அயோத்தி தீர்ப்பு: 92 வயதிலும் நின்று கொண்டே வாதிட்டு வென்ற வழக்கறிஞர் பராசரன்!

அயோத்தி நில வழக்கில் பல நூறு ஆண்டு காலமாக நிலவி வந்த பதற்றத்திற்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த வழக்கில் வெற்றி பெற்ற ராம் லல்லா தரப்பு வாதத்தை எடுத்து வைத்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பராசரன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

10th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும் வரை உறுதியாகப் போராடுவது மூத்த வழக்கறிஞர் பராசரனின் தனிப்பட்ட சிறப்பு. வயது, உடல்நிலை, பொருளாதார நிலை போன்ற தடைகளைத் தாண்டி, தனது தொழில் பக்தியின் மூலம் இன்றைய தலைமுறைக்கு வாழ்க்கைப் பாடமாக்கி இருக்கிறார் 92 வயது மூத்த சட்ட வல்லுனர் பராசரன்.


வழக்கறிஞராக அவருடைய வேலையை செய்திருக்கிறார், இதில் என்ன இருக்கிறது? என்று நினைக்கலாம். ஆனால் அவருடைய தொழில்பற்றுக்கான அடையாளம் இந்த வழக்கு.


வழக்கறிஞர்கள் என்றால் தங்கள் தரப்பு வாதங்களை நீதியரசர் முன்பு ஆதாரங்களுடன் எடுத்து வைப்பார்கள். வீராவேசமாக வசனம் பேசுவார்கள் என்றெல்லாம் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். அயோத்தி வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு 40 நாட்கள் நடைபெற்றது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்திற்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்த ராம் லல்லா விரஜ்மான் தரப்பு வழக்கறிஞராக வாதாடியவர் தான் பராசரன். இஸ்லாமிய அமைப்புகள் அந்த இடத்திற்கு உரிமை கொண்டாடுவதற்கு எதிராக தன்னுடைய உறுதியான வாதங்களை இவர் முன்வைத்தார்.

பராசரன்

அயோத்தி வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க வயதையும் பொருட்படுத்தாமல் இரவு, பகல் பாராமல் குறிப்புகளை எடுத்து வைத்துக் கொள்வது இவரது பழக்கம். ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கு தொடங்கும் விசாரணைக்கு தேவையான குறிப்புகளை விரல் நுனியில் வைத்திருப்பார் பராசரன். இதைவிட முக்கியமான விஷயம் இந்த வயதிலும் அவருடைய நினைவுத்திறன் அத்தனை கூர்மையானதாக இருக்கிறது.


இந்த வழக்கில் 100 ஆண்டுகளாக என்னென்ன நடந்தது என்பதை அத்தனையையும் அவர் தெளிவாகக் கூறுவதைப் பார்த்து அவருடன் பணியாற்றுபவர்கள் மட்டுமின்றி நீதிமன்றத்தில் இருக்கும் அனைவருமே வியந்து போனார்கள்.


வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி பராசரனிடம்,

’நீங்கள் அமர்ந்து வாதிட விரும்புகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள்? அதற்கு பராசரன் “நீதியரசரே உங்களது உபசரிப்புக்கு நன்றி. ஆனால் வழக்கறிஞர் நின்று கொண்டு தனது வாதங்களை முன்வைப்பதே மரபு. நான் அந்த மரபை மீற விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார். பராசரனின் வயதை எண்ணியே தலைமை நீதிபதி அவரை அமர்ந்து வாதாட வாய்ப்புக் கொடுத்தார். ஆனால் மூத்த சட்ட வல்லுனரான பாரசரன் 92 வயதிலும் மணிக்கணக்காக நின்று கொண்டே தனது வாதங்களை முன் வைத்தார்.

யார் இந்த பராசரன்?

பராசரனின் தந்தை கேசவ ஐயங்காரும் வழக்கறிஞர். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான அவர் இலத்தீன், ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் புலமைப்பெற்றவர். தன்னுடைய தாயின் ஊரான ஸ்ரீரங்கத்தில் பிறந்த பராசரன், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி, மாநிலக் கல்லூரி, சென்னை சட்டக்கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.


பி.ஏ. படிப்பில் வடமொழிப் பாடத்தில் நீதிபதி சி.வி. குமாரசாமி சாஸ்திரி பதக்கம், சட்டப்படிப்பில் இந்து சட்டத்தில் நீதிபதி வி.பாஷ்யம் ஐயங்கார் தங்கப்பதக்கம், பார் கவுன்சில் தேர்வில் நீதிபதி கே.எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார்.


1958ல் இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிவு செய்தவர், 1971ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞரானார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சி அறிவித்த காலகட்டத்தில் தமிழ் நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞராக இருந்தவர் பராசரன். 1980ல் அவர் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 1983 - 1989 வரை பராசரன் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலாக இருந்தார். 2016ம் ஆண்டுக்குப் பிறகு இவர் நீதிமன்றத்திற்கு வருவது அரிதானதாகவே இருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய இவரின் பயணம் உச்சநீதிமன்றத்தில் உச்சம் தொட்டிருக்கிறது.


இந்துத்துவா கருத்துகளில் வல்லுனரான பராசரன், சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதுத் தொடர்பான வழக்கிலும் வாதாடியவர். 2012 முதல் 2018 வரை பராசரன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார். மதம் சார்ந்த புத்தகங்களைப் படித்து தெளிந்த அறிவைப் பெற்றிருந்த பராசரன் தனது வாதங்களின் போதும் அந்த குறிப்புகளை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், பராசரனை இந்திய சட்டங்களின் ‘பிதாமகன்’ என்று புகழ்ந்திருக்கிறார். இதற்குக் காரணம் சட்டத்துறையில் அவரின் பங்களிப்பு அளப்பரியது என்பதே.

தீவிர ராமர் பக்தரான பராசரன், ராமனுக்காக நான் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று அயோத்தி வழக்கு தீர்ப்பின் வெற்றியை குறிப்பிட்டு கூறி இருக்கிறார்.


பராசரனின் தந்தை வேதங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அவரின் வழியில் பராசரனும் படித்த வேதத்தை பயன்படுத்தி சரியான சட்ட நுணுக்கங்களை சுட்டிக்காட்டி வாதாடி இருக்கிறார். அயோத்தி வழக்கு விசாரணையில் ஒவ்வொர நாளும் இஸ்லாமிய தரப்புக்கு ஆதரவாக வாதாடிய ராஜுவ் தவானுக்கு கடிவாளம் போடும் கேள்விகளை முன்வைத்து மடக்கிக் காட்டி இருக்கிறார் இவர்.

“நான் மறைவதற்குள் இந்த வழக்கில் ஒரு சரியான முடிவு ஏற்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்று கூறி வந்த பராசரனுக்கு வெற்றிக் கனி கிடைத்துள்ளது.

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India