ஆப்பிளின் புதிய சிஓஓ ஆக நியமனம் ஆகியுள்ள இந்தியர்- யார் இந்த சபீக் கான்?
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஓஓ ஆக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபீக் கானை நியமித்துள்ளார் சிஇஓ டிம் குக். இதன் மூலம், உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இந்தியர் ஒருவர் அடியெடுத்து வைக்கிறார்.
ஆப்பிளின் தலைமைத்துவத்தில் ஒரு பெரியமாற்றம் நிகழ்ந்துள்ளது. நீண்டகால செயல்பாட்டுத் தலைவராகயிருந்த ஜெஃப் வில்லியம்ஸ் இந்தாண்டு இறுதியில் ஓய்வு பெறவுள்ளதை அடுத்து, நிறுவனத்தின் புதிய சிஓஓ ஆக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபீக் கானை நியமித்துள்ளார் சிஇஓ டிம் குக். இதன் மூலம், உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனத்தில் மிகவும் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இந்தியர் ஒருவர் அடியெடுத்து வைக்கிறார்.
30 ஆண்டுகால ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள சபீக் கான், நிறுவனத்தின் உலகளாவிய விநியோகச் சங்கிலியை உருவாக்குவதிலும் நிர்வகிப்பதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தில் பிறந்து உலகின் பெரும் நிறுவனமான ஆப்பிளில் உயர்ந்த பதவியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கியிருப்பது உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திறமையாளர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதக் குறிக்கிறது.
சபீக் கானின் தலைமையின் கீழ், ஆப்பிள் அதன் விநியோகச் சங்கிலி மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் புதிய செயல்பாட்டுத் தலைவரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே...

உ.பி டூ கலிபோர்னியா - யார் இந்த சபீக் கான்?
1966ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் பிறந்தவர் சபீக் கான். அவருடைய பத்து வயது வரை உத்திரபிரதேசத்தில் வளர்ந்து ஆரம்பக்கல்வியை முடித்துள்ளார். பின்னர், 5ம் வகுப்பு முடித்த பின் அவரது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். அங்கிருந்து அவர் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் இயந்திர பொறியியலில் இரட்டை இளங்கலைப் பட்டங்களைப் பெற்றார், அதைத் தொடர்ந்து ரென்சீலர் பாலிடெக்னிக் நிறுவனத்தில் இயந்திர பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஆப்பிளுடனான அவரது பயணம் 1995ம் ஆண்டு தொடங்கியது. நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து, ஆப்பிளின் ஒவ்வொரு புதுமையான தயாரிப்புகளையும் சந்தைக்கு வழங்குவதில் பீக் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஆப்பிளில் இணைந்து பணியாற்றுவதற்கு முன்பாக அவர், GE பிளாஸ்டிக்கில் பயன்பாட்டு மேம்பாட்டு பொறியாளராகவும், முக்கிய கணக்கு தொழில்நுட்பத் தலைவராகவும் பணியாற்றினார்.
ஆப்பிள் நிறுவனத்தில் கொள்முதல் குழுவின் ஒரு பகுதியாக அவரது பயணத்தைத் தொடங்கிய சபீக், இறுதியில் 2019ம் ஆண்டில் செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்
மேலும், ஆப்பிளின் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் பொறுப்பாளராக உள்ளார். தயாரிப்பு தரத்தை உறுதிசெய்து திட்டமிடல், கொள்முதல், உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் தயாரிப்பு நிறைவேற்றும் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறார். அத்துடன் உலகெங்கிலும் உள்ள உற்பத்தி வசதிகளில் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் மற்றும் ஆப்பிளின் சப்ளையர் பொறுப்புத் திட்டங்களையும் மேற்பார்வையிடுகிறார்.
பசுமை உற்பத்தியை ஊக்குவிக்கவும், வளங்களைப் பாதுகாக்கவும், கிரகத்தைப் பாதுகாக்கவும் சப்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து ஆப்பிளின் சுற்றுச்சூழல் முயற்சிகளுக்கும் அவரது தலைமை நீட்டிக்கப்பட்டது.

சபீக் கானை ஏன் தேர்வு செய்தார் டிம் குக்?
ஆப்பிள் வெளியிட்ட அறிக்கையின்படி, தற்போது சிஓஓ ஆக உள்ள ஜெஃப் வில்லியம்ஸ் இந்த மாத இறுதிக்குள் அவரது பொறுப்புகளை சபீக் கானுக்கு மாற்றி இந்தாண்டு இறுதியில் ஓய்வு பெற உள்ளார். அந்த அறிவிப்பில், டிம் குக், சபீக் கானை ஒரு "புத்திசாலித்தனமான ஸ்ட்ராடஜிஸ்ட்" என்றும் ஆப்பிளின் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் முக்கிய கட்டமைப்பாளர்களில் ஒருவர், என்றும் பாராட்டினார்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உற்பத்தி விரிவாக்கம் மற்றும் நிலைத்தன்மை முயற்சிகளில் கானின் பணியை குக் எடுத்துரைத்தார். ஆப்பிள் அதன் கார்பன் தடத்தை 60% க்கும் அதிகமாகக் குறைப்பதில் பெரும் பங்காற்றியவர் சபீக் என பெருமையுடன் கூறினார் டிம்.
"சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் எங்கள் லட்சிய முயற்சிகளை அவர் முன்னேற்றியுள்ளார். ஆப்பிளின் கார்பன் தடயத்தை 60 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்க உதவினார். எல்லாவற்றிற்கும் மேலாக, சபீக் அவரது இதயத்தாலும் மதிப்புகளாலும் முன்னணியில் உள்ளார். மேலும், அவர் ஒரு விதிவிலக்கான தலைமை இயக்க அதிகாரியாக இருப்பார் என்பது எனக்குத் தெரியும்," என்று அவர் மேலும் கூறினார்.
ஆப்பிளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கானின் திறனில் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார் டிம் குக். இந்த மாற்றத்தின் மூலம், ஆப்பிளின் வடிவமைப்புக் குழு நேரடியாக டிம் குக்கிடம் அறிக்கை அளிக்கத் தொடங்கும். அதே நேரத்தில், உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர் பாத்திரங்களில் ஒருவராக இந்தியர் ஒருவர் அடியெடுத்து வைக்கிறார்.
America party: புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்: கட்சியில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் வைபவ் தனேஜா யார்?

