலில் பிரமாண்டமாக நிற்கிறார் கபாலி படத்தின் தோற்றம் கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாக்லெட் வடிவில்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சூகா கபே, பல்வேறு வடிவங்கள் கொண்ட சாக்லெட்டுகளை தயாரித்து வருகிறது. இக்கடையின் உரிமையாளர் ஸ்ரீநாத் பாலசந்திரன் ஃப்ரான்ஸ் நாட்டில் சாக்லெட் தயாரிப்பை பயின்று இந்தியா திரும்பியவர். இவர் தனது கடையின் மூன்று கிளைகளை இந்தியாவில் வைத்துள்ளார். 13 வருடங்களாக சாக்லெட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இவர், தனது கடையான சூகா பேஸ்ட்ரியில் நூற்றுக்கணக்கில் எடைக்கொண்ட சிலைகளை செதுக்கி பார்வையாளர்களுக்கு வைத்து வருகிறார்.
“13 வருடங்களுக்கு மேலாக நான் இந்த சாக்லெட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். மாமூலாக சாக்லெட் தயாரிப்பதை விட, வித விதமான முயற்சிகள் எடுப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதையே கடைக்கு வரும் மக்களும் விரும்புகின்றனர்” என்றார் ஸ்ரீநாத்.
தற்போது வைக்கப்பட்டுள்ள ரஜினியின் இந்த சிலை முழுக்க முழுக்க சாக்லெட்டால் தயாரிக்கப்பட்டது. 6 அடி உயரம் மற்றும் 600கிலோ எடையுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 600கிலோ கொண்ட சிலையை தயாரிக்க 850கிலோ சாக்லெட் தயாரிக்கப்பட்டது. இந்த சிலை செய்வதற்கு சுமார் 7லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறுகிறார் அக்கடையின் நிர்வாகத்துறையை சேர்ந்த விதூர். மேலும் ஸ்ரீநாத்தின் துணை கொண்டு சாக்லெட் தயாரிப்பாளர் ராஜேந்திரன் 168 மணி நேரம் செலவழித்து இந்த சிலையை செய்து முடித்தார். கொலுத்தும் வெயில் காலத்தில் சாக்லெட்சிலை உருகாமல் எவ்வாறு காக்கப்படுகின்றது என்று கேட்டப்போது, சிலைகள் அனைத்தும் 23 டிகிரி அளவில் பராமரிக்கப்படுவதாக கூறுகிறார் கடையின் உரிமையாளர் ஸ்ரீநாத். மேலும் இந்த சிலையை காண ஒரு நாளிற்கு 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்வதாகவும் இன்னும் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்காவது மக்களின் பார்வைக்கு இது வைக்கப்படும் என்றும் கூறினர்.
“இந்த சிலையை செய்வதற்கு முதல் காரணம் ரஜினிகாந்த் அவர்களின் 40 வருடம் சினிமா காலத்தை பெருமைப்படுத்தவும், அவர் தற்போது பெற்றுள்ள பத்மவிபூஷன் விருதிற்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அவரின் சிலையை நாங்கள் செதுக்கத் துவங்கினோம்” என்றார் ஸ்ரீநாத்.
இந்த சிலையை பார்க்க வரும் மக்களின் வயது தடையற்றது. சிறிய குழந்தைகள் முதல் முதியோர் வரை சிலையை காண சூகா கடைக்கு வருகை தருகின்றனர். அவ்வாறு சிலையை பார்க்க வந்த பொதுமக்கள் பலரின் மகிழ்ச்சி எல்லையற்றது. பார்வையாளர் அனைவரும் சிலை முன் நின்று செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
”பொதுவாக சாக்லெட் கடைக்களுக்கோ பேஸ்ட்ரி கடைகளுக்கோ நான் அடிக்கடி வருவதில்லை. அனால் இங்கு வைக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் சிலையை பார்க்கவே வந்தேன். 600கிலோ எடையோடு முழுக்க முழுக்க சாக்லெட் வாசம் வீசும் ரஜினியை பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது,”
என்கிறார் பார்வையாளர் கௌதம் சந்த்.
தற்போது இவர்கள் தயாரித்துள்ள ரஜினி சிலையை போலவே முன்னதாக பல்வேறு சிலைகளைத் தயாரித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுச்சேரியில் அமைந்துள்ள கடையின் கிளையில் மக்கள் வியக்கும் சாக்லெட் சிலைகள் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. அவைகளில் சில:
400 கிலோ எடைக்கொண்ட அப்துல் கலாம் அவர்களின் சிலை, மற்றும் மஹாத்மா காந்தியின் சிலை சுமார் 600கிலோ எடை கொண்டும், சுதந்திர தேவி சிலை (statue of liberty) சிலை 620 கிலோவிலும் செதுக்கப்பட்டதாம்.
இதுபோல் புதுச்சேரியில் மூன்று சிலைகளை தயாரித்த ஸ்ரீநாத் அடுத்த சிலை எந்த பிரபலத்தின் சிலையாக இருக்க வேண்டும் என்ற கண்க்கெடுப்பை எடுத்தார். அதில் 70% மக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிலையே தயாரிக்க வேண்டும் என்று தேர்வு செய்தனர். மக்கள் தேர்வை தொடர்ந்து ஸ்ரீநாத் சென்னையில் அமைந்துள்ள சூகா கடையில் இந்த சிலையை தயாரிக்க முடிவு செய்தார். இதுபோன்ற சிலைகள் தயாரிப்பதில் மட்டும் ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளாது பிற்காலத்தில் சாக்லெட் மியூசியம் ஒன்றை துவக்கி இதுபோன்ற சிலைகள் மற்றும் மியூசியத்தில் உள்ள அனைத்து பொருட்களும் சாக்லெட் கொண்டு தயாரிக்கப்போவதாக கூறினார்.
மேலும் இதுவரை அவர்கள் தயாரித்துள்ள சிலைகள் அனைத்தும் விற்பனைக்கு செலுத்தப்படவில்லை. முன்னதாக புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்படாததால் அவை அனைத்தும் உருக்கப்பட்டு சிறிய வணத்துப்பூச்சிகளாக செய்யப்பட்டு இவர்களின் கடையின் மூன்று கிளைகளின் மேல்சுவற்றில் ஒட்டப்பட்டு அவை அனைத்தும் 25 டிகிரி குளிர்ந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடையின் உள்ளே வரும் எவரும் சாக்லெட்டு வண்ணத்துப்பூச்சிகளுக்குக் கீழே அமர்ந்து சாக்லெட் வாசம் சூழ தங்கள் மனம் கவர்ந்த சாக்லெட் கேக்குகளை உண்டு மகிழலாம்.
இக்கடையை பற்றிய மேலும் விவரங்களுக்கு: Zuka
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்