ஓவிய சங்கமம்: சென்னையில் வடகிழக்கு மாநில ஓவியர்கள் முகாம்!
சென்னை லலித்கலா அகாடெமியில் ஒரு வாரமாக வடகிழக்கு மாநில ஓவியர்கள் முகாம், எத்னிக் மைண்ட்ஸ்கேப். அம்மக்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களை பகிர்வதற்கான ஒரு வாய்ப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மரநிழல்களில் அமர்ந்தபடி அவர்கள் ஓவியங்களை தீட்டிக்கொண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி. நாம் சென்ற நேரத்தில் மின்தடை. அதனால் வெளிச்சம் இருந்த இடத்தில் எல்லாம் ஓவியர்களைப் பார்க்கமுடிந்தது. முதலில் கிடைத்தவர் ராஜசேகர். சற்று முன்பு முகாமில் பார்த்த ஓவியர்களின் முகங்களை வரைந்துகொண்டிருந்தார். ஓவிய கித்தானில் 24 முகங்களையும் தத்ரூபமாக கொண்டுவரும் முயற்சியின் ஆரம்பத்தில் இருந்தார். ஆனால் பேச்சில் சமூகம் பற்றிய பெருங்கவலை.
“அந்த கணத்தில் மனத்தை எது பாதி்க்கிறதோ அதையே ஓவியமாக படைக்கிறேன். சிரியாவில் தப்பிய அகதி சிறுவன், கடலோரம் பிணமாக ஒதுங்கிக்கிடந்த காட்சியை மறக்கமுடியவில்லை. குற்றவுணர்ச்சி அடைந்தேன். அதே சிறுவன் தோளில் புறாவுடன் முகம் காட்டாமல் துப்பாக்கிகளின் மத்தியில் நிற்பதுபோல வரைந்தேன். நாம் ஒவ்வொருவரும் வேறு வேறு முகங்களுடன் உலவுகிறோம். நமக்கு பல முகங்கள் தேவைப்படுகின்றன. அதனால்தான் மாஸ்க்குகள் வரைகிறேன்,”
என்று கூறும் ராஜசேகரின் ஓவியங்கள் கவனம் ஈர்க்கின்றன.
மிசோரோமைச் சேர்ந்த லால்குன்கிமா, முகத்தை மறைக்கும் தனது முடியை தலையை சிலுப்பி ஒதுக்கிவிடுகிறார். சாந்திநிகேதனில் எம்எப்ஏ படித்துக்கொண்டிருக்கும் மாணவர். அவரது ஓவியங்கள் ஆன்மிகம் பேசுகின்றன.
“ பார்வையாளர்களுக்கு எதையும் சொல்லவிரும்பவில்லை. அவர்களாக புரிந்துகொள்ளட்டும். கலையே ஆண்மீகம்தான். கடவுளின் இருப்பை நான் எங்கும் உணர்கிறேன். அதை என்னுடைய கலையின் வழியாக வெளிப்படுத்துகிறேன்,”
என்று வயதுக்கு மீறிப் பேசுகிறார் 27 வயதான லால்குன்கிமா.
சென்னை அவருக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. க்ளைமேட் ஹாட் என்கிறார். எல்லோருமே நட்பாகப் பழகுகிறார்கள். ஆனால் சிரிப்பாகப் பேசினால் சீரியஸாக இருக்கிறார்களே என்று கவலைப்படுகிறார்.
மணிப்பூரைச் சேர்ந்த ஒவியர் மைக்கேல் மீட்டெய். லாய்ஹரோபா என்ற முன்னோர்களை வழிபடும் சடங்குளின் கூறுகளை ஓவியங்களில் மீட்டெடுக்கும் கலைஞர். “எங்கள் இன மக்களின் வாழ்க்கை முறைகளைத்தான் நான் ஓவியங்களாக பதிவு செய்துவருகிறேன். திருவிழாக்கள், சடங்குகள், தொன்மங்கள் என மணிப்பூரிகளின் பாரம்பரியத்தை நிறைய எல்லோருக்கும் சொல்லவேண்டியிருக்கிறது. நவீனத்தால் பழைமையை பழங்குடியின மக்கள் இழந்துவருகிறார்கள். அவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் முயற்சியே என் படைப்புகள்” என்று ஆர்வமாகப் பேசும் மைக்கேல், சிறிய ஓவியங்களாக வரைந்துகொண்டிருந்தார்.
அஸாமின் சில்சார் மாவட்டத்தைச் சேர்ந்த பினாக் பனிநாத், ஒவியக் கலையில் முதுகலை படித்தவர். இவருக்கு திருவிழாக்கள் மீது அபரிமிதமான பிரியம். ரோமை என்ற அஸாம் பழங்குடி மக்களின் திருவிழாவை நவீன ஓவியங்களின் வழியாக நினைவுப்படுத்துகிறார். அவர் வரைந்துகொண்டிருந்த ஓவியத்தில் அழுத்தமான கருப்புக் கோடுகள். சாம்பல் நிறம், ஆரஞ்சு என தேர்ந்தெடுத்த வண்ணங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்.
நம்மூர் பொங்கலைப் போல கங்காயி என்றொரு அறுவடைத் திருவிழாவைத்தான் அதில் பதிவு செய்வதாகக் கூறினார்.
“பழங்குடி மக்களுடன்தான் எப்போதும் இருக்கிறேன். அவர்களுடைய டெக்ஸ்டைல், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், கொண்டாட்டம் எல்லாம் ஓவியங்களில் பிரதிபலிக்கிறது. கங்காயி விழாவில் முன்னோர்களுக்கு நன்றி தெரிவிப்போம். அந்த உணர்வையே ஆர்கிடெக்சரைப் போன்ற வடிவத்தில் விவரிக்கிறேன்” என்றார்.
முதல் பார்வைக்கும் வெறும் கோடுகளாகத் தெரியும் அவரது ஓவியத்திற்குள் நிறைய அர்த்தங்கள் மறைந்திருந்தன என்பது பேசியபோது தெரிந்தது.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்தவர் அரவிந்த். தன்னையே ஒவியங்களில் காண்பதாகவும், தன்னையே யார் என்று தனக்குள் கேட்டுக்கொள்வதாகவும் கூறுகிறார் அவர். மாபெரும் காதலனாக இருக்கிறார்.
“உலகில் உள்ள எல்லாவற்றையும் நேசிக்கிறேன். ஐயம் ஆல்சோ பார்ட் ஆப் தட்” என்கிறார்.
அவரது ஒவியங்களில் கோயில் மணிகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அதேப்போல நிலா போன்ற ஒரு வட்டம். ஆனால் அது நிலவல்ல என்றும் விளக்கம் அளிக்கிறார். இவரும் தத்துவத்தை அடிநாதமாக வைத்திருக்கிறார். மணியை பெண்ணைப்போல உருவகம் செய்திருக்கிறார். அறிவுதான் உயர்ந்தது. அதை வைத்துக்கொண்டு நீங்கள் அற்புதங்களை நிகழ்த்தமுடியும் என்றும் கூறும் அரவிந்த், எங்கோ போய்க்கொண்டிருக்கிறேன். சேரும் இடம் முக்கியமல்ல. பயணம் முக்கியமல்ல என்கிறார். பேச்சைப் போல ஓவியமும் அப்படித்தான் புரிந்தும் புரியாத மாதிரி இருக்கிறது.
பரத்தேஷ். பேரைப்போலவே முடிச்சிட்ட முடியும், தாடியுமாக இருக்கிறார். பெங்களூருக்காரர். தமிழ் தெரியும். ஆனால் பேசவராது என்று முந்திக்கொள்கிறார். உலகம் முழுதும் சுற்றிவரும் ஓவியர். புராண இதிகாசங்களில் ஈடுபாடு. சிதறுண்ட நவீன மனம், வாழ்க்கை இதுவே அவரது ஓவியத்தின் உட்கரு. நீங்கள் ஓவியரா என்று கேட்டால், "ஐ ஆம் டிரைண்ட் ஆஸ் ஏ பெயிண்டர்" என்கிறார் சுருக்கமாக.
வெளியும் காலமும்தான் அவருக்குப் பிடித்தமானவையாக உள்ளன. ஆன்மிகம், தத்துவம், நவீன வாழ்க்கை என சாறாக பிழிந்து கித்தானில் ஓவியமாக்கி காட்டுகிறார் பரத்தேஷ். மேலே ஒரு கதவு, நடுவில் ஒரு தண்ணீர்க்குழாய், இடப்புறத்தில் ஒரு போர்டு… என சிதறிக்கிடக்கும் பொருட்கள் ஒற்றை ஓவியத்தில் காண்பிக்கிறார். கண்ணை மூடிவிட்டுப் பாருங்கள் புரியும் என்றார். அவர் சொல்வதும் சரிதான்.
சாப்ட்வேர் என்ஜினியரைப் போல இருக்கும் சுனில்வர்மா, ஒரு கிராபிக் ஆர்டிஸ்ட். கலைவெளியில் பிரிண்ட் மேக்கர். பாரோடாவில் எம்எப்ஏ முடித்தவர்.
“என் பயணமே ஒவியம். தினமும் என்ன நான் பார்க்கிறேனோ அதையே ஓவியமாக தீட்டுகிறேன். தினசரி வாழ்வின் கணங்களில் என்னையும் ஒரு பாத்திரமாக சேர்த்துக்கொள்கிறேன். அந்த அனுபவங்களை வண்ணங்களாக கித்தானில் இறக்கிவைக்கிறேன். அனுபவங்களே கலையாக வெளிப்படும்போது தனியாக எதுவும் யாரிடமும் பேசவேண்டியதில்லை” என்கிறார் இந்த இளம் ஒவியர்.
சீனிவாசரெட்டிக்குச் சொந்த ஊர் பெங்களூருவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிக்பலாப்ரா மாவட்டத்தில் உள்ள கெளரிவிதுனூர் கிராமம். விவசாயத்தில் அப்பாவுக்கு உதவியாக இருந்துகொண்டே ஓவியக் கலையிலும் ஈடுபடுகிறார் இந்த இளம் ஓவியர். அவருக்குப் பிடித்தமானது நாம் இழந்துகொண்டிருக்கும் பழைமையான உலகம்.
பழைய போஸ்ட் கார்டுகளை சேகரித்து அதில் ஒவியங்கள் வரைந்து புதுமை படைத்துவரும் சீனிவாசரெட்டியின் பேச்சில் அத்தனை எதார்த்தம். “யாரும் அறிவுரைகளை அனுபவங்களைக் கேட்பதில்லை. அதற்காக எதையும் மாற்றிக்கொள்ளவும் தயாராகயில்லை. அவர்கள் செய்வதைத்தான் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறதோ அதுதான் வேண்டும். ரியாலிட்டி. இயற்கையை அப்படியே அதன் இயல்பிலேயே ரசிக்கிறேன். அதையே ஓவியங்களில் கொண்டுவருகிறேன்” என்கிறார்.
தமிழ் மண்ணின் விழுமியங்களை கலையாக வெளிப்படுத்தும் மனோகரின் ஓவியத்தில் கோயிலும் திருக்குளமும் மாடவீதிகளும் ஓட்டு வீடுகளுமாக இருந்தன.
“மண் சார்ந்த விஷயங்களை ஒவியங்களாக படைப்பதில்தான் ஆரம்பம் முதலே அதிக ஆர்வம். அதுதான் இன்றும் தொடர்கிறது. தாத்தா பயன்படுத்திய டிரங்குபெட்டியை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருப்பதுபோல எங்க ஊரு, எங்க கோயில், எங்க வீடு, எங்க ஆடுகள் என்று எல்லோரும் சதா சொல்கிறோமே அவற்றையே என் ஓவியங்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன” என்று விவரிக்கிறார்.
மும்பையில் இருந்து வந்திருக்கும் ஷில்பாவுக்கு இளம் தலைமுறையிடம் குறைந்துவரும் புத்தக வாசிப்புப் பற்றிய கவலை இருக்கிறது. அதனையே கலையாக மாற்றுவதாகக் கூறும் அவரது ஒவியத்தில் படிக்காத புத்தகங்களின் பக்கங்கள் படபடக்கின்றன. “என் மகன் புத்தகத்தையே தொடுவதில்லை. அவனைப் பார்த்துதான் வாசிப்புப் பழக்கம் இல்லையே என்ற கவலை எனக்கு வந்தது” என்கிறார் ஷில்பா.
சென்னை லலித்கலா அகாடெமியின் இயக்குநர் ஆர்எம். பழனியப்பன், வடகிழக்கு மாநில ஓவியர்களுக்கான முகாம்களை ஐந்து ஆண்டுகளாக நடத்திவருவதாகக் குறிப்பிட்டார்.
“பாரம்பரியம், வண்ணங்கள், கலாச்சார நடைமுறைகள், சடங்குகள் என அவர்களுடைய தனித்துவமான கலை வெளிப்பாடுகளுக்கு களமாக இது இருக்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் தொடர்பற்றவர்களாக காணப்படும் வடகிழக்கு மாநில கலைஞர்களை எடுத்துவந்து உரையாட வைப்பதன் மூலம் ஒரு உரையாடலும் பங்கேற்பும் சாத்தியமாகிறது. அந்த ஓவியர்களும் மற்ற மாநிலத்தவர்களின் கலையையும் அதன் நுட்பங்களையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது” என்று உற்சாகம் ததும்பப் பேசுகிறார்.
ஓவிய முகாமின் கடைசிநாளன்று மாலை சென்னையை விட்டு பிரிய மனமில்லாமல் புறப்பட்டுச் சென்றனர் அந்த கலைஞர்கள். ஆனால் லலித்கலா அகாடெமியில் எப்போதும் இருக்கப்போகும் ஓவியங்கள், அவர்களது நினைவுகளை பேசிக்கொண்டே இருக்கும்.
படங்கள் உதவி: மோகன்தாஸ் வடகரா
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரை: