'டிக் டாக்' மூலம் பிரபலம் ஆகி சினிமா வாய்ப்பு பெற்ற 85 வயது பாட்டி!
கேரளாவைச் சேர்ந்த மேரி ஜோசப் மம்பிள்ளியின் டிக் டாக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால் மலையாள திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் பகுதியின் வடக்கு பரவூர் பகுதியைச் சேர்ந்த 85 வயதான மேரி ஜோசப் மம்பிள்ளி டிக் டாக் வீடியோ மூலம் திடீரென்று பிரபலமாகிவிட்டார். இவர் வரவிருக்கும் மலையாள திரைப்படம் ஒன்றில் ஒரு கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.
உலகம் முழுவதும் இருப்பவர்கள் படைப்பாற்றல்மிக்க வீடியோக்களை உருவாக்கி பதிவேற்றம் செய்ய டிக் டாக் செயலி உதவுகிறது.
மம்பிள்ளியின் பேரன் ஜின்சன் மத்திய கிழக்கில் பாதுகாப்பு அதிகாரியாக உள்ளார். இவர் தனது பாட்டியின் நடிப்பை டிக் டாக் வீடியோவில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வந்தார். வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு சிரித்த முகத்துடன் எளிமையான பதில்களை அளிக்கும் அவரது வீடியோ பதிவு திரைப்பட எடிடர் பின்ஷத் நசீரின் கவனத்தை ஈர்த்தது. தற்போது நசீரின் முதல் திரைப்படமான ’சுந்தரன் சுபாஷ்’ திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் இந்த பாட்டி.
’தி நியூஸ் மினிட்’ உடனான நேர்காணலில் எடிடர் குறிப்பிடுகையில்,
திரைப்படத்தில் அம்மும்மா என்கிற கதாப்பாத்திரம் உள்ளது. 90 வயதான இவரை மையமாகக் கொண்டே கதை அமைந்துள்ளது. துறையில் யாரேனும் ஒருவரை நடிக்கவைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் இவரது வீடியோக்களை பார்த்த பிறகு இவர்தான் நடிக்கவேண்டும் என தீர்மானித்தோம். இவரது வீடியோக்கள் தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது,” என்றார்.
மம்பிள்ளியின் பேரனும் திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். சுவாரஸ்யமாக கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் நிவாரண முகாம்களில் தங்கியிருந்தபோதுதான் இவர்கள் இருவரும் முதல் முறையாக டிக் டாக் வீடியோவைத் துவங்கியுள்ளனர். அந்த சமயத்தில் மம்பிள்ளியின் நடிப்புத் திறன் மெருகேற ஜின்சன் உதவியுள்ளார்.
’இண்டியா ஹெட் நியூஸ்’ உடனான உரையாடலில் மம்பிள்ளி கூறுகையில்,
“என் பேரக்குழந்தைகள் டிக் டாக்கில் பதிவு செய்த வீடியோக்களுக்கு விருப்பம் தெரிவிப்பவர்களும் பின்தொடர்பவர்களும் அதிகம் இல்லை என்று கூறி வருத்தப்பட்டனர். பின்னர் அவர்களுடன் சேர்ந்து நான் வீடியோப் பதிவுசெய்யத் துவங்கினேன். முதல் வீடியோவிற்கு 25,000 லைக்ஸ் வந்தது. எனக்கும் டிக் டாக் வீடியோஸில் ஆர்வம் ஏற்பட்டது. தற்போது நாங்கள் 27 வீடியோக்கள் பதிவேற்றம் செய்துள்ளோம். என்னுடைய வீடியோக்கள் ஒன்றில் 1.57 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் வந்துள்ளது,” என்றார்.
ஜின்சன் தனது பாட்டி மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
”அவருக்குள் இந்தத் திறமை ஏற்கெனவே இருந்துள்ளது. அதை யாரும் அறியவில்லை. முதல் முறை வீடியோ எடுத்தபோதுகூட அவரிடம் எந்தவித கூச்சமோ பயமோ காணப்படவில்லை. முதலில் நானும் என்னுடைய சகோதரனும் அவருடன் சேர்ந்து டப்ஸ்மாஷ் செய்தோம். பின்னர் எங்களது சொந்த வரிகளையே பேச நினைத்தோம். எங்களது கிராமத்தில் பிரபலமாக இருக்கும் நகைச்சுவையையோ அல்லது உபதேசங்களையோ பதிவு செய்தோம்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA