கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்ய ரோபோ வந்தாச்சு - தமிழகத்தில் பயன்படுத்த ஐஐடி திட்டம்!
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ள 10 இயந்திரங்களுக்கு, தூய்மைப் பணியாளர்களே ஆபரேட்டர்களாகப் பணிபுரிவார்கள்.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) ரோபோவான ‘ஹோமோசெப்’ (HomoSEP), இந்தியாவில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிப்பதற்காக இக்கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டு தற்போது களப் பணிக்குத் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மொத்தம் 10 இயந்திரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான இடங்களைக் கண்டறிவது தொடர்பாக தூய்மைப் பணியாளர்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ளனர்.
குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள சென்டர் ஃபார் நான் டிஸ்ட்ரக்டிவ் எவாலுவேஷனைச் (Centre for Nondestructive Evaluation) சேர்ந்த பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையில், ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை ஆசிரியர், ஐஐடி மெட்ராஸ் ஆதரவுடன் இயங்கி வரும் தொடக்க நிறுவனமான சொலினாஸ் இண்டக்ரிட்டி பிரைவேட் லிமிடெட் (Solinas Integrity Private Limited) ஆகியோரைக் கொண்ட குழுவினர் பல ஆண்டுகளாகப் பணியாற்றி இந்த ரோபோவை உருவாக்கி உள்ளனர்.
தூய்மைப் பணியாளர்கள், இந்தியாவில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிக்கப் பாடுபட்டுவரும் சஃபாய் கர்மசாரி ஆந்தோலன் (Safai Karamchari Andolan-SKA) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் ஆகியோருடன் இக்குழுவினர் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகின்றனர்.
தூய்மைப் பணியின்போது நிகழ்ந்த துயர சம்பவத்தில் கணவர்களைப் பறிகொடுத்த நாகம்மா, ருத் மேரி ஆகியோரின் தலைமையில் இயங்கி வரும் சுயஉதவிக் குழுக்களுக்கு, சஃபாய் கர்மசாரி ஆந்தோலன் (SKA) தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முதல் இரண்டு ஹோமோசெப் (HomoSEP) இயந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
மனிதக் கழிவுகளை அகற்றும்போது ஏற்படும் பாதிப்புகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்களைக் கொண்ட இதுபோன்ற சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி அவைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்படுத்துவது ஐஐடி மெட்ராஸ்-ன் தனித்துவமான முன்னோடி மாதிரியாகும்.
மேலும், 9 இயந்திரங்களை விநியோகிப்பதற்கான பணிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் முதன்மைத் திட்ட ஆய்வாளரும், ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் ஆசிரியருமான பேராசிரியர் பிரபு ராஜகோபால், ஹோமோசெப்-ஐ உருவாக்குவதன் பின்னணியில் உள்ள உந்துதல்களை விளக்கினார். அவர் கூறும்போது,
"பாதியளவு திடமாகவும், பாதியளவு திரவமாகவும் மனித மலத்துடன் உள்ள கழிவுநீர்த் தொட்டி மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு நிறைந்திருக்கும் போது நச்சு நிறைந்த சூழலைக் கொண்டிருக்கும். மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறைக்கு தடைகளும், தடை உத்தரவுகளும் அமலில் இருந்த போதிலும், இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன," எனத் தெரிவித்தார்.
பேரா. பிரபு ராஜகோபால் மேலும் பேசுகையில், "ஹோமோசெப் திட்டம் தனித்துவம் வாய்ந்தது. ஏனெனில் அவசரமான, அவசியமான ஒரு சமூகப் பிரச்சனைக்கு தீர்வு காண பல்கலைக் கழகம் (எங்கள் குழு), தன்னார்வத் தொண்டு நிறுவனம், தொழில்துறை கூட்டாண்மை சமூகப் பொறுப்பு, தொடக்க நிலை நிறுவனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து உள்ளன. பெரிய அளவிலான சிக்கலான பிரச்சனை என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இதற்கான உந்துதலில் மற்றவர்களுடன் இணைய எங்கள் முயற்சி ஒரு உத்வேகமாக இருக்கும் என நம்புகிறோம்," என்றார்.
”இந்த ரோபோக்களை ஒட்டுமொத்தமாகத் தயாரித்து நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் விநியோகிக்க அரசுத் தரப்பில் இருந்து அடுத்த ஆண்டு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்," எனத் தெரிவித்தார்.
பேரா. ராஜகோபால் வழிகாட்டுதலில் திவான்ஷு குமாருக்கு முதுகலை இறுதியாண்டுக்கான ஆய்வுத் திட்டமாக உருவாக்கப்பட்டதுதான் ’ஹோமோசெப்’. 'கார்பன் ஜீரோ சாலன்ஞ்-2019' போட்டியில் இடம்பெற்று பின்னர் ஐஐடி மெட்ராஸ்-ன் சமூகம் தொடர்புடைய திட்ட முன்முயற்சிக்கான நிதியுதவியும் பெறப்பட்டது.
அதன்பின்னர், இரண்டு ஆண்டுகள் தொற்றுநோய்- தொடர்பான கடினமான சூழல் நிலவியபோதும், ஹோமோசெப் திட்டத்தை மேலும் மேம்படுத்த ஐஐடி-மெட்ராஸ் ஆதரவுடன் இயங்கி வரும் சொலினாஸ் இண்டக்ரிட்டி பிரைவேட் லிமிடெட் தொடக்கநிலை நிறுவனத்துடன் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து பணியாற்றி வந்தனர்.
இந்த முன்மாதிரித் திட்டத்திற்காக சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தொடக்கம் முதலே ஆதரவை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.