இந்தியாவின் மொத்த ஜிடிபி-யில் 10% அம்பானியின் சொத்து மதிப்பு - டாப்-10 இந்திய குடும்ப வணிகங்கள் பட்டியல்!
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% அளவு அம்பானியின் குடும்பச் சொத்து, அதாவது, 309 பில்லியன் டாலர்கள். ரூபாய் மதிப்பில் சொல்ல வேண்டுமென்றால் ரூ.25.75 லட்சம் கோடி என்று பார்க்லேஸ் - ஹூருன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தங்களது இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு ரூ.5454 கோடியை அவிழ்த்து விட்ட அம்பானி குடும்பத்திற்கு இந்த செலவெல்லாம் வெறும் ஜுஜுபிதான். ஏனெனில், அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% அளவு அம்பானியின் குடும்பச் சொத்து, அதாவது, 309 பில்லியன் டாலர்கள். ரூபாய் மதிப்பில் சொல்ல வேண்டுமென்றால் ரூ.25.75 லட்சம் கோடி என்று பார்க்லேஸ் - ஹூருன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியலில், அம்பானி குடும்பம் முன்னணியில் உள்ளது. ஹூருன் அறிக்கையின் படி, பஜாஜ் குடும்பம் ரூ.7.13 டிரில்லியன் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக, பிர்லா குடும்பம் ரூ.5.39 டிரில்லியன் சொத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
அதன்படி, இந்தியாவின் முதல் மூன்று வணிக குடும்பங்களின் கூட்டு மதிப்பு, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமானதாக உள்ளது. அதானி குடும்பத்தின் சொத்து ரூ.15.44 டிரில்லியனாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டியலில் உள்ள இந்தியாவின் முதல் பத்து வணிகக் குடும்பங்களின் மொத்த மதிப்பு ₹6,009,100 கோடி. இந்தியாவின் வணிகத் துறையில் குடும்பம் சார்ந்த நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
2024 பார்க்லேஸ் பிரைவேட் க்ளையண்ட்ஸ் ஹுருன் இந்தியாவின் மிக மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் மொத்த மதிப்பு ₹130 லட்சம் கோடி. இந்த எண்ணிக்கை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மிஞ்சுவதாக உள்ளது.
இந்தியாவின் முதல் 10 மதிப்பு மிக்க குடும்ப வணிகங்கள்:
- அம்பானி குடும்பம்
- பஜாஜ் குடும்பம்
- குமார் மங்கலம் பிர்லா குடும்பம்
- ஜிண்டால் குடும்பம்
- நாடார் குடும்பம்
- மஹிந்திரா குடும்பம்
- டானி குடும்பம், சோக்ஸி குடும்பம் மற்றும் வக்கீல் குடும்பம்
- பிரேம்ஜி குடும்பம்
- ஜீவ் சிங் குடும்பம்
- முருகப்பா குடும்பம்
முதல் மூன்று குடும்ப வணிகங்களின் மொத்த மதிப்பு 460 பில்லியன் டாலர்கள். இப்பட்டியலில் சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான குடும்பம் ரூ.4.71 டிரில்லியன் மதிப்பில் நான்காவது இடத்திலும், நாடார் குடும்பம் ரூ.4.30 டிரில்லியன் மதிப்பில் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. முதல் 10 குடும்ப வணிகங்களின் பட்டியலில் நாடார் குடும்பத்தைச் சேர்ந்த ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்துறைத் தயாரிப்புகள் துறையில் 28 நிறுவனங்களின் மதிப்பு ரூ.458,700 கோடியும், ஆட்டோமொபைல் துறையில் 23 நிறுவனங்களும், மருந்துத் துறையில் 22 நிறுவனங்களும் முறையே ரூ.1,876,200 கோடி மற்றும் ரூ.7,88,500 கோடி மதிப்பில் உள்ளன. ஹல்திராம் ஸ்நாக்ஸ் மதிப்பு ரூ.63,000 கோடி, இது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனமாக உள்ளது.
ரியல் எஸ்டேட் மேஜர்கள், டிஎல்எஃப் லிமிடெட் ரூ.2,04,500 கோடி, மேக்ரோடெக் டெவலப்பர்கள் ரூ. 1,12,200 கோடி, ஆகியவை மிகவும் மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் குடும்ப வணிகங்களாக அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.