புற்றுநோயை வென்ற பிரபலங்கள்...!

By sneha belcin|21st Oct 2018
இந்தியாவில், புற்றுநோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருந்த, போராடிக் கொண்டிருக்கும் பிரபலங்களின் கதைகளின் தொகுப்பு.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

புற்றுநோய் குறித்த ஆய்வுகளும், புற்றுநோய்க்கான தீர்வுகளாக புதுப்புது கண்டுபிடிப்புகளும் உலகம் முழுதுமே நடந்து கொண்டிருக்கின்றன. முன்னரை விட அதிகளவு விழிப்புணர்வு புற்றுநோயை குறித்து உருவாகியிருக்கிறது. இவையெல்லாமும் புற்றுநோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மேலும் வலிமையளிக்கும் என்றாலும், புற்றுநோயை போராடி வென்றவர்களின் கதை கொடுக்கும் ஆதரவு இன்னும் பலமானது.

இந்தியாவில், புற்றுநோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருந்த, போராடிக் கொண்டிருக்கும் பிரபலங்களின் கதைகளின் தொகுப்பு.

Cancer

1. கவுதமி 

”புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே முடங்கி விடாமல், அதை எதிர்த்து போராடி வெற்றி பெற வேண்டும்,” 

என்று கூறும் நடிகை கவுதமி, 15 வருடங்களுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதை எதிர்த்து போராடி சிகிச்சை பெற்று முழுமையாக குணம் அடைந்தார். அதன் பிறகு ‘லைப் வின்னர்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

புற்று நோயில் இருந்து முழுமையாக குணமடைய முடியும் என்பதற்கு தானே சாட்சி என்பார். புற்றுநோய் வந்து குணமடைந்து பலரும் இன்று வாழ்ந்து வருகின்றனர். எனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதை எதிர்த்து போராடி குணமடைய வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருத்தல் வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் கவுதமி.

கவுதமி
கவுதமி

புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழ்க்கையில் மனம் தளர்ந்து விடக்கூடாது. புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரிகளிலும் வசதி உள்ளது என்று அடிக்கடி சொல்கிறார் அவர்.


2. லிசா ரே

நடிகை லிசா ரேவுக்கு ரத்த வெள்ளை அணுக்களில் புற்றுநோய் இருப்பதாக 2009 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக இருந்த போதிலும், நம்பிக்கை இழக்காத லிசா, சிகிச்சை எடுத்துக் கொண்டார். 2010 ஆம் ஆண்டு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சைக்கு பிறகு புற்றுநோயை முழுதும் வென்று விட்டதாக அவர் அறிவித்தார்.

:புற்றுநோய் குறித்து பொதுவெளியில் சொல்வது பற்றி தனக்கு தயக்கம் இருந்தாலும், தனக்குக் கிடைத்த பேராதரவு நம்பிக்கையூட்டுவதாக இருந்ததாக,” அவர் தெரிவித்தார்.

தன்னுடைய புற்றுநோய் அனுபவங்களை எல்லாம் தி யெல்லோ டயரிஸ் எனும் ப்ளாக்கில் லிசா தொடர்ந்து பதிவு செய்து வந்தார். கூடவே, புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு உண்டாக்க நிறைய பிரச்சாரங்களில் பங்கேற்றார். புற்றுநோய் பற்றின ஆய்வுகளுக்கு உதவவும், புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களுக்கு நம்பிக்கையளிக்கவும் ‘ரே ஆஃப் ஹோப்’ எனும் பிரச்சாரத்தின் பெயரில் புடவைகளும் வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிசா ரே
லிசா ரே

3. மனிஷா கொய்ராலா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய் இருப்பதாக செய்தி வெளியான போது, அது பெரும் துயரச் செய்தியாக இருந்தது. 2012 ஆம் ஆண்டு, அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அமெரிக்காவில் ஆறு மாதங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டார். 2015 ஆம், தான் முழுதாக குணமாகிவிட்டதாக தெரிவித்த மனிஷா கொய்ராலா, அதில் இருந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்.


சிகிச்சை சமயத்தில் தான் மனம் தளர்ந்த போதும், தன்னுடைய அம்மா பெரும் ஆதரவாக இருந்ததாக சொல்லும் அவர், புற்றுநோய் குறித்து பேசுவது உங்களுக்கு வசதியாக இல்லாத சமயங்களில் நீங்கள் அதைப்பற்றி பேச வேண்டாம் - அந்த கூட்டத்திலிருந்து விலகி விடுங்கள் என்று சொல்கிறார். சமீபத்தில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ படத்திலும், ‘ டியர் மாயா’ படத்திலும் நடித்திருந்த மனிஷா கொய்ராலாவை பார்ப்பதற்கு பெரும் நிம்மதியாகவே இருந்தது.

மனிஷா கொய்ராலா
மனிஷா கொய்ராலா

4. அனுராக் பாசு

‘பர்ஃபி’ பட இயக்குநர் அனுராக் பாசு, ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2004 ஆம் ஆண்டு அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட போது, மருத்துவர்கள் அவருக்கு 50 % மட்டுமே உயிர்வாழும் வாய்ப்பு இருப்பதாக சொல்லியிருந்தனர். அதுவும், இரண்டு மாதங்கள் மட்டுமே அவர் உயிர் வாழ்வார் என்றும் தெரிவித்தனர். ஆனால், அனுராக் பாசு, புற்றுநோயை சாதாரண இருமல், சளியை போலத் தான் எடுத்துக் கொண்டார்.


புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட சமயத்தில் தான் ‘லைஃப் இன் அ மெட்ரோ’ மற்றும் ‘காங்க்ஸ்டர்’ ஆகிய சினிமாக்களுக்கு கதைகளை எழுதியதாக சொல்கிறார். தன்னுடைய புற்றுநோய் அனுபவத்தை கூட ஒரு திரைக்கதையாக்கப் போவதகாவும் அவர் கூறியிருக்கிறார்.

அனுராக் பாசு
அனுராக் பாசு

5. இர்ஃபான் கான்

பாலிவுட்டில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் பிரம்மாண்ட வேடங்கள் ஏற்று நடித்தவர் இர்ஃபான் கான். தன்னுடைய யதார்த்த நடிப்பினால் உலகம் முழுதுமே ரசிகர்களை சம்பாதித்தவர். இர்ஃபான் கானுக்கு ந்யூரோ எண்டோக்ரைன் புற்றுநோய் எனும் அரிய வகை புற்றுநோய் இருக்கும் செய்தி வெளியானது அவருடைய ரசிகர்களுக்கு எல்லாம் அதிர்ச்சியளிப்பதாகவும், வேதனையளிப்பதாகவும் இருந்தது.

இந்நிலையில், லண்டனில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இர்ஃபான் கான், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 

“நான்கு முறை கீமோதெரபி செய்யப்பட்டிருக்கிறது. ஆறு கீமோவிற்கு பிறகு ஸ்கான் செய்து பார்க்க வேண்டும். அப்போது தான் தெரியும். எதுவுமே உறுதியாகவில்லை. திடீரென நான் ‘ எப்போது வேண்டுமானாலும் உயிர் போக வாய்ப்பிருக்கிறது, என்று யோசிக்கலாம். ஆனால், அந்த யோசனையை எப்படி தவிர்ப்பது என்று எனக்கு தெரியும்,” என்று சொல்லியிருக்கிறார்.
இர்ஃபான் கான்
இர்ஃபான் கான்

6. சோனாலி பிந்த்ரே

பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே, கடந்த ஜூலை மாதம், தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பாலிவுட் ரசிகர்கள் பெரும் கவலைக்கு ஆளானாலும், மொத்த பாலிவுட் உலகமும் அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர். சோனாலி பிந்த்ரேவும், தன்னுடைய இந்த போராட்டத்தின் முடிவில் ஒரு நல்ல எதிர்காலம் காத்திருப்பதகாவே நினைத்து, சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.


புற்றுநோய் இருப்பது கண்டறியபட்டால் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடங்கி, வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் அதை எவ்வாறு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது வரை தன் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் பொதுவெளியில் பகிர்வதன் மூலம் பலருக்கு நம்பிக்கையளிப்பவராக இருக்கிறார். சமீபத்தில் கூட, கீமோதெரப்பிக்காக தான் செய்து கொண்ட ஹேர்-கட்டை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.

சோனாலி பிந்த்ரே
சோனாலி பிந்த்ரே

அக்டோபர் மாதம் சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம். உலகம் முழுவதும் இது குறித்து பரவலான விழிப்புணர்வு உண்டாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.ஒரேடியாக புற்றுநோய்க்கு பதில் கிடைத்துவிடவில்லை என்றாலும், எண்பதுகளின் திரைப்படங்களில் ‘புற்றுநோய்’ என்ற வார்த்தையை சொல்லக் கேட்டதும் மக்கள் அதிர்ச்சியில் உறைவது போன்ற நிலை தற்போது இல்லை. இந்நிலையில், தங்கள் போராட்டத்தின் வழியே மக்களுக்கு நம்பிக்கையூட்டும் இந்த பிரபலங்களின் கதைகள் நிறைய பேரை சென்றடைய வேண்டும்!