Explainer - ‘துணிவு’ படத்தில் காட்டுவது போல் Mutual Funds பாதுகாப்பானவை இல்லையா?
'துணிவு’ திரைப்படத்தில் சீட்டுக்கம்பெனி நடத்தி பணத்தை திருடுவது போல மியூச்சுவல் பண்ட் நிறுவனம் நடத்தப்படுவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய ஆர்வம் காண்பிக்கும் இந்த நேரத்தில் இப்படியான கருத்து சரியா?
கடந்த சில நாட்களாக ’துணிவு’ படத்தில் மியூச்சுவல் ஃபண்டில் (Mutual Funds) நடக்கும் மோசடி குறித்து பேசப்பட்டிருந்தது பரவலாகியது. ஆனால், நான் படத்தை பார்க்காமல் எப்படி எழுதுவது என்னும் காரணத்தால் எழுதாமல் இருந்தேன். இது துணிவு படத்தின் விமர்சனம் அல்ல, துணிவு வெற்றி அல்லது தோல்வி என்று க்ளெய்ம் செய்யப்போவதும் இல்லை.
ஆனால், துணிவு படத்தில் கூறப்பட்டிருக்கும் முதலீடு மோசடிகள் உண்மையா என்பதை மட்டும் பார்க்கலாம்...
Mutual Funds முதலீடுகள் ஆபத்தானதா?
ஒரு வங்கியும் மற்றொரு நிறுவனமும் கூட்டாக இணைந்து மியூச்சுவல் பண்ட் தொடங்குகிறது. இந்த பணத்தை நிறுவனர்களுக்குச் சொந்தமான போலி நிறுவனங்களில் (Shell companies) முதலீடு செய்யப்பட்டுகிறது. அந்த போலி நிறுவனங்கள் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டு அந்த பணத்தை வங்கி மற்றும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முறைகேடாக எடுத்துக் கொள்கின்றன. இந்த பணத்தை எப்படி மீட்டெடுக்கிறார்கள் என்பதுதான் துணிவு படத்தின் மையக்கருத்து.
இது ஒரு கமர்ஷியல் படம். இந்த படத்தில் அவ்வளவு லாஜிக் பார்க்க வேண்டுமா? இதற்கு இவ்வளவு எதிர்ப்புக்குரல்கள் வெளியாக வேண்டுமா எனும் கேள்விகளில் நியாயம் இல்லை.
இப்படத்தில் சீட்டுக்கம்பெனி நடத்தி பணத்தை திருடுவது போல மியூச்சுவல் பண்ட் நிறுவனம் நடத்தப்படுகிறது என்னும் பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய ஆர்வம் காண்பிக்கும் இந்த நேரத்தில் இப்படியான பிம்பம்தான் தவறு.
தற்போதைய சூழலில் இந்தியாவில் 47 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவை இன்னும் செயல்பாட்டினைத் தொடங்கவில்லை. இதுதான் சந்தை நிலவரம்.
முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது, மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தொடங்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. அந்த விதிமுறைகளுக்குள் செல்வது தேவையில்லை, படத்தில் கூறப்பட்டிருப்பதை மட்டும் பார்க்கலாம்.
1. மொத்தமாக முதலீடு செய்ய முடியுமா?
படத்தில் கூறப்பட்டிருப்பதை போல ஒரு பண்டில் திரட்டப்படும் பணத்தை அந்நிறுவனம் மொத்தமாக எதிலும் முதலீடு செய்ய முடியாது. ஒரு பங்கில் அதிகபட்சம் 10 சதவீதம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். வாதத்துக்கு 25 நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது என்றால் 25 போலி பட்டியல் நிறுவனங்களில் முதலீடு செய்வது என்பது சாத்தியமற்றது.
ஸ்பான்ஸர், ட்ரஸ்டி, அஸெட் மேஜேஜ்மெண்ட் கம்பெனி மற்றும் கஸ்டோடியன் என பல விதிமுறைகளை செபி உருவாக்கி இருக்கிறது. இதைத் தாண்டி முதலீட்டாளர்கள் பெரியளவில் பணத்தை தவறாக கையாண்டு விட முடியாது.
2. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இது யாருக்கானது?
மியூச்சுவல் ஃபண்ட் யாருக்கான புராடக்ட் என்பதிலும் குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது துணிவு. ஒரு இடத்தில் ’இது அப்பர் மிடில்கிளாஸ் புராடக்ட், இதையெல்லாம் நாம் எப்படி விற்க முடியும்’? என்னும் கேள்வியை மியூச்சுவல் பண்ட் பணியாளர் எழுப்புவார். ஆனால், அடுத்த சில காட்சிகளில் சாதாரண மக்கள் முதலீட்டாளராக இருப்பார்கள். அப்படியானால் சாதாரண மக்களுக்குத் தேவையில்லாத புராடக்டை விற்றுவிட்டார்கள் என்னும் புரிதல் உருவாகிறது.
மியூச்சுவல் பண்ட் அனைத்துதரப்புக்குமானது. ரூ.500 கூட இதில் முதலீடு செய்ய முடியும் என்பதுதான் உண்மை.
3. இதில் வருவாய் எப்படி?
மியூச்சுவல் பண்ட் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்பதால் இதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை விளம்பரபடுத்தக் கூடாது. இதுவரை எந்த விளம்பரம் அல்லது போஸ்டர் எதிலும் வருமான விவரங்களுடன் அறிவிப்பை பார்க்க முடியாது. இதுதான் எதார்த்தம்.
ஆனால், படத்தில் வில்லன் பேசும் வசனத்தை கவனித்தார்களா இல்லையா எனத் தெரியவில்லை.
’மக்கள் ஒரு பொய்யை நம்ப ஆரம்பித்தார்கள் என்றால் வியாபாரிகள் அதனை விற்கத் தொடங்குவார்கள்,’ என்று வசனம் இருக்கும். இதில் எது பொய்? மியூச்சுவல் பண்டில் வருமானம் பொய்யா, மியூச்சுவல் பண்ட் என்பதே பொய்யா?
மியூச்சுவல் பண்டில் ரிஸ்குக்கு ஏற்ற வண்ணம் குறிப்பிடப் பட்டிருக்கும், டிஸ்ட்ரிபியூட்டர்கள் எவ்வளவு வருமானம் பெறுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரியும். டிஸ்ட்ரிபியூட்டர்களே இல்லாத டைரக்ட் பிளான்களும் உண்டு. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து மியூச்சுவல் பண்ட் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டுகொண்டே வந்திருக்கிறது. இப்போதுதான் மக்கள் முதலீடு செய்யத் தொடங்கும் இந்த நேரத்தில் அபாயக் கருத்தை விதைத்திருக்கிறது துணிவு.
சரி அப்போ மியூச்சுவல் ஃபண்ட்களில் சிக்கலே இல்லையா?
1. இருக்கிறது. ஆனால், அது மோசடி அல்ல. பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அறிமுகம் செய்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்திருந்த கடன் பத்திரங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை வழங்கவில்லை. இந்த செய்தியை அறிந்த முதலீட்டாளர்கள் பலர் குறிப்பிட்ட திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்கத் தொடங்கினார்கள். தேவையில்லாத சலசலப்பு ஏற்பட்டதால் அந்த திட்டம் முடக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் முதலீட்டாளர்களால் பணம் எடுக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு பிறகு தற்போது பணம் முழுமையாக முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.
2. இரண்டாவது, ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டில் ஒரு சிக்கல் இருந்தது. ஃபண்ட் மேனேஜர்கள் ஒரு பங்கினை வாங்குவது என முடிவெடுத்த பின்பு, அந்தத் தகவலை வைத்து சொந்தமாக லாபமீட்ட திட்டமிட்டனர். இது தெரிந்தவுடன் அந்த பங்கு மேனேஜர்கள் நீக்கப்பட்டனர்.
3. மூன்றாவதாக டிஹெச்எப்எல் (DHFL) மியூச்சுவல் ஃபண்ட் விவகாரம். வங்கி அல்லாத நிதி நிறுவன குழுமத்தை சேர்ந்த டிஹெச்எப்எல் சிக்கலில் மாட்டிக்கொண்டது. அதனால் அந்த குழுமத்தை சேர்ந்த டிஹெச்எப்எல் பிரமெரிக்கா மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் தடுமாறியது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தை பிஜிஐஎம் இந்தியா மியூச்சுவல் பண்ட் நிறுவனம் வாங்கியது.
தற்போது இந்த பண்ட் நிறுவனம் ஒரளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுபோல மியூச்சுவல் பண்ட்களில் சிற்சில சிக்கல்கள் இருந்தாலும் முதலீடு செய்யக் கூடாத திட்டம் இது என்றெல்லாம் சினிமாவில் காட்சிப்படுத்தி இருக்க வேண்டாம். தற்போது இருக்கும் பலவிதமான திட்டங்களில் மியூச்சுவல் பண்ட் என்பது எளிமையானதாகவும் அதிக விதிமுறைகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் முன்பு கவனிக்கவேண்டியவை?
- சரியான ஆலோசகரை சந்தித்து உரையாடுவது அவசியம்.
- உங்கள் (முதலீட்டாளரின்) ரிஸ்க் எடுக்கும் அளவு எவ்வளவு என்று தெரிந்து, ரிஸ்குக்கு ஏற்ற திட்டங்களில் முதலீடு செய்யவும்.
- வருமான உத்தரவாதம் என யாரும் கொடுக்க மாட்டார்கள். உத்தரவாதத்தினை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்.
- உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் செல்லும், வங்கிக்கணக்குக்கு பணம் திரும்பி வரும். ரொக்கத்தில் முதலீடு கிடையாது.