'அமைதியின் மடியில்’ - க்ளோபல் உலக அமைதி புகைப்பட விருதை வென்ற 7 வயது பெங்களூரு சிறுமி!

தாயின் மடியே அமைதி என்ற பொருளுடன் புகைப்படம்!
104 CLAPS
0

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 7 வயது சிறுமி உலகளாவிய அமைதிக்கான புகைப்பட விருதை (இந்த ஆண்டின் குழந்தைகளுக்கான அமைதி புகைப்படம்) வென்றுள்ளார். விருது மற்றும் 1000 யூரோக்களுடன், ஆஸ்திரிய பாராளுமன்றத்தையும் பார்வையிடும் வாய்ப்பையும் பெற்றார் அந்த சிறுமி.

ஆத்யா அரவிந்த் என்னும் அந்த சிறுமி, பெங்களூரு பகுதியில் உள்ள ஹெப்பலில் உள்ள வித்யானிகடன் கல்வி நிறுவனத்தில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த விருதை வென்றதன் மூலம் குழந்தைகளுக்கான அமைதி புகைப்படத்தை வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சிறுமி ஆத்யா அவரது தாய் ரோஷினியை செல்போனில் புகைப்படம் எடுப்பது வழக்கமாம். அப்படி சிறுமியால் கிளிக் செய்யப்பட்ட பல புகைப்படங்களை அவரின் தந்தை பல்வேறு புகைப்படப் போட்டிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தமுறையும் அப்படி அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படம் விருதை வென்றுள்ளது.

தனது தாய் ரோஷ்னி அவரின் தாய் (ரோஷ்னியின் பாட்டி) மடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை இயற்கையாக படமெடுத்துள்ளார் ரோஷ்னி. ’அமைதியின் மடியில்’ என்று அந்த புகைப்படத்தை டேக்லைனுடன் அனுப்பிய சிறுமி விருதை வென்றார்.”

இந்த புகைப்படம் குழந்தைகள் பிரிவில் விருதை வெல்ல சிறுமி ஆத்யாவுக்கு இப்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

பரிசு பெறும் சிறுமி ஆத்யா அரவிந்த்

’உலகளாவிய அமைதி புகைப்பட விருது’ உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்களை அங்கீகரித்து ஊக்குவிக்கிறது. இதன் முக்கிய நோக்கம், இந்தப் புகைப்படங்கள் அமைதியான உலகத்திற்கான மனித முயற்சிகளைப் படம் பிடிப்பதாகும். இந்த விருது ஆஸ்திரிய பாராளுமன்றம் மற்றும் யுனெஸ்கோவுடன் இணைந்து வழங்கப்படுகிறது.

வியன்னாவில் உள்ள யுனெஸ்கோ அதிகாரிகளிடமிருந்து விருதைப் பெற்ற பிறகு பேசிய சிறுமி ஆத்யா,

“2021 ஆம் ஆண்டின் குழந்தைகள் அமைதிப் படத்தின் வெற்றியாளராக உங்கள் முன்னால் இங்கே நிற்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தப் போட்டிக்கான கருப்பொருள் 'அமைதி' என்று சொன்னபோது, ​​என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் அன்னை தான். இயற்கையாகவே அம்மாவால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படும் போதுதான் மனிதர்களாகிய நாம் தொடர்ந்து நிம்மதியாக வாழ முடியும்.

”சில நாட்களுக்கு முன், என் அம்மா தன் தாயின் மடியில் நிம்மதியாக தூங்குவதை நான் பார்த்தேன். அப்போதுதான் தாயின் மடியை இயற்கையின் மடியில் இணைக்கும் எண்ணம் ஏற்பட்டது. என்னைப் பொறுத்தவரை, இயற்கை நம் அனைவருக்கும் உலகளாவிய தாய். இப்படி தான் எனது புகைப்படம் வந்தது," என்றுள்ளார்.

பரிசு வென்ற புகைப்படம்

விருதுக்கு இந்த ஆண்டு ஜூரிக்கு தலைமை தாங்கிய புதுடெல்லியின் யுனெஸ்கோ இயக்குனர் எரிக் ஃபால்ட் என்பவர்,

”இளம் ஆத்யா, நிகழ்ச்சியின் நட்சத்திரம். அவர் மிகுந்த உற்சாகத்துடன் பரிசு பெற்றார், பார்வையாளர்கள் அதை விரும்பினர்! நான் அவளை மனதார வாழ்த்துகிறேன்," என்றுள்ளார்.

தகவல் உதவி: டைம்ஸ் நவ் | தொகுப்பு: மலையரச்ய்