கேன்சர் மரபணுக்களைக் கண்டறியும் புதிய கருவி – ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள் சாதனை!
சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த PIVOT கருவி புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணுக்களைக் கண்டறிந்து சிறப்பாக சிகிச்சையளிக்க உதவுகிறது.
சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த PIVOT என்கிற கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். தனிநபரிடம் புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணுக்களை இந்தக் கருவி கண்டுபிடித்துவிடும். அதன் அடிப்படையில், முறையான சிகிச்சைக்கு திட்டமிட இந்தக் கருவி உதவும்.
மரபணு மாற்றம், மரபணுவின் செயல்பாடு ஆகியவை பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கருவி கேன்சர் பாதிப்பிற்கு உள்ளான மரபணுக்களை அடையாளம் காண்கிறது.
இந்த ஆய்வின் முக்கியத்தைப் பற்றி ஐஐடி சென்னையைச் சேர்ந்த டாக்டர். கார்த்திக் ராமன் கூறும்போது,
“கேன்சர் என்பது ஒரு சிக்கலான நோய். இந்நோய் பாதித்த அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறை பொருத்தமானதாக இருக்காது. இப்படிப்பட்ட அணுகுமுறை பலனளிக்காது. ஒவ்வொரு தனிநபரின் தன்மையும் சிகிச்சை முறையும் மாறுபடும் என்பதால் இதுபோன்ற தனிநபர் சார்ந்த தரவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இயந்திர கற்றல் மாதிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தக் கருவி மிகச்சிறப்பாக கட்டிகளை வகைப்படுத்துகிறது. சென்னை ஐஐடி ஆய்வு மாணவரான மாளவிகா சுதாகர் கூறும்போது,
”சிகிச்சை தொடர்பான ஆய்வுகள் என்பது இன்னமும் ஆரம்ப நிலையிலேயே இருந்து வருகிறது. PIVOT கருவியின் மூலம் கண்டறியப்படும் மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் மேலும் விரிவடையும்,” என்று தெரிவித்திருக்கிறார்.
நோயாளிகளின் உடலில் புற்றுநோய் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொண்டால் நோயாளி விரைவில் நோயிலிருந்து மீள தேவையான சிகிச்சையைத் தீர்மானிக்க முடியும். இதுதொடர்பான முக்கியத் தகவல்களை இந்தக் கருவி வழங்குவதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஆகிய மூன்று வகையான புற்றுநோய்களைக் கண்டறியும் வகையில் ஐஐடி சென்னை ஆய்வுக் குழுவினர் PIVOT கருவியை வடிவமைத்துள்ளனர். வருங்காலத்தில் மற்ற கேன்சர் வகைகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.
2020ம் ஆண்டில் உலகளவில் உயிரிழந்தோரில் ஆறு பேரில் ஒருவர் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.