12 வயதில் ‘கிராண்ட்மாஸ்டர்’: சாதனையை எப்படி படைத்தார் பிரக்னாநந்தா?
கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இளம் இந்திய வீரர் என்ற பெருமையோடு, ஒட்டுமொத்த அளவில் 2–வது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பிரக்னாநந்தா என்ற 12 வயது சிறுவன்.
சென்னை பாடியைச் சேர்ந்த வங்கி ஊழியர் ரமேஷ் பாபு. இவரது மனைவி நாகலட்சுமி. இத்தம்பதிக்கு வைஷாலி என்ற மகளும், பிரக்னாநந்தா என்ற மகனும் உள்ளனர். குழந்தைகள் இருவருக்குமே சிறுவயது முதலே செஸ் விளையாட்டில் ஆர்வம் அதிகம்.
வைஷாலி செஸ் போட்டியில், 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 12 வயதுக்குட்பட்டோர் உலக இளைஞர் சாம்பியன்ஷிப் வென்றவர். இவர் விளையாடுவதை பார்த்தே பிரக்னாநந்தாவுக்கும் செஸ் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.
"பிரக்னாநந்தாவுக்கு 5 வயது இருக்கும் போது அவருக்கு செஸ் விளையாட்டின் மீது அதிக ஆர்வமாக இருப்பதைக் கண்டு கொண்டோம். ஆனால், தொடர்ந்து அவருக்கு பயிற்சி அளிக்க இயலாத அளவிற்கு வீட்டின் பொருளாதார நிலை இருந்தது. ஆனபோதும், அவரது தீரா ஆர்வத்தால் தொடர்ந்து அவரை செஸ் பயிற்சிக்கு அனுப்பி வைத்தோம்,” என்கிறார் தந்தை ரமேஷ்.
ஐந்து வயது முதல் செஸ் விளையாடத் தொடங்கிய பிரக்னாநந்தா, அடுத்த ஐந்து ஆண்டுகளிலேயே சர்வதேச மாஸ்டர் ஆனார். எட்டு வயதுக்குட்பட்டோர் மற்றும் பத்து வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன்ஷிப் பெற்ற இவர், தற்போது உலகின் இளம் க்ராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
உலகின் முன்னணி மாஸ்டர்கள் பலர் பங்கேற்ற, இத்தாலியில் நடைபெற்ற கிரேடின் ஓபன் செஸ் தொடரில் வெற்றி பெற்று இந்த அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார். ஆரம்பம் முதலே தனது அபார திறமையால் எதிராளிக்கு சவால் அளித்து வந்த பிரக்னாநந்தா, 8-வது சுற்றில் இத்தாலி கிராண்ட் மாஸ்டரான மொரானி லூகா-வை எதிர்கொண்டார். இந்தச் சுற்றில் மிகவும் கவனமாக காய்களை நகர்த்திய அவர், மொரானி லூகாவை வீழ்த்தி கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதித்துள்ளார்.
இது குறித்து அவரது பயிற்சியாளர் ஜிஎம் ஆர்பி ரமேஷ் ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அளித்துள்ள பேட்டியில்,
“எனக்கு அறிமுகமில்லாத மாணவரான பிரக்னாநந்தா தனது கைகளை உயர்த்தி நான் கற்றுக்கொடுக்கும் அனைத்தையும் கற்க விரும்புவதாக தெரிவித்தார். சதுரங்கம் குறித்து எட்டு வயது சிறுவன் இவ்வாறு தனது விருப்பத்தை கூறி நான் இதுவரை கேட்டதில்லை.”
”அவரிடம் அபார ஞாபகசக்தி காணப்படுகிறது. முந்தைய விளையாட்டுகளை நன்றாக நினைவில் வைத்துள்ளார். இதனால் அடுத்தவர் அவரது தவறை திருத்துவதற்கு முன்பு அவரே தனது தவறுகளை திருத்திக்கொள்கிறார். விளையாட்டை அவர் ஆராயும் விதம் அவரது வயதிற்கு மீறிய செயலாகவே உள்ளது,” என ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்.
தற்போது, பிரக்னாநந்தாவின் வயது 12 ஆண்டு 10 மாதங்கள் ஆகும். இதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இளம் இந்திய வீரர் என்ற பெருமையோடு, ஒட்டுமொத்த அளவில் 2–வது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர், உக்ரைனின் செர்ஜி கர்ஜாகின் 2002–ம் ஆண்டு, தனது 12 ஆண்டு 7 மாதங்களில் கிராண்ட்மாஸ்டர் ஆனதே சாதனையாக இருந்தது. முன்னாள் உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தனது 18–வது வயதில் தான் கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்தார் என்பது இங்கே நினைவுக் கூரத்தக்கது.
”பிரக்னாநந்தா இன்றும் கார்டூன் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கிறார். அவர் 12 வயதே ஆன சிறுவன். அவர் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுவதால் அவரது முயற்சியின் முடிவு குறித்து நான் கவலைப்படமாட்டேன். இத்தாலியின் இறுதி சுற்றில் ட்ராவில் முடிந்த பிறகும் அவர் வருத்தப்படவில்லை. அமைதியாக சிரித்தவாறே மற்ற குழந்தைகளுடன் விளையாடினார். அவரது அணுகுமுறைதான் அவருக்குள் இருக்கும் சிறப்பான திறமையை வெளிக்கொண்டு வருகிறது. அவர் தன்னைக் குறித்த விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தனது வேலையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்,” என்கிறார் ரமேஷ்.
முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் பிரக்னாநந்தா, அடுத்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளாராம். இதற்கான முயற்சிகளை வரும் ஆண்டுகளில் மேற்கொள்ள இருப்பதாக அவர் கூறுகிறார்.
பிரக்னாநந்தாவின் திறமையை அறிந்த விஸ்வநாதன் ஆனந்த், அவருக்கு பாராட்டு தெரிவித்ததுடன் சென்னையில் சந்திப்போம் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதேபோல், பிரக்னாநந்தாவிற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து என்பது குறிப்பிட்ட வீரரின் திறமையை பறைசாற்றக்கூடிய ஒன்றாகும். ஆனால் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து எளிதில் கிடைத்து விடாது. அதற்கு செஸ் தரவரிசையில் 2,500 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். மேலும் மூன்று பெரிய தொடர்களில் தரவரிசையில் உயரிய நிலையில் உள்ள வீரர்களை வீழ்த்தி சாதிக்க வேண்டும். அதாவது இந்த வகையில் மூன்று தேர்வு நிலையை அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.