வீடு வீடாய் தர்மம் கேட்டு அலைந்தவர் இன்று ரூ.30 கோடி நிறுவனத்தின் உரிமையாளர்!

  By jaishree |7th Sep 2018
  பசி, பட்டினி கொடுத்த ஊக்கத்தால் ஏழ்மையை கார் ஓட்டியே கடந்ததுடன், இன்று ஆயிரம் கார்களுக்கு அதிபதியாகி உள்ள கடின உழைப்பாளரின் வாழ்க்கைக் கதை இது!
  Clap Icon0 claps
  • +0
   Clap Icon
  Share on
  close
  Clap Icon0 claps
  • +0
   Clap Icon
  Share on
  close
  Share on
  close

  இந்த தொழில்முனைவருடைய கதையை ஒருவரிடம் கூறவேண்டும் என்றால் எப்படி ஆரம்பிக்க வேண்டும்? சுட்டெரிக்கும் வெயிலின் கீழ் தள்ளுவண்டி தள்ளியவரது வசம் இன்று ஆயிரம் கார்கள் இருக்கின்றது என்றா? அல்லது பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர், இன்று பல பன்னாட்டு நிறுவனர்களுக்கு டஃப் காம்படிட்டராகியுள்ளார் என்று கூறுவதா? அல்லது அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரம் தேய்த்தவர், இன்று 150பேருக்கு வேலைக் கொடுத்திருக்கிறார் என்று கூறுவதா?

  ஏனெனில் அவர் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சந்தித்த சவால்களுக்கும் சற்றும் குறைவில்லாமல் இன்று சாதித்துள்ளார். பெங்களூரில் கார் வாடகை சேவையில் கொடிக் கட்டி பறக்கும் ப்ரவாசி கேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ரேணுகா ஆராதியாவின் முன்னாள் இன்னாள் வாழ்க்கையின் சுருக்கமே மேற்கூறிய வாக்கியங்கள்.

  ரேணுகா ஆராதியா அவருடைய அலுவலகத்தில் 

  ரேணுகா ஆராதியா அவருடைய அலுவலகத்தில் 


  ஒவ்வொரு நாளும் துயரத்தின் தினமே!

  பெங்களூரு அருகே ஆனைக்கால் வட்டத்தில் கோபசந்திரா கிராமத்தில் பிறந்தவர் ரேணுகா ஆராதியா. அவருடைய அப்பா, அப்பகுதியில் உள்ள முத்தியாலம்மா கோவில் பூசாரி.

  “எங்க அப்பா மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ள கோயிலில் எவ்வித நிலையான வருமானம் பெறாத பூசாரி. பூஜை முடிந்து அக்கம்பக்கத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று ராகி, கோதுமை, அரிசி போன்ற தானியங்களை தர்மமாக பெற்று, சந்தையில் அத்தானியங்களை விற்று பணமாக்கி வீட்டுக்கு கொண்டு வருவார். எங்க வீட்டுல மூணு பிள்ளைங்க, இரண்டு பசங்க. 

  "நானும் அப்பாவுடன் சேர்ந்து யாசகம் கேட்டு சென்ற கிராமம் எல்லாம் இப்போது, எலக்ட்ரானிக் சிட்டி,” என்கிறார்.

  ஆராதியாவை ஆறாவது படிக்கும் போது குடும்பத்தின் நிலையால் அந்த பகுதியில் உள்ள மூத்தவர் ஒருவரது வீட்டில் பணியாளனாக சேர்த்து விட்டிருக்கிறார். ஆராதியா பத்தாவது படித்து முடிக்கும் வரை, அவரது படிப்பு செலவுகளை பள்ளி ஆசிரியர்களே கட்டியுள்ளனர். அதற்காக, அவர் அந்த ஆசிரியர்களின் வீடுகளுக்கு சென்று பாத்திரம் மற்றும் துணிகளை துவைத்து கொடுக்கும் பணி செய்துள்ளார். தவிர, பெரியவரது வீட்டில் 2 பசு மாடுகளை மேய்த்து விட்டு, அவரையும் கவனித்து கொள்ளவேண்டும். 

   “அந்த தாத்தா உடல் முழுவதும் கொடிய தோல் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தார். நான் அவரை குளிப்பாட்டி, உடல் முழுவதும் மருந்து தடவி விடுவேன். பக்கத்தில் உள்ள கோயிலிலும் பூஜை செய்வேன். இந்த வேலையெல்லாம் முடிந்து தான் பள்ளிக்கு போவேன். இப்படியே ஒரு வருடம் படித்தேன்,” 

  எனும் அவர் புன்னகைத்துக் கொண்டே கூறினாலும், மகனின் நிலை கண்டு வருந்திய ஆராதியாவின் தந்தை அவரை பெங்களூருவின் சிக்பெட்டில் உள்ள மகந்தீரா மடத்தில் சேர்த்துவிட்டுள்ளார். ஆனால், அங்கு இங்கிருந்தது விட கொடுமை. நாளொன்றுக்கு இருவேளை மட்டுமே உணவு. காலை 8 மணிக்கும் இரவும் 8 மணிக்கும் என இருவேளைகள் மட்டுமே உணவளித்துள்ளனர். 

  “எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது. நாள் முழுவதும் பசியோடு இருப்பேன். படிப்பில் கவனமே போகலை. எப்படியாச்சும் எதாச்சும் சாப்பாடு கையில் அகப்பட்டறாதானு தேடிட்டு இருப்பேன். என் உடனிருந்த பசங்க எல்லாம் சேர்ந்து ரோட்டில் பழவியாபாரிகள் கொட்டிவிட்டு சென்றிருக்கும் மிஞ்சிபோன வாழைப்பழங்களை எடுத்து சாப்பிடுவோம். அப்படியே மூன்று ஆண்டுகள் மடத்தில் தங்கியிருந்தேன்.

  ஆசிரமத்தில் கட்டாயம் சமஸ்கிருதம் மற்றும் வேதங்களை கற்க வேண்டும். நான் வெகு விரைவில் கற்றுக் கொண்டேன். ஏன்னா, என்னுடன் பயிலும் மூத்த மாணவர்கள், வேதங்களை கற்றவர்கள் அருகில் நடக்கும் கல்யாணம், பெயர் சூடல் நிகழ்ச்சிக்கு சென்று பூஜை செய்துவிட்டு, அங்கே சாப்பிட்டுவிட்டு வந்துவிடும். ஆனால், அந்த வாய்ப்பை பெறுவது அவ்வளவு ஈசியில்லை. என்னுடைய சீனியர்களை தாஜா செய்து, அவர்களுடைய துணிகளை துவைத்து, அவர்களுடைய தனிப்பட்ட வேலைகளை செய்து தரவேண்டும்,” என்கிறார்.

  இளமைக்கால ரேணுகா ஆராதியா

  இளமைக்கால ரேணுகா ஆராதியா


  இறுதியில் பத்தாம் வகுப்பு முடிவில் சமஸ்கிருதத்தில் மட்டுமே தேர்ச்சி பெற, வீட்டுக்கு திரும்பி உள்ளார். அச்சமயத்தில், அவருடைய அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு, குடும்பத்தின் பொறுப்புகளை ஆராத்யாவிடம் கொடுத்துள்ளார் அவருடைய தாயார். படிப்பிலும் ஆராதியாவுக்கு நாட்டம் இல்லாமல் போக, வேலைக்கு செல்லத் தொடங்கி உள்ளார்.

  பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் ஆலை, ஐஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு, அட்லேப்சில் துப்பரவு பணியாளராக பணி சேர்ந்துள்ளார். பின்பு, அச்சிட்டு ஆலையில் பணி கிடைத்துள்ளது. அங்கு ஒரு மூன்று ஆண்டுகள். பின்னர், டிரேடிங் கம்பெனியில் பைகள், சூட்கேஸ்கள் ஆகியவற்றை பேக் செய்து தள்ளுவண்டியில் வைத்து பல கடைகளுக்குக் கொண்டுசேர்க்கும் வேலை. அவருடைய வேலை நேர்த்தி, அவரை சேல்ஸ் பொசிஷனுக்கு உயர்த்தியது. 

  கஷ்டங்களை கார் ஓட்டி கடந்தார்...

  சில மாதங்கள் அங்கு பணியாற்றிபிறகு, ஏன் சொந்தமாகத் தொழில் தொடங்கக் கூடாது? என்று தோன்றியுள்ளது. விளைவு சிறுக சிறுக சேமித்த பணத்தை முதலீட்டாக்கி, சைக்கிள் ஒன்றை எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக சென்று சூட்கேஸ்களுக்கு பை தயாரித்து கொடுத்துள்ளார். ஆனால், அத்தொழில் ஏறுமுகத்தை நோக்கவில்லை. முதலீட்டாக்கிய 30ஆயிரம் ரூபாயும் நஷ்டமாகியது. 

  மீண்டும் மாத வருமானத்துக்கு திரும்பியுள்ளார். அவருடைய அண்ணன் செக்யூரிட்டியாக பணிபுரிந்த நிறுவனத்தில், ஆராதியாவுக்கும் வேலை வாங்கி கொடுத்துள்ளார். மாதம் 600ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தவர், அவருக்கு 20 வயதாகும்போது தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவருடைய அம்மாவிடம் கூறியுள்ளார். ஏனெனில், திருமண வாழ்க்கை அவரை மேலும் பொறுப்புடையவனாக ஆக்கும் என்பது அவருடைய அனுமானம். 

  கூடுதல் வருவாய் ஈட்ட, தோட்ட வேலைகளையும், தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் வேலையினையும் செய்து வந்துள்ளார். ஒரு மரத்துக்கு 15ரூபாய் கூலி என நாளொன்றுக்கு 20 மரம் ஏறி இறங்கியுள்ளார். 
  ரேணுகா ஓட்டுனராக இருந்தபோது...

  ரேணுகா ஓட்டுனராக இருந்தபோது...


  அவருடைய நண்பர்கள் பலர், கார் டிரைவராக பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றுவந்துள்ளனர். அதனால், ஆராத்யாவும் கார் ஓட்டுனராக விருப்பப்பட்டிருக்கிறார். ஆனால், அவருக்கு கார் டிரைவிங் தெரியாது. வாழ்க்கையில் எப்படியாவது நிமிர்ந்து நின்றுவிடமாட்டோமா என்ற ஆராதியாவின் வெறி, அவரை டிரைவிங் கற்க வைத்து கார் ஓட்டுனர் வேலையையும் பெற்று தந்தது.

  “எல்லாமே நன்றாக சென்றது. எனக்கு டிரைவிங் லைசென்சும் கிடைத்தது. ஆனால், என்முதல் நாள் பணி பெரும் கொடுங்கனவாக முடிந்தது. எதிர்பாராது காரை திருப்பி, நிறுத்துவதற்கு பதிலாக கேட்டில் மோதிவிட்டேன். சில மணி நேரங்கள் மட்டுமே நிலைத்தது ஓட்டுனர் பணி. மீண்டும் செக்யூரிட்டி வேலைக்குச் சென்றேன்,” என்கிறார் ஆராதியா.

  அதுவரை பல தடைகளை தகர்ந்தெறிந்தெல்லாம், தொட்டதெல்லாம் தூளாகிறதே என்ற விரக்தியில் மனம் உடைந்து அழுதிருக்கிறார். அச்சமயத்தில், ஆராதியாவுக்கு ஆதரவு அளித்து, வேலையை கொடுத்திருக்கிறார் டாக்சி ஆபரேட்டர் ஒருவர். அவருக்கு தான் நன்றி கடன் பட்டிருப்பதாக தெரிவிக்கும் ஆராதியா, இம்முறையை தனதாக்கி கொண்டார். மீண்டும் செக்யூரிட்டி பணிக்கு திரும்பக்கூடாது என்ற வைராக்கியதுடன், வேலை செய்திருக்கிறார்.

  அவருக்கு கிடைத்த முதல் டிரிப்பிலே ஸ்லோ அண்ட் ஸ்டேடியாக ஓட்டி கஸ்டமர்களின் நன்பெயரை பெற்றிருக்கிறார். கிடைத்த நன்பெயர்களால், மற்றொரு போட்டி நிறுவனம் ஆராத்யாவை வேலைக்கு சேர்த்து கொண்டது. அங்கு காருடன் சேர்த்து, ஆம்புலன்ஸ் வேன் ஓட்டவும் செய்துள்ளார்.

  “இதுவரை இந்தியா முழுவதும் 300 இறந்த சடலங்ளை உரிய இடத்தில் ஒப்படைத்திருக்கிறேன். பல சமயங்களில் சம்பந்தப்பட்டவரது குடும்பத்தில் இருந்து யாரும் உடன் வரமாட்டார்கள். நான் தனியாக சடலத்தை வைத்து கொண்டு வண்டி ஓட்டியுள்ளேன்.” 
   சுற்றுலா குழுவுடன் ரேணுகா

   சுற்றுலா குழுவுடன் ரேணுகா


  ஆராதியாவுக்கு மற்றொரு டிராவல் கம்பெனியில் நல்ல சம்பளத்து பணி கிடைத்துள்ளது. அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வண்டி ஓட்டும் வாய்ப்பு கிடைத்தால், டாலர்களில் டிப்சும் கிடைத்தது. அவருடைய மனைவியும் துணி ஆலையில் பணிப்புரிந்துகொண்டிருந்துள்ளார். நான்கு ஆண்டுகள் ஆராதியா அந்த கம்பெனியில் பணிபுரிந்ததில் கிடைத்த சம்பளத்துடன், வங்கியில் லோன் பெற்று இண்டிகா காரை விலைக்கு வாங்கி சொந்தமாக ஓட்டியுள்ளார். சுற்றுலா பயணிகளிடம் பேசியும் செய்தித்தாள் படித்தும் ஆராதியா ஆங்கிலம் கற்றுக்கொண்டார். 

  அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் மற்றொரு காரை வாங்கி, பெங்களூருவில் இயங்கிய கால் டாக்சி நிறுவனத்துடன் இணைத்து ஓட்டியுள்ளார். அச்சமயத்தில் நண்பர் ஒருவர் மூலம், ‘இந்தியன் கால் டாக்சி’ என்ற நிறுவனம் விலைக்கு வருவதை பற்றி தெரிந்துள்ளார். 

  ஒரு நிறுவனத்தை கையகப்படுத்தல் பற்றி எந்த தெளிவும் இல்லை என்றாலும் தன்னிடம் இருந்த கார்களைவிற்று, 2006ம் ஆண்டு அந்நிறுவனத்தை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயுக்கு விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்துடன் 35 கார்கள் இணைக்கப்பட்டிருந்தன. மாதத்துக்கு ஒரு காருக்கு ரூ 1000 கமிஷன் கிடைக்கும் என்ற பட் சத்தில் மாதத்துக்கு மொத்தம் ரூ 35,000 வருமானம் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகியது. தொடக்கத்தில் சிரமத்தை சந்தித்தாலும் தொழில், மெல்ல வளர்ச்சி கண்டது. 

  தனது முதல் காரை வாங்கிய போது மனைவியுடன் சேர்ந்து ரேணுகா 

  தனது முதல் காரை வாங்கிய போது மனைவியுடன் சேர்ந்து ரேணுகா 


  “எங்களுயை முதல் கஸ்டமர் அமேசான் இந்தியா. அமேசான் இந்தியா நிறுவனம் அதன் தொழிலாளர்கள் பயணச் சேவைக்காக கார்களை ஒப்பந்தம் செய்தது. அவர்கள் சென்னையில் காலூன்றவும் உதவிப் புரிந்தனர். 

  ”சென்னையில் அமேசான் நிறுவனம் அமைத்தபோதும் 300 வாகனங்களை ஒப்பந்தம் செய்தது. அடுத்தடுத்து வால்மார்ட், அகாமாய், ஜெனரல் மோட்டார்சும் எங்களுக்கே வாய்ப்பளித்தது,” என்றார் ஆராதியா.

  அவருடைய டிராவல் கம்பெனிக்கு வைத்த பெயர் ’ப்ரவாசி கேப்ஸ்’. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து ப்ரவாசி கேப்சில் பள்ளி பேருந்துகளும் இணைந்து உள்ளன. 

  அச்சமயத்தில் தான் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் சந்தைக்கு அறிமுகமாகின. அதன் வருகையால், ஊரில் இயங்கிக் கொண்டிருந்த சிறு சிறு டிராவல் கம்பெனிகளுக்கு பெரும் அடியாக இருந்தது. 100, 200 என்ற எண்ணிக்கையில் கார்களை கொண்டு நிறுவனத்தை ஆரத்யா நடத்தியிருந்தால், அவருக்கும் அதே நிலையாக தான் இருந்திருக்கும். ஆனால், ஆரத்யாவின் வசம் 700 கார்கள் இருந்தனர். வளர்ந்து வரும் சந்தையில் கடும் போட்டியை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓனர் கம் டிரைவர் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

  சுற்றுலா பயணிகளுடன் ரேணுகா

  சுற்றுலா பயணிகளுடன் ரேணுகா


  “இத்திட்டப்படி, ரூ.50,000 முன்பணம் கட்டி புது காரை பெற்றுக் கொள்ளலாம். 36 மாதங்கள் டிரைவராக பணிபுரிய வேண்டும். 36 மாதங்களுக்கு முடிவில் காரை அவங்க பெயருக்கு பதிவு செய்து கொடுத்துவிடுவோம். அக்காலத்தில் அவர்கள் சம்பாதிப்பது அவர்களுடையது. நாங்கள் மாதாந்திர தவணை மட்டும் எடுத்துக் கொள்வோம். இத்திட்டத்தின் கீழ் 300 கார்கள் ப்ரவாசியுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெண்களும் இத்திட்டத்தில் சமஉரிமை உண்டு,” என்கிறார் ஆராதியா. அவரின், நிறுவனம் இன்று ஆண்டுக்கு ரூ30கோடி வருமானம் ஈட்டி வருகிறது.

  “நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். எத்தனை முறை உங்களால் சொல்லமுடியும் ‘ எனக்கு எந்த அனுபவமும் இல்லை, அதனால் நான் இதை எப்படி செய்வேன் என்று?' ஆரம்பத்தில், அதிக விமர்சனங்கள் மற்றும் குறைவான நல்லெண்ணம் இருக்கும். ஆனால் மெதுவாக விமர்சனம் மறைந்து விடும்.” 

  வாய்ப்புக்காக காத்திருந்த சமயத்தில் நிதி ரீதியாக எனக்கு அதில் எவ்வித பலனும் இல்லை என்றாலும், நான் எந்தவொரு வாய்ப்பையும் விடவில்லை. அச்சமயங்களில், இதற்கனைத்துக்கும் சேர்த்து டபுள் மடங்காக கடவுள் எனக்கு வழங்குவார் என்று உறுதியாக நம்பினேன். 

   இல்லையெனில், ஒரு செக்யூரிட்டி இன்று ரூ23 லட்ச மதிப்பிலான காரை ஓட்ட முடியுமா?” எனும் சறுக்கல்களை சாதனைகளாக்கிய ஆராதியா, கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் பலன் நிச்சயம் என்பதற்கான சிறந்த உதாரணம். 

  ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி நாயர் | தமிழில்: ஜெயஸ்ரீ