அரியவகை கேன்சர், 1 வருட போராட்டம், தொடர் கீமோ, வாழ ஓர் வாய்ப்பு: மீண்டும் நடிக்க வந்த இர்ஃபான் கான்!
‘என் உடல் சில நாட்கள் நன்றாகவும், சில நாட்கள் நரகமாக இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டே இருக்கிறேன்’ - இர்ஃபான் கான்
எதிர்பாராதது எதிர்பார்க்காத நேரத்தில் நிகழும் போதே வாழ்க்கையின் அர்த்தம் புரியும். நடிப்புத் துறையில் கோலோச்சும் நடிகர், பணம், பெயர், புகழுக்குப் பஞ்சமில்லை வாழ்வில் இன்னும் சாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்த இர்ஃபான் கானுக்கு 2018 மார்ச் மாதத்தில் வந்தது அந்த ஸ்பீடு பிரேக்கர்.
53 வயதாகும் இர்ஃபான் கான் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் வரை பிரபலமடைந்திருக்கிறார் என்றால் இது அத்தனைக்கும் அவருடைய சொந்த முயற்சியே காரணம்.

ஜெய்ப்பூரில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த இர்ஃபான் கானுடன் பிறந்தவர்கள் 3 பேர். நடிப்பின் மீது காதல் கொண்டிருந்த இர்ஃபான், தேசிய நாடகப் பள்ளியில் படிக்க விரும்பினார். விதி அவருடைய கனவுக்கு கைகொடுக்கவில்லை, இர்ஃபானின் தந்தை காலமாகிவிட, மகன் தன்னுடனே இருந்து குடும்பப் பொறுப்புகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார் அவருடைய தாய். தாயின் விருப்பப்படியே முதுகலை பட்டம் படித்துக் கொண்டிருந்தவருக்கு 1984ல் டெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் படிப்பதற்கு உதவித்தொகை கிடைத்தது. தாயாரை சமாதானப்படுத்தி ஒரு வழியாக நாடகப்பள்ளியில் சேர்ந்தார் இர்ஃபான்.
1987ல் பட்டம் பெற்ற பிறகு தூர்தர்ஷன், ஸ்டார் பிளஸ் சேனல்களின் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தார். 2001ம் ஆண்டு வெளியான ‘தி வாரியர்’ திரைப்படம் இர்ஃபானை உலக அரங்கில் அடையாளம் காட்டியது. அதற்கு முன்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அவை அவருக்கு எந்த புகழையும் தேடித்தரவில்லை.
ஸ்லம்டாக் மில்லினியர், லைஃப் ஆஃப் பை, லைஃப் இன் எ மெட்ரோ, தி நேம்சேக், நியூயார்க் தற்போது வெளியாகி இருக்கும் ‘அன்கிரேசி மீடியம்’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயற்கையாக நடிப்பவர், இர்ஃபானின் கண்களே அந்த கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் என்று திரை விமர்சகர்கள் பாராட்டுப் பத்திரங்கள் வாசித்தன.
சிறந்த வில்லன், சிறந்த துணை நடிகர் என பல்வேறு பிலிம்ஃபேர் விருதுகள், தேசிய விருதுகள் மட்டுமின்றி கலைத்துறையில் சிறந்த பங்களித்தமைக்காக உயரிய விருதான பத்ம விருதையும் பெற்றிருக்கிறார்.
கல்லடி படும் மரங்களே காய்த்து தொங்கும் என்பது போல நடிப்பில் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு பாத்திரத்திற்கு ஏற்ற நீர் போல கலைச் சேவை செய்து கொண்டிருந்த இர்ஃபானுக்கு 2018ல் காலம் ஒரு செக் வைத்தது.
பிப்ரவரி மாதத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர், சில காலம் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார். 30 ஆண்டுகாலம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தவருக்கு அந்த 15 நாட்கள் ரணமானதாக இருந்ததாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
வலிக்கு முன்னால் தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சுகள், ஆறுதல் வார்த்தைகள் என எதனாலும் என்னால் நிற்கமுடியவில்லை. கடவுளைவிட வலிதான் பெரியது!
"சில நேரங்களில் நீங்கள் விழித்தெழும்பும்போது வாழ்க்கை உங்களை ஓர் உலுக்கு உலுக்கியிருக்கும். கடந்த 15 நாள்களாக என் வாழ்க்கை சஸ்பென்ஸ் நிறைந்த கதையாக மாறியிருக்கிறது. அதில் கொஞ்சம்தான் எனக்குத் தெரியும். என்னை ஏதோ ஓர் அரிதான நோய் தாக்கியிருக்கிறது. நான் எப்போதும் விட்டுக்கொடுத்ததேயில்லை. எப்போதும்போல் இப்போதும் போராட்டத்தைத் தொடர்வேன்.”
ஒரு வாரம் அல்லது பத்து நாள்களில் என் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தவுடன் எனக்கு என்ன பிரச்னை என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அதுவரை தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற உங்களது வாழ்த்துகளே என்னை வாழ வைக்கும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இர்ஃபானின் ரசிகர்கள் பதற்றத்தோடு காத்திருந்த சமயத்தில் வெளிவந்தது அவரது பரிசோதனை முடிவுகள். அவருக்கு அரிய வகை புற்றுநோயான நியூரோ எண்டோகிரைன் புற்றுநோய் பாதித்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த நோயானது ரத்தத்துக்கு ஹார்மோன்களை அனுப்பும் செல்களைப் பாதிக்கும். சில நேரங்களில் அளவுக்கு அதிகமான ஹார்மோன்களை ரத்தத்துக்குள் அனுப்பி இதயநோய்கள், ரத்த அழுத்த பாதிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
அரியவகை நோய் தான் என்றாலும் அதிர்ந்து போகாமல் லண்டன் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார் இர்ஃபான். 2 மாதங்கள் தொடர் சிகிச்சை, கீமோ என வலிகளோடு போராடிக் கொண்டிருந்தார். அந்த நாட்கள் பற்றி தெரிவித்திருந்த அவர்,
“நான் வாழ்க்கையை வேறுவிதமாக விளையாடிக் கொண்டிருந்தேன். வேகமாக செல்லும் ஒரு ரயிலில் நான் பல கனவுகள், இலக்குகளோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன். ரயிலின் வேகத்தோடு நான் ஓடிக் கொண்டிருந்த போது யாரோ ஒருவர் திடீரென என் தோள் தட்டி நீங்கள் சேர வேண்டிய இடம் வரப் போகிறது நீங்கள் இறங்க வேண்டும் என்கிறார். நான் குழம்பி நிற்கிறேன், நான் இறங்க வேண்டிய இடம் இது இல்லை,” என்றேன்.
வாழ்க்கையின் ஓட்டத்தை இவ்வளவு அழகாக யாரால் விவரிக்க முடியும்.
வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை உணர்ந்தேன், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குப் பலமுறை சென்று வந்த பிறகு பயம், அச்சம், குழப்பம் விரட்டி இருக்கிறது. அப்போது தான் இர்ஃபான் உணர்ந்திருக்கிறார், இந்த புற்றுநோயிடம் நான் தோற்றுப் போய்விடக்கூடாது. நான் எனது காலை மிகவும் பலமாக ஊன்றி நிற்க வேண்டும்' என்று என் குடும்பத்தாரிடம் தெரிவித்திருக்கிறேன். 2019ம் ஆண்டு வலிகள் நிறைந்ததாக அவருக்குக் கடந்தது.
“நான் 2 ஆண்டுகள் இருப்பேனா அல்லது 8 மாதங்களா அல்லது வெறும் 4 மாதங்களா என்ற விளைவை அறியவில்லை. ஆனாலும் வாழும் நாட்கள் பற்றிய புரிதல் என்னைச் சரணடையவும், நம்பவும் வைத்திருந்தது. ஆனாலும் என்னுடைய தன்னம்பிக்கையை நான் இழக்கவில்லை. நான் வாழ்வதற்கான வாய்ப்பு அதிகரிக்குமானால் என் மனைவிக்காகவே வாழ விரும்புகிறேன் என்றும் இர்ஃபான் கூறி இருந்தார்.
இர்ஃபானின் மனைவி சுடபா ஒரு எழுத்தாளர், இவரும் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றவர்.

நடிகர் இர்ஃபான் கான்
சிகிச்சையிலேயே நாட்கள் சென்று கொண்டிருக்க 2019ம் ஆண்டு மே மாதத்தில் அந்த நற்செய்தியைத் தனது ரசிகர்களுக்குத் தெரிவித்தார் இர்ஃபான். வாழ்க்கை ஒரு சிறிய வாய்ப்பை தந்திருக்கிறது, புதிய தொடக்கத்தோடும் மீண்டும் அன்றாடப் பணிகளுக்குத் திரும்புகிறோம் என்று தெரிவித்திருந்தார்.
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர் ‘அன்கிரேசி மீடியம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படப்பிடிப்பின் போது வலியாலும், உடல் சோர்வாலும் அவதிப்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் நடித்திருக்கிறார்.
"நோயுடனான இந்த நாட்கள் ரோலர் கோஸ்டர் போல இருக்கிறது. நான் இப்போது நலமாக இருக்கிறேனா என்றுகூட சொல்லத் தெரியவில்லை. என் உடல் சில நாட்கள் நன்றாக இருக்கிறது, சில நாட்கள் நரகமாக இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டே இருக்கிறேன்,” என்று தைரிய உரமூட்டுகிறார் இவர்.

