இயற்கை விவசாயத்தில் கலக்கும் எம்பிஏ பட்டதாரி - ‘ஆர்கானிக்’ வெல்லம் மூலம் அசத்தல் வருவாய்!
திருப்பதியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி ஒருவர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிய விருப்பமின்றி இயற்கை விவசாயித்தில் களமிறங்கி கலக்கி வருகிறார்.
திருப்பதியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி ஒருவர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிய விருப்பமின்றி விவசாயித்தில் களமிறங்கி கலக்கி வருகிறார். குறிப்பாக, இயற்கை வேளாண்மை முறையில் விளைவித்த உணவுப் பொருட்களை மதிப்புக் கூட்டி அதிக லாபம் ஈட்டி வருகிறார்.
திருப்பதியைச் சேர்ந்த 27 வயது முக்கு ரோஹித் ரோச்சன், விசாகப்பட்டினத்தில் எம்பிஏ படித்து முடித்த கையொடு தந்தையின் வழியில் விவசாயம் செய்து லாபம் ஈட்டி வருகிறார். முக்கு ரோஜித் ரோச்சனின் தந்தை ஒரு விவசாயி. அப்பாவிடம் பெற்ற உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலின்படி கடந்த 4 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் ரோஹித், விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து அதிக வருமானம் ஈட்டி வருகிறார்.
எம்பிஏ பட்டதாரி டூ விவசாயி:
திருப்பதி மாவட்டம், ராமச்சந்திராபுரம் மண்டலத்தில் உள்ள கட்டகிண்டா வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் முக்கு ரோஹித் ரோச்சன். இவரது தந்தை தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். எம்பிஏ பட்டதாரியான ரோஹித்திற்கு, தந்தையைப் போல் தானும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை உருவானது. எனவே, 4 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்ய ஆரம்பித்த ரோஹித், தந்தையைப் போலவே ஜீவாமிர்தம், கானா ஜீவாம்ருதம், மாட்டுச் சாணம் மற்றும் பிற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற முடிவெடுத்த ரோஹித், தனது விளைநிலங்களில் இருந்து கிடைக்கக்கூடிய நிலக்கடலை, பயிறு வகைகள் மற்றும் கரும்பு ஆகியவற்றை விற்பனை செய்ய திருப்பதியில் ‘ஆர்யாஸ் நேச்சுரல் ஃபார்மிங் ப்ராடக்ட்ஸ்’ என்ற கடையையும் நடத்தி வருகிறார். தனது நிலத்தில் விளையும் கரும்புகளை கொண்டு ரோஹித் தயாரித்து வரும் ஆர்கானிக் வெல்லத்திற்கு மார்க்கெட்டில் நல்ல டிமெண்ட் உள்ளது.
திருப்பதியில் உள்ள வியாபாரிகளுக்கு தரமான கரும்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாண்டியா, மைசூர், அனகப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து மரக்கன்றுகளை வரவழைத்து கரும்பு சாகுபடி செய்து வருகிறார். 4 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு ஏக்கருக்கு 35,000 டன் மகசூல் பெறுகிறார்.
அதனை கரும்பாக விற்பனை செய்வதை விட மதிப்புக் கூட்டப்பட்ட பொருளான வெல்லமாக தயார் செய்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டார். எனவே, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கரும்பில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் வெல்லத்தை தனது கடையில் வைத்து விற்பனை செய்து வருகிறார். இதனால், இரட்டிப்பு லாபம் அடைந்து வரும் ரோஹித், சோஷியல் மீடியாவை பயன்படுத்தியும் நாட்டின் பட்டி, தொட்டி எல்லாம் தனது விளைபொருட்களை விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருகிறார்.
“பொதுமக்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை வழங்க இயற்கை விவசாய முறைகளைப் பயன்படுத்தி பயிர்களை பயிரிடத் தொடங்கினேன். நாங்கள் நல்ல வரவேற்பைப் பெறுகிறோம். அத்துடன், இயற்கையான பொருட்களை விற்பனை செய்வதால் கஸ்டமர்களும் எங்களைப் பாராட்டுகிறார்கள். பெங்களூரு, புனே மற்றும் பிற பகுதிகளிலிருந்தும் ஆர்டர்களைப் பெறுகிறோம். ஆர்கானிக் பொருட்களுக்கான தேவை மெதுவாக அதிகரித்து வருவதால், இப்போது எங்கள் விவசாயத்தை விரிவுபடுத்தவும், திருப்பதியில் ஆர்கானிக் காய்கறி விற்பனையை தொடங்க திட்டமிட்டு வருகிறோம்.”
ரோல் மாடலான ரோஹித்:
சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து மாதந்தோறும் லட்சங்களில் வருவாய் ஈட்டும் ரோஹித் அப்பகுதி இளைஞர்களுக்கு நல்ல முன்னூதாரணமாக மாறியுள்ளார். ரோஹித் மூலமாக உத்வேகம் பெற்ற இளைஞர்கள் பலரும் தங்களது கார்ப்பரேட் வேலையை உதறித் தள்ளிவிட்டு, விவசாயத்தில் களமிறங்கி வருகின்றனர்.
இரும்புச்சத்து நிறைந்த வெல்லம் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. ஆர்கானிக் வெல்லத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் உடலில் அமில சமநிலையை பராமரிக்க உதவுகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதில் மிதமான அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் இருப்பதால் இரத்தத்தை சுத்தப்படுத்தவும், வாத நோய்களை தடுக்கவும், பித்த கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.
எனவே, முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ரோஹித்தின் வெல்லத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி