நெல்லை கிராமத்தில் புளியங்காய் விளையாடிய அஷ்விதா கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சியாளரான கதை!
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். புளியங்காய் பறிப்பது, மணல் மேடுகளில் விளையாடுவது, மீன் பிடிப்பது, கொய்யா பழங்களை பறிப்பது போன்று கிராமங்களில் வளர்வதற்கான சூழலில் என்னுடைய குழந்தை பருவத்தை பெருமளவில் கழித்தேன். இளம் பருவ சமயத்தில் தான், நான் இருந்த சமுதாயத்தின் ஆண் ஆதிக்கத்தை பற்றி என்னை சுற்றி இருந்தவர்களிடமிருந்து உணர முடிந்தது. ஆண்களிடம் அதிகம் பேசாமலும், பெரியவர்களை எதிர்த்து பேசாமல் இருப்பதுமாக என்னுடைய நாட்கள் அப்போது இருந்தது.
இது அஷ்விதா ஷெட்டியின் சுருக்கமான அறிமுகம். தன்னுடைய 13ம் வயதில் வாழ்க்கையின் திசை மாறியதற்கு ஹெலன் கெல்லருடைய வாழ்க்கை கதை ஒரு பெரிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தவர்களுடைய வாழ்க்கையை மாற்றியமைக்க என்னால் முடியும் என்று உணர்ந்தேன்" என்று விளக்கும் அஷ்விதா, படிப்பில் மிகவும் சுட்டியாக இருந்தது மட்டுமல்லாமல், பாடம் சொல்லித்தருவதில் ஒரு தனி ஆர்வத்தையும் கொண்டிருந்தார் என்றே சொல்லவேண்டும். அந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக, அக்கம் பக்கத்திலிருந்த தனது நண்பர்களுக்கு பாடம் கற்றுத்தர ஆரம்பித்தார். பின், 15 அல்லது 20 மாணவர்கள் கொண்ட சிறு சிறு குழுக்களுக்கு கற்றுத்தந்த அஷ்விதாவிற்கு மாணவர்கள் அதிகமாக வர வர தன்னம்பிக்கையும் பெருகியது.
பீடி தொழிலாளர்களான அஷ்விதாவின் பெற்றோர்களை தன்னுடைய படிப்பிற்காக சம்மதிக்க வைத்ததில் பெரும் சிக்கல் இருந்ததாக அஷ்விதா கூறுகிறார்.
என் பெற்றோர்களுக்கு கல்வியறிவு இல்லாததால், கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறுவதில் எனக்கு பல சிரமங்கள் இருக்கவே செய்தது. அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்க, சூழ்நிலைகளும் பல முறை எனக்கு சாதாகமாக இல்லாமல் இருந்தாலும், அவர்கள் என்னுடைய இன்றைய நிலைக்கு தேவையான வாய்ப்புகளை புரிந்துக்கொள்கின்றனர். இது எனக்கு அமைந்த ஆசீர்வாதமாக நான் கருதுகிறேன்.
கல்லூரி மற்றும் அதை தொடர்ந்து இருந்த கனவுகள்
ஆங்கிலம் என்பது அஷ்விதாவின் அகராதியிலேயே இல்லாத ஒன்றாக இருந்தது. ஒரு சிறு தயக்கமுமின்றி அஷ்விதா நம்மோடு இதைப்பற்றி பேசுகிறார், "இளநிலை படிப்பில் தங்க பதக்கம் பெற்றிருந்தாலும், எனக்கு பாடங்களை பற்றி சரிவர எதுவும் தெரியாது. காரணம், ஆங்கிலத்தில் இருந்ததால் அப்படியே மனப்பாடம் மட்டுமே செய்து எனது தேர்வுகளை எழுதினேன். என்னுடைய கையெழுத்து சற்றே அழகாக இருந்த காரணத்தால் எனக்கு அதிக மதிப்பெண்களும் கிடைத்தது." என்று வெளிப்படையாக பகிர்ந்துக்கொள்கிறார் அஷ்விதா.
வீட்டை தாண்டியிருந்த வெளியுலகத்தின் மீது அஷ்விதாவிற்கு அதிகமான ஈர்ப்பு இருக்கவே செய்தது. இந்த ஈர்ப்பே ஒரு பெரிய கல்லூரியில் சேர்ந்து திறமையான ஆசிரியர்களிடம் படிக்கவேண்டும் என்ற ஆசையை வித்திட்டது. தன்னுடைய அம்மாவிடமும் அடிக்கடி,''நான் கல்லூரிக்கு செல்வேன்" என்று கூறுவது இவரது வழக்கமாக இருந்தது. அதற்கு அவர் தாயார் முதலில் பள்ளி படிப்பை முடி என்று சட்டென்று பதில் அளிப்பதும் உண்டு. "என்னை பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர் அப்போது சொல்லவில்லை, ஒரு பெண்ணாக இந்த கனவு சற்று பெரிது என்ற அச்சம் அவருக்கு இருந்தது."
தன்னுடைய படிப்பின் இறுதியாண்டின் போது ஒரு தமிழ் வார இதழ் மூலம் இளம் இந்தியா ஃபெல்லோஷிப் என்ற திட்டத்தை பற்றி தெரிந்துக்கொண்டார். அந்த தகவலை பற்றி படித்த நொடியிலேயே தன்னுடைய கனவுக்கு ஒரு வழி பிறந்ததை அஷ்விதா உணர்ந்தது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட்ட தன்னை சுற்றியிருந்த அனைவருமே அதற்காக ஒரு சேர உதவிகளையும் செய்தனர். ஒரு நூலகர் மூலம், இமெயில் முகவரி ஆரம்பிக்கவும், தோழிகளுள் ஒருவர் தினம் தன்னுடைய தொலைபேசி தந்து தேர்வுகளுக்கும், விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யவும், தில்லி வரை நேர்க்கானலுக்கு செல்லமுடியாத சூழல் இருக்கும் போது, ஸ்கைப் மூலம் நேரக்காணலை ஏற்பாடு செய்தது இப்படி பல்வேறு வழியாக அஷ்விதாவை தேடி உதவிகள் குவிந்தது என்றே சொல்லலாம்.
மாற்றம் தந்த ஆச்சரியம்
தன்னுடைய 20வது வயதில், தொலைப்பேசி நேரக்காணலுக்காகவே அஷ்விதா முதல்முறையாக ஆங்கிலத்தில் உரையாடினார். கூட்டுறவு திட்டத்திற்காக தேர்வான அஷ்விதா அடுத்து சென்ற இடம் தில்லி. "ஆரம்பத்தில், எனக்கு மிகவும் பயமாகவும் நகர வாழ்க்கையை கண்டபோது அதிர்ச்சியாகவும் இருந்தது. வித்தியாசமான அமெரிக்க பாணி உச்சரிப்பால், சில வகுப்புகள் எனக்கு புரியாமல் இருந்த நாட்களும் உண்டு. ஆங்கிலத்தில் கவனித்து புரிந்துக்கொள்வதில் பல சிரமங்களை நான் அனுபவித்தேன்." என்று தனது தில்லி ஞாபகங்களை நம்மோடு பகிர்ந்துக்கொண்டார். இருந்தாலும், ஆசிரியர்களுடன் அதிக நேரம் அமர்ந்து கற்றுக்கொண்டு, ஆங்கிலத்தில் ஒரு சிறந்த வல்லுநராகவே இன்று அஷ்விதா மாறியிருக்கிறார். இந்த திட்டம் அஷ்விதாவிற்கு பல வழிகளை காண்பிக்கவும் செய்தது, "அடுத்தவர்களுடைய திறமைகளுக்காக மரியாதை தர வேண்டும் என்பதை அப்போது நான் உணர்ந்தேன். தவிர, என்னுடைய ஆங்கில எழுத்து மற்றும் பேச்சுத்திறன் முழு அளவில் மாறுபட்டதும் இங்கு தான். என்னுடன் இருந்தவர்கள் என்னை தொடர்ந்து ஊக்குவித்தது மட்டுமல்லாமல், நிறைய நண்பர்களும் எனக்கு கிடைத்தார்கள்." என்று புன்னகைக்கிறார் அஷ்விதா.
மனதில் ஏற்பட்ட அந்த உள்ளுணர்வு
தில்லியின் கூட்டுறவு திட்டத்திற்கு பிறகு, சுகவாழ்வு என்ற கிராமங்களுக்கான சுகாதார மையத்தில் கம்யூனிட்டி எங்கேஜ்மென்ட் மேலாளராக பணிபுரிந்தார். தன்னுடைய வேலையின் ஒரு பாகமாக பள்ளி கல்லூரிகளுக்கு இரத்தசோகை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களை பற்றி விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வந்தார். நல்ல கல்வி மற்றும் நல்ல வேலை இவ்வளவு தான் தன்னுடைய கனவா? என்ற ஒரு கேள்வி அஷ்விதாவின் மனதிற்குள் எழும்பியது.
நான் அங்கு பணிபுரியும் போது, என்னையே நான் அடிக்கடி கேள்வி கேட்டுக்கொள்வதுண்டு. நான் கஷ்டப்பட்டு கற்றக் கல்வியை வைத்து என்ன செய்கிறேன்? இந்த உலகத்தில் மாறவேண்டிய விஷயம் என்ன? என்னுடன் கல்வி கற்று கிராமத்தில் இருக்கும் தோழிகளால் ஏன் சரியான பணியில் இருக்க முடியவில்லை.?
இத்தனை கேள்விகளுக்கு பிறகு, ஒரு பதிலையும் கண்டறிந்தார் அஷ்விதா. வாழ்க்கையின் முன்னேற்ற பாதையில் வந்ததன் காரணம் வெவ்வேறு வாய்ப்புகளுக்கான அனுபவங்களும், மற்றவர்களுடன் பழகக்கூடிய மென் திறன்களை வளர்த்துகொண்டதே.
போதி மரம் ஃபவுண்டேஷன் பிறந்த கதை
அஷ்விதா திருநெல்வேலிக்கு திரும்பி, போதி மரம் ஃபவுண்டேஷனை, கிராமப் புறங்களில் இருக்கும் பட்டதாரிகளுக்கு ஒரு புது முயற்சியை ஏற்படுத்தும் நோக்கத்தோடு துவங்கினார். ''கிராமப் புற பட்டதாரிகளுக்கு சரியான பயிற்சியின் மூலம், தங்களுடைய கம்யூனிக்கெஷன் திறன்களை வளர்த்துக்கொள்வது மட்டுமல்லாமல், சரியான முடிவுகளை எடுப்பது, முன்னேற்ற பாதையை எற்படுத்திக்கொள்வது, பொறுப்புகளை எடுத்துக்கொள்வது போன்ற பல நன்மைகள் அவர்களுக்கு உண்டு என்பதை நம்புகிறோம். எங்களுடைய ஈடுபாட்டின் வழியாக, கிராமங்களை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லக்கூடிய தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியும் என்பதில் அளவில்லாத நம்பிக்கையும் எனக்களுக்கு உண்டு." என்று பகிர்ந்துக்கொள்கிறார் அஷ்விதா. கூட்டுறவு திட்டங்கள், வேலை வாய்ப்புகள், தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள், தொழில்முனைவர் திட்டங்கள் பற்றின 3 மணிநேர விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படுகின்றது. தவிர, கலை மற்றும் அறிவியல் படிக்கும் மாணவர்களுக்காக தொழில்முறை முன்னேற்றம் பற்றின இரண்டு நாள் சிறப்பு பாடத்திட்டம், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் மாணவர்களுக்காக பாஸிட்டிவ் ஆடிட்யூட் (Positive Attitude) சிறப்பு பாடமும் நடத்தப்படுவது தனி சிறப்பு என்றே சொல்லலாம்.
அஷ்விதாவுடன் ஒரே கல்லூரியில் பிபிஏ படித்த காந்திமதியே இந்த பயிற்சி முகாம்களின் மூலம் பயனடைந்தவர்களுள் ஒரு சிறந்த உதாரணம் என்றே சொல்லலாம். அசாதாரண முன்னேற்றம் அடைந்த காந்திமதி, தற்போது எந்தவகையான அச்சமுமின்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசுகின்றார். "நான் கிராமத்திலிருந்து வந்த பெண். ஆங்கிலத்தை பற்றின எந்தவொரு சரியான பயிற்சியும் இல்லாத நிலையில், இங்கு எடுத்துக்கொண்ட பயிற்சி முகாம் மற்றும் பாடங்களின் முலம், இப்போது பயமில்லாமல் பேசமுடிகிறது. தவிர, ஆங்கிலத்தின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினர். என்னுடைய பலம் மற்றும் பலவீனங்களை பற்றி ஒரு தனி ஆய்வும் செய்தனர். இப்போது என்னுடைய பலத்தில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்து வருகிறேன்." என்று திடமாக நம்மோடு பேசுகிறார் காந்திமதி.
தன்னுடைய இந்த முயற்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு தன்னுடைய பக்கபலமாக பாலாஜி, செபாஸ்டின், மற்றும் பத்மா ஆகியோரை கைகாட்டுகிறார் அஷ்விதா. ஓராண்டுக்குள் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு முகாம்களை எடுத்துக்கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல், தொழில்முறை முன்னேற்றம் மற்றும் பாஸிட்டிவ் ஆடிட்யூட் பாடங்களை எடுத்துக்கொண்டது, 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளோடு சேர்ந்து பயிற்சி முகாம்களை வழங்குவது, ஒரு தனி நூலகம், லீப் ஃபார் வர்ட் (Leap for Word) போன்ற பல அமைப்புகளோடு சேர்ந்து கிராம புற பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தருவது போன்ற பல முயற்சிகளை செல்யல்படுத்தியது அஷ்விதாவின் குழு.
அடுத்தகட்ட வெற்றி அடிகள்
அஷ்விதா, அகுமென் (Acumen) என்ற கூட்டுறவு திட்டத்தின் கீழும் செயல்பட்டவர். அதனுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் போது, "நிறைய விஷயங்களை புரிந்துக்கொள்ளவும், என்னுடைய குரலை வெளியுலகிற்கு தெரியும் படி செய்வதற்கும் அந்த திட்டம் எனக்கு பெரிதும் உதவியது. அங்கிருந்தவர்களுக்கு நான் பேசிய மொழியும், என்னுடைய பிரச்னைகளும் புரிந்தது."
ப்ளஸ் ட்ரஸ்ட் (Plus trust) என்ற நிறுவனம் அஷ்விதாவின் போதி மரம் ஃபவுண்டேஷனுடைய ஆரம்ப கட்டத்தில் பெரிதும் நிதியுதவி வழங்கியுள்ளது குறிப்படத்தக்கது. பின், அன்னை தெரஸா சமூக நிறுவன உதவித்தொகை மூலம், தன்னுடைய முயற்சிகளை விரிவுப்படுத்திய அஷ்விதா, தவிர, பலரின் உதவியும் அவருக்கு சேர்ந்திருந்தது. இப்போது, தன்னுடைய முயற்சியை மேலும் பெரிதாக்கும் திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார் அஷ்விதா.
மனிதனின் திறன், பேசும் மொழி, வாய்ப்புகளை வைத்து இருக்கும் கிராம நகர பிரிவு இல்லாத ஒரு சமமான நாடு இருக்க வேண்டும் என்பதே அஷ்விதாவின் கனவு மற்றும் ஆசை. போதி மரம் ஃபவுண்டேஷன் அதை நோக்கி எடுத்து வைத்துள்ள ஒரு சின்ன அடியே.
ஒவ்வொரு நாள் கடந்து போகும் போது, எனக்கு நானே நினைவூட்டிக்கொள்வதுண்டு ஒன்றுதான். கிராமத்தில் உள்ள பலருக்கும் ஏன் என்னுடைய சொந்த தங்கைகளுக்கும் கூட கிடைக்காத, நிறைவேறாத கனவுகளும், அளவில்லா சுதந்திரமும் எனக்கு கிடைத்துள்ளது ஒரு வரப்பிரசாதம் தான். இதை நான் பெரும் அதிர்ஷ்டமாக எடுத்துக்கொண்டு என் சிரகுகளை விரித்து பரந்து, இவ்வுலகில் எனக்கென ஒரு இடத்தை அடைவேன்.