தோல்வியை கணிக்கப் பழகு: கோவை சர்வர்கேக் நிறுவனர்கள் சொல்லும் பாடம்!

கோவையைச் சேர்ந்த வெப்-ஹோஸ்டிங் ஸ்டார்ட்-அப்பின் வளர்ச்சிக் கதை!

தோல்வியை கணிக்கப் பழகு: கோவை சர்வர்கேக் நிறுவனர்கள் சொல்லும் பாடம்!

Friday April 06, 2018,

4 min Read

“ஸ்டார்ட்-அப் பண்ணனும்னு நினைக்குறவங்களுக்கு ஒரு கட் ஃபீலிங் இருக்கணும், தைரியம் இருக்கணும்,” என ஆர்வமாக பேச ஆரம்பித்தார் ServerCake-ன் இணை நிறுவனர் அமித் குமார்.

அந்தமானில் பிறந்த அமித் குமார், வளர்ந்ததும் பள்ளிப்படிப்பை முடித்தது மன்னார்குடியில். பிசியோதெரபியில் இளநிலை பட்டமும், முதுநிலை பட்டமும் பெற்ற அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே, ஒரு பிசியோதெரபிஸ்டாக இயங்கத் தொடங்கிவிட்டார். 2008 ஆம் அண்டு மும்பையில் ஒரு க்ளினிக் அமைத்த பிறகு, சிங்கப்பூர் சென்று இரண்டு வருடங்கள் பிராக்டீஸ் செய்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டில், கோவை நகரின் கோவைபுதூரில் சொந்தமாக க்ளினிக் தொடங்கியிருக்கிறார். ஒரு பக்கம் பிசியோதெரபி மீது பெரும் விருப்பம் இருந்தாலும், மறுபக்கம் தகவல் தொழில்நுட்பத்தில் இயங்குவதை அவர் சிறு வயதில் இருந்தே தொடர்ந்து கொண்டிருந்திருக்கிறார்.

“எனக்கு ஆறு வயசு இருக்கும் போது, சம்மர் கிளாஸ் மாதிரி ஒரு ரெண்டு மாசம் கம்யூட்டர் கிளாஸ் அனுப்புனாங்க. அதுல ரொம்ப இண்டிரஸ்டிங்கா இருந்ததால தினமும் போகத் தொடங்குனேன். ஸ்கூல்ல படிக்குறப்போ ஸ்டிக்கர் வாங்கி விக்குறது மாதிரி சின்ன சின்ன பிசினஸ் எல்லாம் பண்ணிருக்கேன். லாபம், நஷ்டம் மாதிரியான வார்த்தைகளை எல்லாம் புரிஞ்சுக்குறதுக்கு முன்னாடியே எனக்குச் சொந்தமா தொழில் நடத்துறது மேல பெரிய ஆர்வம் இருந்திருக்கு,” என்கிறார்.
சர்வர்கேக் நிறுவனர்கள் அமித் குமார் மற்றும் நந்தினி

சர்வர்கேக் நிறுவனர்கள் அமித் குமார் மற்றும் நந்தினி


பத்தாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு ஒரு ஃப்ரிலான்சிங் கிராஃபிக் டிசைனராக தன் ஸ்டார்ட்-அப் பயணத்தை தொடங்கியிருக்கிறார் அமித்.

மீட்டர் வட்டி, ரன்னு வட்டினு எல்லாம் சொல்லுவாங்க இல்லையா? ஒரு பிசினஸ்மேனா இருக்கும் போது கடன் எல்லாம் இருக்கும்னு துணிஞ்சு தைரியமா வாங்கி தான் தொழில் தொடங்கினேன். போகப் போக எனக்கு வெப் ஹோஸ்டிங்ல ஆர்வம் அதிகமாச்சு. அதனால், கிராஃபிக் டிசைன்ல இருந்து ஹோஸ்டிங் மாடலுக்கு மாறினேன். 2013-ல் எனக்கு கல்யாணம் ஆச்சு. அதுவரைக்கும் நிறுவனத்திற்கு ஒரு முறையான பிசினஸ் மாடல் இல்லாம இருந்தது. 

“மனைவி நந்தினி உள்ள வந்தாங்க, இணை நிறுவனர் ஆனாங்க. அவங்களும் பிசினஸ்ல இன்வெஸ்ட் பண்ணாங்க. என்னோட உறவினர் விஜய ராஜன் இன்வெஸ்ட் பண்ணாரு. முன்னாடி ரெண்டு மூணு பேருல கம்பெனி நடந்துட்டு இருந்தாலும், நந்தினி வந்த பிறகு தான் ‘சர்வர்கேக்’ பிறந்தது. ஒரு முறையான பிசினஸ் மாடலோட, பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக பதிவு செய்தோம்,” என்றார்.

சர்வர்கேக் என்ற பெயர் உதித்த கதையை கேட்ட போது, “எந்த இடத்திலும் பயன்படுத்தப்படாத ஒரு புதுப் பெயரை தேடுனோம். எட்டு மாசம் பயங்கரமா மண்டைய உடைச்சுட்டு இருந்தோம். சில நாட்கள்ல தலவலியோட தான் உட்கார்ந்திருப்போம். அப்படி இருக்கும் போது ஒரு நாள் நந்தினி கேக் சாப்பிட்டுட்டு இருந்தாங்க. கேக்கும் சர்வர் மாதிரியே நிறைய அடுக்குகளோட தானே இருக்குனு விளையாட்டா பேச ஆரம்பிச்சது, அதுவே ஃபைனல் ஆயிடுச்சு,” என்றார்.

எம்.பி.ஏ பட்டதாரியான நந்தினி பல கார்ப்பரேட்களில் வேலை செய்த அனுபவத்தில் ‘சர்வர்கேக்’ நிறுவனத்தின் மேலாண்மையை பார்த்துக் கொள்ள, தொழில்நுட்பங்களில் இறங்கி முழு முனைப்போடு செயல்பட்டிருக்கிறார் அமித் குமார்.

image


ட்ரெயினி, ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ், எக்ஸிக்யூட்டிவ் மற்றும் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் ஆகிய படிநிலைகளில் தங்கள் வேலையை பிரித்துக் கொள்கிறார்கள் சர்வர்கேக் குழுவின் உறுப்பினர்கள். மத்திய கிழக்கு நாடுகளில் கூட வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் சர்வர்கேக் நிறுவனத்திற்கு அத்தனை மாநிலங்களிலும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

வெப்-ஹோஸ்டிங் என்ற பதத்தை எப்படி விளக்குவீர்கள் எனக் கேட்டதற்கு, 

“இன்னைக்கு எந்த பக்கம் திரும்புனாலும் டெக்னாலஜி தான். ஃபேஸ்புக், ஈமெயில், உங்களோட வெப்சைட், ஹோட்டல்ல பில் போடுறது, ஹாஸ்பிட்டல்ல ஒரு பேஷண்ட் பற்றி வைத்திருக்கிற தகவல் - இதெல்லாம் எங்க சேமிக்கப்படுதுன்னா ஒரு சர்வர்ல (Server). சர்வர் தான் அடித்தளம். அதில்லாம இன்னைக்கு எந்த தொழில்நுட்பமுமே கிடையாது என்பதை 2007 ஆம் ஆண்டுலயே உணர்ந்ததால வெப் ஹோஸ்டிங் தொடங்கினேன்,” என்றார்.

அமித்; வெப் ஹோஸ்டிங் செய்யத் தொடங்கிய போது டொமைன் என்றால் என்ன என்பதே பலருக்கும் புரியாமல் இருந்திருக்கிறது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி வெப் ஹோஸ்டிங் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியிருக்கிறது. இது சர்வர்கேக் நிறுவனத்திற்கு சாதகமாக அமைய, நிறுவனம் முன்னேற்றப் பாதையில் இருக்கிறது.

பிற வெப்-ஹோஸ்டிங் நிறுவனங்களில் இருந்து சர்வர்கேக் மாறுபடும் இடம் எதுவென்றால், 

“நாளைய தொழில்நுட்பத்தை இன்றைக்கே கொடுப்பது எங்களுடைய டிரெண்ட். போட்டி நிறுவனங்கள் எல்லாம் பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது, நாங்க ரொம்ப புதுசான டெக்னாலஜியை பயன்படுத்துவோம். எல்லாரும் hdd டிஸ்க் தான் கேள்விப்பட்டிருப்பீங்க, புதுசா ssd டிஸ்க் வந்திருக்கிறது ஒருவேளை உங்களுக்கு தெரியலாம். ஆனால், நாங்க ஆறேழு வருஷமா ssd டிஸ்க் தான் பயன்படுத்திட்டு இருக்கோம். ஒரு வெப்சைட்ட 97 மில்லிசெக்கண்ட்ல லோடு பண்ணி சாதனை பண்ணிருக்கோம்,” என்கிறார்.

இப்படி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சில நேரங்களில் சர்வர்கேக் நிறுவனத்திற்கு சவாலாகவும் மாறுகிறது.

“நீங்க யூஸ் பண்ற ஹார்ட் டிஸ்கோட விலை மூவாயிரத்து ஐநூறு ரூபாய். அதை விட நவீனமா இருக்க ssd டிஸ்க் 18 ஆயிரத்துல இருந்து 20 ஆயிரம் வரை இருக்கும். அதுவே NVME டிஸ்க் வாங்குனீங்கனா 45 ஆயிரத்துல இருந்து 60 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். இது சாதாரண கம்ப்யூட்டர்களுக்கு. சர்வர் கம்ப்யூட்டர்களா இருக்கும் போது நாலு மடங்கு அதிக விலையா இருக்கும். எங்களுடைய போட்டி நிறுவனங்கள் எல்லாம் பதினஞ்சாயிரம், இருபதாயிரம் செலவு பண்ணி கொடுக்குற சொல்யூஷனை நாங்க இரண்டு லட்சம் செலவு பண்ணி கொடுக்குறோம். அதனால், போட்டி நிறுவனங்களுக்கு சமமா எங்க சர்வீஸுக்கு விலை நிர்ணயிக்குறது தான் ரொம்ப பெரிய சவால்,” என்கிறார்.

இளம் தொழில் முனைவோருக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு சர்வர்கேக்கின் இணை நிறுவனர் நந்தினி, 

“உங்களோட பிசினஸ் எதுவாக இருந்தாலும், இரண்டு விஷயங்களை மனசுல வச்சுக்கணும் - தயாராகுதல் மற்றும் திட்டமிடல். ஒரு தொழில் முனைவோரா உங்களுடைய குழு உறுப்பினர்களை செலக்ட் பண்ணுறதுல நிறைய கவனம் செலுத்தணும். ஒருத்தர் உங்க டீம்ல வேண்டாம்னு நெனச்சா, அவரை வெச்சுட்டே அவருக்கு வேலை எதுவும் கொடுக்காம மெயிண்டெயின் பண்ணக் கூடாது. சமூக வலைதளங்களில உங்களோட பேர் இருக்க வேண்டியதும் கட்டாயம். முக்கியமானது, ஒரு ஃபெயிலியர் வரப் போகுதுன்னா அதை முன்னாடியே கணிக்குற திறமை இருக்கணும்,”

என படபடவென அவ்வளவு கருத்துக்களை சொல்கிறார். ஒன்றன் பின் ஒன்றாக தங்களுடைய கனவுகளை எல்லாம் யதார்த்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சர்வர்கேக் குழுவினரருக்கு வாழ்த்துக்கள்!

சர்வர்கேக்கின் சமூக வலைதளங்கள் : இணையதளம்ஃபேஸ்புக்,  கூகுள் பிளஸ்