கிராமப்புற பெண்களுக்கு தொழில் முனைவு மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிந்து அருண்!

  By Gajalakshmi Mahalingam
  June 26, 2018, Updated on : Thu Sep 05 2019 07:15:18 GMT+0000
  கிராமப்புற பெண்களுக்கு தொழில் முனைவு மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிந்து அருண்!
  சிறிய கிராமத்தில் தமிழ் வழியில் பயின்று லண்டனில் முதுநிலை பட்டம் பெற்று தனது தொழில்முனைவு கனவு மூலம் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறார் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சிந்து அருண். 
  • +0
   Clap Icon
  Share on
  close
  • +0
   Clap Icon
  Share on
  close
  Share on
  close

  கனவு காணும் வாழ்க்கை கலைந்து போகும் ஓடமாகாது, அந்தக் கனவு நிறைவேறும் என்ற அதீத நம்பிக்கை இருந்தால் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார் இளம் பெண் தொழில்முனைவரான சிந்து அருண்.

  தன்னுடைய தொழில்முனைவு தனக்கு மட்டும் பயன்தரும் வகையில் இருப்பதை விட சமூகத்தில் பொருளாதாரத்திற்கு கணவனை மட்டுமே நம்பி இருக்கும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை நிலை உயர அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து, நம்பிக்கைக்கான உரமிட்டிருக்கிறார். 30 வயதில் சிந்து செய்திருக்கும் இந்த செயலுக்கான விதை அவரது சின்ன வயதில் தோன்றியது.

  தனது சுவாரஸ்யமான வாழ்க்கைப் பயணத்தை சிந்து தமிழ் யுவர் ஸ்டோரியிடம் பகிர்ந்து கொண்டார். 

  image


  கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த சிந்துவின் தந்தையும், தாயும் ஆசிரியர்கள். தொடக்கக்கல்வியை சொந்த ஊரிலேயே படித்தவர் 6ம் வகுப்பிற்கு பின்னர் பெரியப்பா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். 

  “6ம் வகுப்பு முதல் கல்லூரி படித்து முடிக்கும் வரை பெரியப்பா வீட்டில் தங்கி படித்தேன், பள்ளிப்படிப்பு அனைத்தும் தமிழ் வழியிலேயே என்பதால் ஆங்கிலம் பேசத் தெரியாது. பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் பி.டெக் படித்த போது லண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க வேண்டும்,” என்று ஒரு கனவு இருந்தது என்கிறார் சிந்து.

  யுகேயில் உள்ள டாப் 1 கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை தோழியிடம் கூறினேன். இதற்காகவே நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு உறுதுணையாக இருந்தார் கல்லூரி தோழி மேகலா. 

  “ஆங்கிலத்தை முதலில் பேசும் போது தப்பும் தவறுமாகத் தான் பேசினேன், ஆனால் அதற்காக என் தோழி கேலி செய்யவில்லை, பொறுமையாக சிறு சிறு தவறுகளைக் கூட திருத்தி சரியாக ஆங்கிலம் பேச கற்றுக்கொடுத்தார்.”

  பிடெக் முடித்துவிட்டு எந்த நிறுவனத்திலும் பணியில் சேராமல் என்னுடைய கனவான லண்டனில் உயர்கல்வி படிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டேன். லண்டனில் இருந்த டாப் பல்கலைக்கழகம் உள்பட 4 பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்து காத்திருந்துள்ளார் சிந்து. பல்கலைக்கழகம் தொடங்கிய பின்னரும் சிந்துவிற்கு அழைப்பு வராத நிலையிலும் நம்பிக்கையோடு அவர் காத்திருந்ததற்கான பலன் கிடைத்தது. ஒரு வாரத்திற்குப் பிறகு தி வார்விக் பல்கலைக்கழகத்தில் இருந்து சிந்துவிற்கு அழைப்பு வந்தது.

  “கனவு மீது நாம் நம்பிக்கை வைத்திருந்தால் அது நிச்சயம் கைகூடும் என்பதை நான் முதன்முதலில் உணர்ந்த தருணம் அது. பள்ளிப்படிப்பு முதலே எனது விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்த பெற்றோர் வெளிநாட்டில் சென்று படிக்கவும் ஒப்பு கொண்டனர். ஆனால் அதற்கான போதிய பண வசதி அப்பா, அம்மாவிடம் இல்லை. கல்விக்கடன் பெறுவதற்கு பெரியப்பா எந்த தயக்கமுமின்றி தன்னுடைய சொத்துப் பத்திரங்களை வங்கியில் கொடுத்து என்னை படிக்க வைக்க வெளிநாட்டிற்கு அனுப்பினார்,” என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் சிந்து.

  2007ம் ஆண்டில் பர்மிங்ஹாமிற்கு சென்ற சிந்துவிற்கு வானிலை, சூழ்நிலை, மனிதர்கள், உணவுமுறை, மொழி, கலாச்சாரம் என அனைத்துமே புதிதாக இருந்தது. எனினும் தனது கனவு கைகூடியது என்பதால் இனியும் செலவுக்கு பெற்றோரை கஷ்டப்படுத்தக் கூடாது என்று பகுதி நேர வேலை தேடத் தொடங்கியுள்ளார். 

  முதலில் அவருக்கு கிடைத்தது ஹோட்டலில் பணிப்பெண் வேலை தான், அதுவும் எல்லா நாட்களிலும் பணி கிடையாது விடுதியில் கூட்டம் அதிகமாகவோ வேறு யாராவது விடுப்பு எடுத்தாலோ மட்டும் தான் பணி. பணிப்பெண் வேலை தானே என்று நான் அதனை குறைத்து மதிப்பிடவில்லை, எத்தனையோ பணக்கஷ்டங்களுக்கு மத்தியில் அப்பா, அம்மா மற்றும் பெரியப்பா வெளிநாடு அனுப்பியுள்ளனர் என்னுடைய செலவுகளுக்கு பணம் கேட்டு மேலும் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்து விடுதி பணிப்பெண் வேலையை செய்து வந்ததாகக் கூறுகிறார் சிந்து.

  image


  இந்நிலையில் தான் அங்கு அறிமுகமான தமிழ் நண்பர் மூலம் மற்றொரு விடுதியில் நிரந்தரப் பணி கிடைத்துள்ளது சிந்துவிற்கு. காலை 9 மணி முதல் 4.30 மணி வரை கல்லூரிப்படிப்பு, அதன் பிறகு 6 மணி முதல் இரவு 12 மணிக்கு வரை பணி பின்னர் வீடு திரும்பி ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் அடுத்த நாள் ஓட்டம் என்று ஒரு வருடம் சிந்துவிற்கு நகர்ந்துள்ளது. படிப்பு, பகுதி நேர வேலை என்று ஓய்வெடுக்கக் கூட சிறிது நேரமே கிடைத்தாலும் இனி பெற்றோருக்கு தன்னால் சுமை இருக்காது என்ற எண்ணம் தந்த மன நிறைவால் 365 நாட்கள் சக்கரம் போல சுழன்று ஓடிக்கொண்டிருந்துள்ளார் என்கிறார் சிந்து.

  எம்எஸ்சி படித்து முடித்த கையோடு அங்கேயே இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் குழுத்தலைவராக முழுநேரப் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒன்றில் உயர் பதவி மாதத்திற்கு ரூ.1.5 லட்சம் ஊதியம் என சிந்துவின் வாழ்க்கை ஒரு நிலைக்கு வந்தது. எனினும் அவருக்குள் ஒரு ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது, ஏனெனில் வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற கனவைப் போல தொழில்முனைவராக வேண்டும் என்ற கனவும் சிந்துவிற்கு இருந்தது. 

  “கைநிறைய சம்பளம், வெளிநாட்டில் பழகிவிட்ட வாழ்க்கை, வாரஇறுதியை சந்தோஷமாக கழிக்க நண்பர்கள் என எத்தனை இருந்தாலும் ஏதோ ஒரு குறை இருப்பதாகவே உணர்ந்தேன். தொழில்முனைவு பற்றிய அசரிரி மூளையில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இங்கு இருந்தால் எப்படி தொழில்முனைவராவது என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது,” என்று கூறுகிறார் சிந்து.

  அந்த சமயத்தில் தான் ரிச்சர்ட் ப்ரேன்சனின் சுயசரிதையை எதேச்சையாக படித்துள்ளார் சிந்து. ரிச்சர்ட் பெரிய பிசினஸ் பின்னணியைக் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவராக இல்லாவிட்டாலும் தன்னுடைய தொழில்முனைவு கனவு நிறைவேற கடினமாக உழைத்ததன் பலனாக 400 கம்பெனிகளை நிர்வகிக்கும் வெர்ஜின் குரூப் ஆஃப் கம்பெனிகளை உருவாக்கியவர். இவரின் சுயசரிதையை படித்து முடித்த போது சிந்துவின் மனதிலும் தொழில்முனைவராகும் கனவு உறுதிபெற்றது.

  “ரிச்சர்ட் ப்ரேன்சனின் சுயசரிதை என்னுடைய வாழ்வில் பல நிகழ்வுகளுக்கு ஒத்துபோனது. அந்த சமயத்தில் என்னுடைய சகோதரரும் இந்தியா வந்து தொழில் தொடங்கலாம் என்று என்னிடம் கூறினார். வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்கலாமா என்ற முடிவு எடுப்பது மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. வாழ்க்கை இப்போது போலவே 10 ஆண்டுகளுக்குப் பிறகும் இருக்கும் ஆனால் அப்போது என் கனவை அடையமுடியவில்லையே என்ற ஏக்கம் வந்துவிடுமே என்ற நினைப்பு தோன்றியதால் யோசிக்காமல் இந்தியா வந்துவிட்டேன்.” 

  image


  வெளிநாட்டில் வேலையை விட்டுவிட்டு தமிழகம் வந்து சுயதொழில் தொடங்கப் போவதாக சொன்ன போதும் பெற்றோர் மறுப்பு தெரிவிக்கவில்லை. 

  “பத்தாம் வகுப்பிற்கு பிறகு பெற்றோர் என்னுடைய முடிவுகளுக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. நான் எடுக்கும் முடிவால் வரும் கஷ்ட, நஷ்டங்களை அனுபவப்பூர்வமாக உணரும் பழக்கம் சிறுவயதில் இருந்தே வந்ததற்கு அதுவும் ஒரு காரணம். என்னுடைய அப்பா நான் எடுக்கும் முடிவு தவறாகவே இருந்தாலும் கடிந்து ஒரு வார்த்தை கூறயதில்லை,” என்று கூறுகிறார் சிந்து.

  பணம் சம்பாதிப்பதை விட லட்சியமும், கனவு முக்கியம் என்ற உறுதியோடு 2009ம் ஆண்டு இறுதியில் இந்தியா திரும்பியுள்ளார் சிந்து. 

  “2010ம் ஆண்டில் ஈ வர்த்தகம் பெரிய அளவில் அறிமுகம் ஆகாத காலகட்டத்தில் buy2all என்ற ஆன்லைன் விற்பனை தளம் மூலம் புத்தகம், செல்போன் விற்பனை செய்து வந்தோம். ரிமோட் பகுதிகளுக்கும் கூட வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு சேர்த்த போது அவர்கள் அளித்த பாராட்டுகள் மனநிறைவைத் தந்தது என்று பெருமிதம் கொள்கிறார் சிந்து.

  எல்லாம் நன்றாகத் தான் போய்க்கொண்டிருந்தது, ஆனால் ஈ வர்த்தகத்தில் போதுமான அனுபவம் இல்லாததால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் சிந்து. 

  “என்னுடைய சேமிப்பு, அண்ணனின் சேமிப்பு என சுமார் 25 லட்சம் ரூபாயை தொழிலில் முதலீடு செய்திருந்தோம். வர்த்தகம் நல்ல முறையில் தான் நடந்து கொண்டிருந்தது, ஆனால் முறையான வழிகாட்டுதல் இல்லாதது, நிதியை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அதிகரிக்காமல் விட்டது, தொழில்நுட்ப ரீதியிலான அனுபவமில்லாதது போன்ற காரணங்களால் அந்த தொழில் சறுக்கிவிட்டதால் அதை தொடரமுடியாத நிலை ஏற்பட்டதாக,” கூறுகிறார் சிந்து.

  தொழில்முனைவராக முதலில் வைத்த அடியிலேயே பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால் அதன் பிறகு பிசினஸ் சார்ந்த அறிவு மற்றும் அனுபவங்களை கற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளார் சிந்து. ஆனால் வயது 25 ஆகிவிட்டது திருமணம் செய்து கொண்டு எது வேண்டுமானாலும் செய் என்று சிந்துவின் அம்மா போட்ட கட்டளையை மீற முடியாமல், திருமணத்திற்கு ஒப்பு கொண்டவர், தனது வாழ்க்கைத் துணையை தான்தான் முடிவு செய்வேன் என்று அம்மாவிற்கு நிபந்தனை போட்டுள்ளார்.

  சிந்துவின் கனவுகளுக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர் கிடைத்தது போல அவருடைய வாழ்க்கைத் துணையாக அவரை நன்கு புரிந்து கொண்ட நபரே கிடைத்தார். “2012 மார்ச் 4ம் தேதி எனக்கு திருமணம் ஆனது, எனது கணவர் அருண் மேட்ரிமோனி இணையதளத்தில் என்னைப் பார்த்து முகநூலில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நாங்கள் வெளியில் பார்த்து பேசிப் பழகிய பின்னர் பிடித்துப் போனது, இருவரின் எண்ண ஓட்டமும் ஒத்து போனதால் திருமணம் பற்றி வீட்டில் தெரிவித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என்று தனது திருமண வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டார் சிந்து.

  கணவர் அருணுடன் சிந்து

  கணவர் அருணுடன் சிந்து


  திருமணம் முடிந்த ஓராண்டில் பெண் குழந்தைக்குத் தாயான சிந்து தொழில்முனைவுக்கு ஒன்றரை ஆண்டுகள் இடைவெளி விட்ட பின்னர் மீண்டும் தனது கனவை நோக்கி பயணிக்கத் தொடங்கினார். கணவர் அருணுடன் சேர்ந்து உடுமலைப்பேட்டையில் செயல்பட்டு வந்த உறவினரின் நிறுவனத்தை நிர்வகிக்கத் தொடங்கினார். 

  “2013ம் ஆண்டு இறுதியில் என்னுடைய மாமாவின் நிறுவனத்தை நாங்கள் கையில் எடுத்தோம். தேங்காயை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யும் அந்தத் தொழிலை வரைமுறைப்படுத்தினோம். ’எவர்கிரீன் என்டர்பிரைசஸ்’ என்று நிறுவனத்திற்கு பெயரிட்டு அதில் இருந்த தொழிலாளர்கள் முதல் தொழில்நுட்பம் வரை அனைத்திலும் மாற்றங்களை கொண்ட வந்தோம். இந்திய சந்தை மற்றும் வெளிநாடுகளுக்கு இந்நிறுவனம் மூலம் தேங்காயை விற்பனை செய்தோம். இதே போன்று கொப்பரைத் தேங்காயாக விற்பனை செய்வது என்று வியாபாரத்தை விஸ்திகரிப்பு செய்ததாகக் கூறுகிறார் சிந்து.

  15 பேருடன் தொடங்கிய இந்த தொழில் 4 ஆண்டுகளில் 100 பேர் என்ற அளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது எவர்கிரீன் என்டர்பிரைசர்ஸ் நிறுவனம். 

  “நிறுவனத்தின் வளர்ச்சி போல தொழிலாளர்களின் வாழ்விலும் பல மாற்றங்களை கொண்டு வர முயன்றோம், அவர்களுக்கு வங்கிக் கணக்குத் தொடங்கி அதில் சம்பளத்தை போடுவது, சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பது போன்றவற்றை அறிமுகம் செய்தோம். தினசரி அல்லது வார அடிப்படையில் பணமாக சம்பளத்தை வாங்கிப் பழகியவர்கள் முதலில் இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் அவர்களின் சம்பளத்தில் இருந்து சேமித்த பணத்தில் ஒருவர் கடன் இல்லாமல் சொந்த இரு சக்கர வாகனமும், மற்றொருவர் தன்னுடைய மனைவிக்கான மருத்துவ செலவிற்கும் பயன்படுத்தியதை பார்த்து பிறரும் மாறி வருவதாக தெரிவிக்கிறார் சிந்து.

  லண்டனில் படித்துவிட்டு இந்த கிராமத்தில் என்ன செய்யப்போகிறாய் என்று பலரும் கேலியாக பேசினாலும், கிராமத்தில் இருந்து யாரும் உயர் நிலைக்கு வரவில்லையா, நம்மிடம் இருக்கும் வளத்தை வைத்து நினைத்ததை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார் சிந்து. 

  தேங்காய், கொப்பரை விற்பனை இந்திய சந்தை மற்றும் ஏற்றுமதியில் நல்ல நிலையில் போய்க்கொண்டிருந்த போது அடுத்தது என்ன என்ற யோசித்த போது சிந்துவிற்கு கிடைத்த பதில் தான் அக்ரி ப்ரோ ஃபுட்ஸ் நிறுவனம். அக்ரி ப்ரோவின் இணை நிறுவனரான சிந்து ப்ரெஸ்ஸோ (http://www.agriprofoods.com/) என்ற புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளார். செக்கில் ஆட்டிய எண்ணெயை புத்துணர்ச்சி குறையாமல் விற்பனை செய்வதே ப்ரெஸ்ஸோ பிராண்டின் சிறப்பு.

  “செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் வீட்டில் சமைத்திருந்த உணவை சாப்பிட்ட போது அதன் சுவையும், இதனால் கிடைக்கும் ஆரோக்கியமும் பற்றி தெரிந்து கொண்டேன். சுத்திகரிக்கப்படாத அப்போதே அறைத்து எடுத்து பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயின் புத்துணர்சி மனதிற்கும், ஆரோக்கியத்திற்குமான டானிக் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்ததை பிறருக்கும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதே இந்த ப்ரஸ்ஸோ,” என்கிறார் சிந்து.

  2018ம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரஸ்ஸோ மூலம் செக்கு எண்ணெய்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் என்று ஆர்டர் கொடுத்த 7 நாளில் புத்துணர்ச்சியான, சத்துகள் குறையாத எண்ணெயை வீட்டிற்கே அனுப்பி வைக்கின்றனர். 

  “செக்கு எண்ணெய் பற்றி மக்களுக்கு தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு இருக்கும் மகத்துவத்தை வெளிநாட்டினரைப் போல நாம் உணர்வதில்லை. சூர்யகாந்தி எண்ணெயை பயன்படுத்துவதற்குப் பதிலாக தேங்காய், கடலை மற்றும் நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் அதன் மூலப்பொருட்களின் தேவை அதிகரித்து விவசாயமும் அதிகரிக்கும் என்பதே ப்ரெஸ்ஸோவின் தாரக மந்திரம் என்று சொல்கிறார் சிந்து.

  ப்ரெஸ்ஸோவில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்று விரும்பியதால் முற்றிலும் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுக்கு பொருளாதார ரீதியிலான உத்திரவாதம் அளிக்க திட்டமிட்டார் சிந்து. 

  பெரும்பாலான கிராமப்புற பெண்கள் பொருளாதார ரீதியில் கணவனையே நம்பி இருக்கின்றனர், சில சமயங்களில் கணவனின் அடி உதையையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். பெண்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து மாத சம்பளம் கொடுத்தால் இந்த நிலை மாறும் என்று நினைத்ததால் முழுக்க முழுக்க பெண்களையே பணியில் நியமித்து கொண்டிருக்கிறார் சிந்து.

  இது மட்டுமின்றி நன்கு படித்துவிட்டு உயர்பதவியில் இருந்த என்னுடைய தோழிகள் சிலர் திருமணம், குழந்தை என்று ஆனவுடன் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் தாங்கள் வீட்டில் இருந்த படியே ஏதேனும் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். எனவே இது போன்ற பெண்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நினைத்தேன்.

  இதற்காக முதலில் 50 பேரை அடையாளம் கண்டு அவர்கள் ப்ரெஸ்ஸோ ஆயிலை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பிரபலப்படுதினால் அவர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுக்க திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கியுள்ளார் சிந்து. இதே போன்று 3 ஆண்டுகளில் 10 லட்சம் தாய்மார்களை ப்ரெஸ்ஸோ எண்ணெய் சென்றடைய வேண்டும் என்ற இலக்கோடு ’ஷோ தி கேர்’ என்ற கேம்பெயினையும் தொடங்கியுள்ளார் சிந்து.

  image


  பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டியதில்லை, அதிலும் குறிப்பாக நான் வசிப்பது கிராமப்புறம் என்பதால் என் மகளுக்கான ரோல் மாடலாக நான் இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு மேலும் கடினமாக உழைப்பதாகக் கூறுகிறார் சிந்து. 

  தொழில்முனைவராக மட்டுமின்றி சமூக நலப்பணியிலும் அக்கறை கொண்ட சிந்து திருமூர்த்தி அணையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்காக தன்னார்வலர்கள் குழுவை ஒருங்கிணைத்து அதற்கான முன்னெடுப்பையும் செய்துள்ளார். ஒரு பெண் தான் விரும்பும் கனவை அடைவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தால் அதனால் என்னென்ன நன்மைகள் என்பதற்கான நிழல் சாட்சியாக திகழ்கிறார் சிந்து அருண்.