ஒவ்வொரு ஆண்டும் புதிய உலக சாதனை படைக்கும் 102 வயது ஐடா கீலிங்!
102 வயதான ஐடா கீலிங் ஒரு அமெரிக்க தடகள வீராங்கனை ஆவார். இவர் உலக சாதனை படைத்தவர். வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே என்பதையும் ஒருவர் செயல்பட விரும்புவதை மேற்கொள்ள நேரமோ வயதோ தடையல்ல என்பதையும் நாம் பல முறை கேட்டிருந்தாலும் அதை இவர் மீண்டும் வலுப்படுத்துகிறார். தனது இரண்டு மகன்களையும் இழந்துவிட்ட சோகத்தில் இருந்து மீள்வதற்காக தடகளத்தில் ஈடுபடத் துவங்கினார். அப்போது அவரது வயது 87.
1915-ம் ஆண்டு பிறந்த ஐடா 95-99 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் ‘100 வயதுக்கு மேற்பட்டோர்’ பிரிவிலும் 60 மீட்டர் மற்றும் 100 மீட்டர் தொலைவில் மாஸ்டர்ஸ் உலக சாதனை படைத்தவராவார். அவருக்கு 95 வயதிருக்கையில் மன்ஹட்டன் ட்ராக் மீட்டில் 60 மீட்டர் ஓட்டத்தை 29.86 விநாடிகளில் நிறைவு செய்து உலக சாதனை படைத்தார். 2014-ம் ஆண்டு 99 வயதிருக்கையில் 100 மீட்டர் ஓட்டத்தை 58.9 விநாடிகளில் முடித்து மீண்டும் சாதனை படைத்தார். அவருக்கு 100 வயதாகும்போது அவரது வயதில் 100 மீட்டர் ஓடி சாதனை படைத்த முதல் பெண்மணி ஆனார்.
ஐடா எப்போதும் சுறுசுறுப்பானவர். அவரது மகளின் வற்புறுத்தலின் பேரில் முதல் முறையாக உள்ளூரில் 5,000 மீட்டர் ஓட்டத்திற்குச் சென்றார். அவரது மகளான ஷெல்லி ட்ராக் அண்ட் ஃபீல்ட் க்ராஸ் கண்ட்ரி பயிற்சியாளர். இவர் ஆரம்பத்தில் தனது அம்மாவிடம் ஒரு சிறிய தொலைவிற்கான ஓட்டம் என்றே கூறியுள்ளார். ஐடா அந்த இடத்தை அடைந்த பின்னரே 5,000 மீட்டர் ஓட்டம் என்பதை உணர்ந்தார். இதைக் கண்டு அவர் அச்சப்படவில்லை. அவர் துணிந்து களத்தில் இறங்கி வெற்றிகரமாக ஓடி முடித்தார். ஐடா Allure-உடன் பேசுகையில்,
உங்கள் உடலை நீங்கள் விரும்பி பராமரித்து அதற்குத் தேவையானதை சிறப்பாக செய்யவேண்டும்.
வயது அதிகரிக்கையில் அவரது வேகம் குறைவதை ஐடா உணர்ந்தார். இருப்பினும் கம்பளிப்பூச்சி போல் மெதுவாகவே நகர முடிந்தாலும் தொடர்ந்து நகர்ந்துகொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். நடக்கும்போது ஒரு பிரம்பை பயன்படுத்தினாலும் ட்ராக்கில் எதையும் பயன்படுத்துவதில்லை. ஒரு முறை அவர் Cleveland-உடன் பேசுகையில்,
பிரம்புடன் நடப்பதற்கு நிமிடங்கள் ஆகும். சாம்பியன்களுடன் ஓடுவதற்கு விநாடிகள் மட்டுமே ஆகும்.
கட்டுரை : THINK CHANGE INDIA