எலக்ட்ரிக் வாகன உற்பத்தி: ரூ.1,200 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்த டிவிஎஸ்!
ஓலாவைத் தொடர்ந்து கவனம் செலுத்தும் டிவிஎஸ்!
முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வருகிறது தமிழக அரசு. இதில் முக்கியமான முதலீடு மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் முதலீடு.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, தமிழ்நாட்டில் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த முதலீடுகள் எதிர்காலத் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் என்றும் டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனத்துக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏற்கனவே எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டிவிஎஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பெருநகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்கள், கிராமப்புறங்கள் தங்களின் எலக்ட்ரிக் வாகனம் இருக்கும் வகையில் அதனை மேம்படுத்த போவதாகக் கூறியுள்ளது. அதன்படி,
அடுத்த நான்கு ஆண்டுகளில் எதிர்காலத் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு இந்த 1200 கோடி ரூபாய் முதலீடு பயன்படுத்தப்படும்.
மொத்த முதலீடும் தமிழகத்திலேயே முதலீடு செய்யப்படும் என்றும் இதனை செயல்படுத்தும் நோக்கில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில தினங்கள் முன் கோவையில் நடைபெற்ற தமிழக அரசின் 2021 முதலீட்டு மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
தற்போது டிவிஎஸ், iQube எனும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இன்னும் பல்வேறு மாடல்களில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன வரவேற்பு அமோகமாக இருந்து வருகிறது. ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி வகித்து வருகிறது. முன்பதிவு மூலம் விற்பனையில் புதிய சாதனையை எட்டியுள்ளது.
ஓலாவை தொடர்ந்து பல நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன. ஓலா நிறுவனம் தமிழகத்தில் ஆலை அமைத்துள்ள நிலையில், தற்போது எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் தமிழத்தை மையமாக வைத்து டிவிஎஸ் நிறுவனம் இயங்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தொகுப்பு: மலையரசு