Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வீர தீரச் செயல் புரிந்து தேசிய விருதை பெற்ற 25 சிறுவர், சிறுமியர்களை தெரிந்து கொள்ளுங்கள்!

வீர தீரச் செயல் புரிந்து தேசிய விருதை பெற்ற 25 சிறுவர், சிறுமியர்களை தெரிந்து கொள்ளுங்கள்!

Saturday January 28, 2017 , 4 min Read

அண்மையில் புது தில்லியில் நடந்த குடியரசுதின பரேடில், ஒய்யாரமாக நிமிர்ந்த நடையில் வந்த அந்த 6 முதல் 18 வயது சிறுவர்/சிறுமியர்களை எல்லாரும் பெருமிதத்துடன் நோக்கினர். தங்களின் நண்பர்கள், உறவினர்கள் அல்லது தெரியாதோரின் உயிரை ஆபத்தில் இருந்து எந்தவித அச்சமின்றி துணிந்து நின்று காப்பாற்றியவர்கள் இந்த வீரச் சிறுவர்கள். அவர்கள் நடந்து வந்த போது அங்கு குழுமியிருந்தோரின் கரகோஷம் வானைப் பிளந்தது. 

பிரதமர் நரேந்திர மோடி 25 குழந்தைகளுக்கு தேசிய வீர தீரச்செயல் விருதை வழங்கி கெளரவித்தார். அதில் நான்கு சிறுவர்கள் வீரச்செயலில் ஈடுபட்டு உயிரை இழந்தபின் விருது அளிக்கப்பட்டுள்ளது. தேசிய வீர தீரச்செயல் விருது, ஐந்து பிரிவுகளாக வழங்கப்படுகிறது. அதில் பாரத் விருது, சஞ்சய் சோப்ரா விருது, கீதா சோப்ரா விருது, பாபு கைதானி விருது மற்றும் பொது தேசிய வீர விருது. விருது பெரும் சிறுவர்/சிறுமியர்களுக்கு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் குழந்தைகள் நல அமைப்பின் பரிந்துரையின் அடிப்படையில் விருதுக்கு தகுதியானோர் நாடெங்கில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விருதை தவிர, இந்த குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை இந்திரா காந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது. 

image


விருது பெற்ற 25 குழந்தைகள் பற்றிய தொகுப்பு:

ரொலாப்யூ, மிசோரம்: 13 வயது ரொலாப்யூ, தனது இரு பள்ளி நண்பர்களை தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்றி தன் உயிரை இழந்தார். அவரது பெற்றோர்கள் ‘பாபு கைதானி’ விருதை அவரின் சார்பின் பெற்றுக்கொண்டனர். 

பாயல் தேவி, ஜம்மு-காஷ்மீர்: விருதை பெறும் ஜம்முவை சேர்ந்த ஒரே ஒருவர் பாயல். எட்டாம் வகுப்பு மாணவியான அவர், கடந்த ஆண்டு மே மாதம் தனது அக்காவின் மகள் மற்றும் 14 வயது பையனின் உயிரை காப்பாற்ற முற்பட்டபோது பாயல் உயிர் விட்டார். 

துஷார் வெர்மா, சட்டிஸ்கர்: பாபு கைதானி விருதை பெறும் துஷார், தனது பக்கத்து வீட்டில் பறவிய தீயை அணைத்து அதில் வசித்து வந்த முதியோர்களை காப்பாற்றினார். உயிரை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இந்த செயலில் ஈடுபட்டதற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 

சுமித் மாம்கெயின், உத்தரகண்ட்: தன் சகோதரனை சிறுத்தையுடன் போராடி காப்பாற்றினார் 15 வயது சுமித். சஞ்சய் சோப்ரா விருது பெறும் இவர், சிறுத்தையில் வாலை பிடித்து போராடி, கத்தியை கொண்டு அதனுடன் சண்டையிட்டு தைரியமாக விரட்டி அடித்தார். 

ப்ரஃபுல் சர்மா, ஹிமாச்சல் பிரதேஷ்: ஹிமாச்சலில் உள்ள மண்டி எனும் இடத்தைச் சேர்ந்த 9 வயது ப்ரஃபுல், ஒரு பெரிய விபத்தை தடுத்து நிறுத்தி சக மாணவர்களை காப்பாற்றினார். கடந்த டிசம்பர் மாதம், பள்ளி பேருந்து மாணவர்களுடன் மலையின் கீழ் நோக்கி போய் கொண்டிருந்த நேரம் சமயோஜிதமாக ப்ரேக்கை போட்டு பேருந்தை நிறுத்தினார். 

அன்ஷிகா பாண்டே, உத்தர பிரதேஷ்: செப்டம்பர் மாதம் 14-ம் தேதி, லக்னோவை சேர்ந்த அன்ஷிகா தன்னை கடத்தியவர்களுடன் பயமின்றி போராடினாள். காயங்கள் ஏற்பட்டும், அவர் தொடர்ந்து போராடினார். அவரின் மீது ஆசிட் ஊற்றுவதாக கடத்தல்காரர்கள் மிறட்டியும் அச்சமின்றி தன்னை காத்துக்கொள்ள போராடி வெற்றிப்பெற்றாள்.

நமன் பெனிவால், நியு டெல்லி: சொனிபெட்டில் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்த நமன், 12 ஆழமுள்ள கால்வாயில் மூழ்கிக்கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றினார். சுழற்சியுடன் கூடிய பவானா கால்வாயில் தன் உயிரையும் பணையம் வைத்து அந்த குழந்தையை காப்பாற்றினார். 

அக்‌ஷித் மற்றும் அக்‌ஷிதா சர்மா, புது டெல்லி: டிசம்பர் 8-ம் தேதி, அக்‌ஷித்(16) மற்றும் அக்‌ஷித் (13) பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது அவர்களின் வீட்டில் கொள்ளையர்கள் இருப்பதை கண்டு, உடனடியாக, பக்கத்து வீட்டில் அலாரம் மூலம் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு கொள்ளையனை பிடித்தனர். 

நீலம் த்ருவ், சட்டிஸ்கர்: மே மாதம் 19-ம் தேதி, நீலம் தவறி குளத்தில் விழுந்த 4 வயது பெண் குழந்தையை குளத்தில் இருந்து காப்பாற்றினாள். தந்தையை இழந்த நீலம் பிறருக்கு உதவுவதில் எடுத்துக்காட்டாய் விளங்கியவள். அதற்கு இந்த சம்பவமே சான்று. 

சோனு மாலி, ராஜஸ்தான்: கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி, 9 வயது சோனு வீட்டருகே வந்த ஒரு பாம்பை பிடித்து, வயல் வெளியில் விட்டார். இந்த வீரச்செயலுக்காக நாட்டின் விருது அளிக்கப்பட்டுள்ளது. 

தேஜஸ்வீத்தா ப்ரதான் மற்றும் ஷிவானி கோண்ட், மேற்கு வங்கம்: 18 வயதான தேஜஸ்வீத்தா மற்றும் 17 வயது ஷிவானி, டார்ஜிலிங்கில் நடைப்பெற்று வந்த பெண்களை வைத்து பாலியல் தொழில் புரியும் சர்வதேச கும்பலை பிடிக்க உதவினர். கீதா சோப்ரா விருது பெறும் இவர்கள், இந்த கும்பலை பிடித்து வீரச்செயல் புரிந்துள்ளனர். 

தர்ஹ் பீஜு, அருணாச்சல் பிரதேசம்: நான்காம் வகுப்பு மாணவி தர்ஹ், 19-ம் தேதி மே மாதம், தனது நண்பர்களை காப்பாற்றும் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது இந்த வீரச்செயலுக்காக விருது வழங்கப்பட்டது. 

லால்ஹ்ரியத்பூய், மிசோரம்: பாபு கைதானி விருதை பெறும் உயிரை நீத்த லால்ஹ்ரியத்பூய், தனது இரண்டு வயது கசினை காப்பாற்ற காரில் குதித்தார். அப்போது அவரின் உயிர் போனது. 

டன்கேஷ்வர் பெகு, அசாம்: ஜூன் மாதம் 20-ம் தேதி, டன்கேஷ்வர் ஒரு பெண்மணியின் ஓலக்குரலை கேட்டு, ஆற்றில் அடித்துச் சென்றிருந்த அவரை தண்ணீரில் குதித்து காப்பாற்றினார். 

தங்கில்மங் லுன்கிம், நாகலாந்து: ஆறாம் வகுப்பு மாணவன் தங்கில்மங் தன் நண்பனை தண்ணீரில் குதித்து காப்பாற்றினார். 120 மீட்டர் வரை நீச்சல் அடித்து தன் நண்பனை காப்பாற்றினார். 

மோஹன் சேத்தி, ஒடிசா: ஜூன் மாதம் 28-ம் தேதி, தன் நண்பரை ஆற்றில் மூழ்காமல் காப்பாற்றினார். ஏழாம் வகுப்பு மாணவனான மோஹன், தன் நண்பரை காப்பாற்ற யாரும் வராததால் தானே குதித்து உயிரை காப்பாற்றினார்.

மொய்ரங்கதெம் சதானந்தா சிங், மணிப்பூர்: 14 வயது மொய்ரங்கதெம், தனது அம்மாவை மின்சார தாக்கலில் இருந்து காப்பாற்றினார். மே 6-ம் தேதி, வீட்டில் ஏற்பட்ட மின்சார கோளாறால் தன் தாய் மீது அடித்த ஷாக்கில் இருந்து ஒரு இரும்பு கம்பியால் உடைத்து காப்பாற்றினார். 

நிஷா திலீப் பாடில், மஹாராஷ்டிரா: ஜனார் 14-ம் தேதி, நிஷா ஆறு மாத குழந்தையின் உயிரை தீயில் இருந்து காத்தார். நிஷா பற்றி எரிந்து கொண்டிருந்த வீட்டுக் கதவை உடைத்து ரூமில் மாட்டிக்கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றினார். 

சியா வாமனசா கோடே, கர்நாடகா: தன் இரண்டு வயது தம்பி அதிக மின்சாரம் கொண்டு செல்லும் வயரை தொட சென்றபோது, சமயோஜிதமாக அவனின் சட்டையை பிடித்து இழுத்து காப்பாற்றினாள். தார்வாடை சேர்ந்த 14 வயது சியா தன் உயிரைப் பற்றி யோசிக்காமல் தம்பியை காப்பாறினாள். 

பதருனிஸ்ஸா, கேரளா: 2015இல் மே மாதம் 4-ம் தேதி, தன் தோழி விஸ்மாயா மற்றும் அவரது தாய் குளத்தில் மூழ்கிக்கொண்டிருந்ததை கண்டார் பதருனிஸ்ஸா. உடனடியாக சென்று அவரகளை அதில் இருந்து வெளியே இழுத்து காப்பாற்றினாள். 

ஆதித்யன் பிள்ளை, கேரளா: மூன்று குழந்தைகளை நீரில் மூழ்குவதில் இருந்து காப்பாறினான் ஆதித்யன். 11 அடி ஆழமுள்ள ஆற்றில் மாட்டிக்கொண்ட அந்த மூவரையும் துணிச்சலுடன் குதித்து காப்பாற்றினான் ஆதித்யன். 

பினில் மஞ்சலே, கேரளா: திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்ட பினில், அந்த இடத்தை நோக்கி விரைந்தார். அங்கே மூவர் பெரியார் கால்வாயில் மாட்டிக்கொண்டு அலறிக்கொண்டிருந்தனர். 20 அடி ஆழமான அந்த கால்வாயில் இருவர் மூழ்கி இறந்தனர். ஒரே ஒருவரை மட்டும் காப்பாற்றினார் பினில். 

அகில் ஷிலு, கேரளா: தனது கிராமத்தை சேர்ந்தவர் பம்பா நதியில் சுழளில் மாட்டிக்கொண்டு அலறியபோது, அதில் குதித்து அவரை காப்பாற்றினார் அகில். 12 அடி ஆழமுள்ள நதியில் துணிச்சலுடன் குதித்து காப்பாற்றியதற்கு வீரதீர விருது அவருக்கு வழங்கப்பட்டது.