புதிய தொழில்முனைவோர், தங்களது துறையில் நடக்கும் விஷயங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசையாக செய்தித்தாளைத் திறந்தால் அவ்வளவுதான்...கண் திருகுகிற அளவுக்கு அவ்வளவு கலைச் சொற்கள் (terms) வரிசை கட்டி நிற்கும். அவர்களுக்கு உதவத்தான் இந்தக் கட்டுரை. புதிய தொழில்முனைவோர் தெரிந்துகொள்ள வேண்டிய 10 கலைச் சொற்களும் அவற்றின் விளக்கமும் இதோ...
தொழில்முனைவோர் தங்கள் துறை, தொழில், முதலீட்டு வாய்ப்புகள், சந்தை நிலவரம் என்று பல்வேறு விஷயங்களையும் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். ஆனால் வணிக செய்தித்தாளைப் (அல்லது ஆங்கில செய்தி சானல்களைப்) பார்க்கும்போது அதில் வரும் வணிகச் செய்திகளில் பலவும் அவர்களைக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும். காரணம், அவற்றில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள்தான். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா!
1. Angel: ஒரு தொழிலை அதன் துவக்க நிலையிலேயே (யோசனை வடிவில் இருக்கும்போதே) அதனை மதிப்பிட்டு முதலீடு செய்பவர்கள் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் எனப்படுகிறார்கள். அதாவது, உங்கள் யோசனையை தேவதைபோல வந்து ஆசீர்வதித்து, அரவணைப்பவர்கள் இவர்கள்.
2. Venture Capitalist VC: துணிகர முதலீட்டாளர்களை வென்ச்சர் கேபிடலிஸ்ட் என்கிறோம். அதன் சுருக்கம்தான் வி.சி. குறிப்பிட்ட துறையில் துணிந்து முதலீடு செய்பவர், ரிஸ்க் எடுப்பவர்தான் துணிகர முதலீட்டாளர். ஏற்கனவே தொடங்கப்பட்டு, நடந்துகொண்டிருக்கும் தொழிலில்தான் இவர்கள் முதலீடு செய்வர்.
3. Private Equity PE: தனி நபர்களோ, ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களோ ஒருங்கிணைந்து ஒரு நிதியத்தை (fund) ஏற்படுத்துவர். அந்த நிதி, பல்வேறு தொழில்களில் பகுதி பகுதியாக முதலீடு செய்யப்படும். பெரும்பாலும் வளர்ந்த, வளர்ந்துகொண்டிருக்கும் தொழில்களில் மட்டுமே இந்த பிரைவேட் ஈக்விட்டி எனப்படும் தனியார் நிதியங்கள் முதலீடு செய்யும். அதாவது துணிகர முதலீட்டாளர்களுக்கு அடுத்த கட்ட ஆட்கள் என்று இவ்வகை நிறுவனங்களைச் சொல்லலாம்.
4. Memorandum of Understanding MOU: எம்.ஓ.யு. இரண்டு நிறுவனங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று அதற்குப் பொருள். ஒரு தொழில் நிறுவனம், அரசாங்கத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டாலும் அது எம்.ஓ.யு.தான். இது பெரும்பாலும் எழுதப்பட்ட ஒப்பந்தமாகத்தான் இருக்கும். வாய்மொழி ஒப்பந்தமாக இருக்காது.
5. Merger and Acquisition M&A: இரு சொற்களின் கலவைதான் எம்.அண்ட் ஏ என்பது. இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் என்று இதனைத் தமிழில் சொல்கிறோம். ஒரு நிறுவனம், இன்னொரு நிறுவனத்தை விலைகொடுத்து வாங்கிவிட்டால் அது ‘கையகப்படுத்தல்’ நடவடிக்கை. ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனத்துடன் இணைத்தால் அது ‘இணைத்தல்’ நடவடிக்கை. அவ்வளவுதான்!
6. Initial Public Offer IPO: முதன்முறையாக ஒரு நிறுவனம் பங்குகளை வெளியிடுகிறது என்றால் அதனை ஐ.பி.ஓ. வெளியீடு என்பார்கள். ”அப்படியென்றால் இரண்டாவது, மூன்றாவது முறை அந்த நிறுவனம் பங்குகளை வெளியிட்டால் அது ஐ.பி.ஓ. இல்லையா?” என்று கேட்கிறீர்களா? நீங்கள் சொல்வது சரி. அதனை FPO (follow on public offer) என்று அழைப்பார்கள்.
7. Co’y: பெரிதாக ஒன்றுமில்லை, company என்ற சொல்லை சுருக்கமாக எழுதியிருக்கிறார்கள்.
8. Joint Venture JV: நீங்கள் ஒரு பங்குதாரரைச் (அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட) சேர்த்துக்கொண்டு கூட்டுத்தொழில் ஒன்றைத் தொடங்குகிறீர்கள். இந்திய கூட்டாண்மைச் சட்டம்-1932இன்படி நீங்கள் அந்த நிறுவனத்தைப் பதிவு செய்வீர்கள். உங்கள் நிறுவனம் இப்போது ஒரு கூட்டு நிறுவனம். இதனை ஆங்கிலத்தில் joint venture என்பர். அதனைச் சுருக்கமாக ஜே.வி. என்கிறோம். ஃபர்ம் (firm) என்றும் சொல்லலாம்.
9. Crowd Funding: ஒரு தனி நபர், குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது அதில் ரிஸ்க் அதிகம் இருக்குமில்லையா! அதனால்தான் பல தனிநபர்களிடம் சிறுகச் சிறுக முதலீட்டைப் பிரித்து திரட்டுகிறார்கள். இதைத்தான் க்ரவுட் ஃபண்டிங் என்கிறோம். பெரும்பாலும் இணையத்தின் மூலமாகவே இதுபோன்ற முதலீடுகள் திரட்டப்படுகின்றன. கிக் ஸ்டார்ட்டர் போன்ற இணையதளங்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
10. Social Funding: நீங்கள் ஒரு நிறுவனத்தை நடத்துகிறீர்கள். அது லாப நோக்கத்துடன் இயங்கும் நிறுவனமல்ல. மாறாக, பலருக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனம். இதனை நடத்துவதற்கு உங்களுக்கு முதலீடு தேவைப்படுமில்லையா! அதற்கு உதவும் முதலீடுகளையே சோஷியல் ஃபண்டிங் என்கிறோம். மேலும் சமூக சேவை செய்ய விரும்புவோரையும், உதவி தேவைப்படுவோரையும் சொஷியல் ஃபண்டிங் தளங்கள் (எ.கா: www.ketto.org) இணைக்கின்றன.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
இது போன்ற தொழில்முனைவோர் தொடர்பு கட்டுரை:
இளம் தொழில் முனைவோர்களை 'ஸ்டார்ட அப் விக்கெண்ட்' அழைக்கிறது
முதல் கட்ட முதலீடு திரட்டலின்போது நான் கற்றுக்கொண்ட 8 பாடங்கள்!