எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் புதிய மைல்கல்: 2வது ஆலையை ஓசூரில் அமைக்கும் ஏதர் எனர்ஜி!
அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு 2வது ஆலை!
Hero MotoCorp-ஐ ஆதரிக்கும் மின்சார இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி (Ather Energy) தனது இரண்டாவது உற்பத்தி ஆலையையும் தமிழகத்தின் ஓசூர் நகரில் அமைக்கத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு இந்த உற்பத்தி ஆலை செயல்பாட்டுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் ஏதர் எனர்ஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது 1.20 லட்சத்தில் இருக்கும் ஏதர் எனர்ஜியின் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 4-லட்சம் என்ற வகையில் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த ஆலை அமைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
450 எக்ஸ் மற்றும் 450 பிளஸ் என்ற இரு மாடல்களில் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்து வரும் இந்நிறுவனம், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஓசூரில் அமைக்கப்பட இருக்கும் ஆலையில் இந்த மாடல்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
பெங்களூருவை தளமாகக் கொண்ட ஏதர் எனர்ஜி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓசூரில் தனது முதல் உற்பத்தி ஆலையை அமைத்தது. தற்போது இரண்டாம் ஆலையையும் அமைக்கவிருக்கிறது.
எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியைத் தவிர, புதிய உற்பத்தி அலகு, லித்தியம்-அயன் பேட்டரிகளிலும் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 400,000 யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய திறன் 120,000 யூனிட் மட்டுமே என்பதால் இது மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ஏதர் எனர்ஜியின் இணை நிறுவனர்-CEO தருண் மேத்தா இது தொடர்பாக பேசுகையில்,
“இரண்டாவது ஆலையை 2022 ஆம் ஆண்டிற்குத் தயார் செய்ய நாங்கள் வேலை செய்துவருகிறோம். இந்த திறன் விரிவாக்கத்தின் மூலம், அடுத்த ஆண்டுக்குள் நாட்டின் மிகப்பெரிய EV தயாரிப்பாளராக ஏதர் எனர்ஜி முன்னேறும்," என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த அக்டோபரில், அதிக மாதாந்திர விற்பனையைக் கொண்டிருந்தது. அதன்மூலமாக கடந்த ஆண்டை விட 12 மடங்கு வளர்ச்சியை அந்த நிறுவனம் பதிவுசெய்தது. தவிர, நிறுவனம் 100 மில்லியன் டாலர் வருவாய் விகிதத்தை அடைந்துள்ளது. இந்த மிகப்பெரிய வருவாயில் எலெக்டிரிக் வாகன பிரிவில் மதிப்பின் அடிப்படையில் மிகப்பெரிய தயாரிப்பாளராக ஏதர் எனர்ஜி திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2020 நவம்பரில் இருந்து மாதந்தோறும் 20 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருவதாகவும், இரு சக்கர வாகன EV இடத்தில் தொடர்ந்து பலம் பெற்று வருவதாகவும் ஏதர் எனர்ஜி தெரிவித்துள்ளது.
தொகுப்பு: மலையரசு