தமிழகத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு ‘பால புரஸ்கார் விருது’ - இவர் செய்தது என்ன?
1 லட்சம் மரங்களை நட வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணம்!
”பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பழ தாவரங்களை வளர்க்க நான் தேர்வு செய்வதற்கான காரணம் மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் இயற்கை பழங்களை கிடைக்க வேண்டும் என்பதே..."
கலை, கல்வி, கலாச்சாரம், வடிவமைப்பு, புதிய கண்டுபிடிப்பு, துணிச்சல், ஆராய்ச்சி, சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்’ (பால சக்தி புரஸ்கார் விருது) வழங்கப்படும். இந்த விருதானது, 1996ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
32 குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புராஸ்கர், 2021 (Pradhan Mantri Rashtriya Bal Puraskar- 2021) விருது வழங்கப்பட்டுள்ளது. புதுமை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சிறப்பான சாதனைகள் மற்றும் சமூக சேவையில் ஈடுபட்ட, துணிச்சலான குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புராஸ்கரை இந்திய அரசு வழங்கி வருகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 32 மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கலை மற்றும் கலாச்சாரத் துறையில் 7 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல கண்டுபிடிப்புகளுக்கு 9 விருதுகளும், கல்விசார் சாதனைகளுக்கு 5 விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டு பிரிவில் 7 குழந்தைகள் துணிச்சலாக செயல்பட்ட 3 குழந்தைகள் துணிச்சலுக்காகவும் பாராட்டப்பட்டு விருதுகள் வழங்கபட்டுள்ளன. சமூக சேவை துறையில் ஈடுபட்ட குழந்தைக்கு அவரது முயற்சிக்காக கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அப்போது அவர்,
"பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புராஸ்கர், 2021 வெற்றியாளர்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான பிற இளம் குழந்தைகளை கனவு காணவும், ஆசைப்படவும், தங்கள் வரம்புகளை நீட்டிக்கவும் ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியும் இடம்பெற்றிருக்கிறார்.
யார் அந்த சிறுமி?
7 வயது சிறுமிக்கு ஒரு மரம் நடுவதே பெரிய விஷயம் தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரசித்தி சிங் 13 ஆயிரம் மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார். இத்துடன் அவர் நிற்கவில்லை. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. சுற்றுச்சூழல் காப்பாளர்களின் உதவியுடன் தமிழ்நாட்டில் 12 பழக்காடுகளை உருவாக்கியுள்ளார். தற்போது 1லட்சம் மரங்களை நட வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணித்து வருகிறார்.
பூமியில் பசுமையை அதிகரிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று பிரசித்தி சிங் கூறியுள்ளார்.
“முதல் முறையாக நான் என் வீட்டில் ஒரு மிளகாய் செடியை வளர்த்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது எனக்கு 2 வயதுதான். இப்போது நான் மரங்களை நட்டு வருகிறேன். என் சொந்த வீட்டில், நான் என் கொல்லைப்புறத்தில் பல மரங்களை நட்டிருக்கிறேன், ஒரு மூலிகைத் தோட்டம் கூட வைத்திருக்கிறேன்,”என்று பிரசித்தி தி பெட்டர் இந்தியாவிடம் கூறியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு வர்தா புயலின் போது ஏராளமான மரங்கள் சாய்ந்ததைக் கண்ட பின் மரக்கன்றுகளை நடுவதற்கான பணியைத் தொடங்கினார் பிரசித்தி. எப்போதும் இயற்கையுடனும் மரக்கன்றுகளுடனும் இருப்பதைக் கண்ட அவளது நண்பர்கள் ஆரம்பத்தில் பிரசித்தியை கிண்டல் செய்தனர்.
“என் கைகள் மண்ணால் அழுக்காக இருப்பதாக என் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள். எனக்கு மூன்று வயதாக இருந்தபோது நான் பயிரிட்ட மரங்களிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை அவர்களுக்குக் கொடுத்து சாப்பிடச் சொல்வேன். அவர்களும் விரும்பி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
எலுமிச்சை, தக்காளி மற்றும் சிவப்பு கீரை போன்றவை, அவர்களின் மனநிலையை மாறியது. இப்போது, அவர்கள் எனக்கு மரங்களை நட்டு, காகித பென்சில்கள் தயாரிக்கவும், மரங்களை நடுவதற்கு நிதி சேகரிக்கவும் உதவுகிறார்கள்.
என் பள்ளியில், எனக்கு 100 பழ மரங்கள் கொண்ட ஒரு சிறிய காடு உள்ளது. எனது பிறந்தநாளில் இந்த மரங்கள் நடப்பட்டன என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு ஆண்டும் எனக்கு பசுமை பிறந்த நாள் தான். பல்லுயிர் என்பது பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களின் மொத்த வகைகளையும் குறிக்கும் ஒரு சொல். மேலும் பல்லுயிர் பெருக்கம், பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் மிகவும் பாதுகாப்பானது,” என்றார்.
மேலும் பேசிய பிரசித்தி, “எப்படி என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் வரும் இரண்டு ஆண்டுகளில் நிச்சயமாக ஒரு லட்சம் பழச் செடிகளை வளர்ப்பேன். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பழ தாவரங்களை வளர்க்க நான் தேர்வு செய்வதற்கான காரணம் மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் இயற்கை பழங்களை கிடைக்க வேண்டும் என்பதே.
இப்போதெல்லாம் நாம் ரசாயனத்தால் நிரப்பப்பட்ட பழங்களைத்தான் சாப்பிடுகிறோம். ஆனால் எனது பழ மரங்கள் மக்களுக்கு ரசாயனமில்லாத பழங்களை வழங்கும்.
”மரங்களை நட எனக்கு இடம் வழங்கப்பட்டால் எந்த இடத்திற்கும் செல்ல நான் தயாராக இருக்கிறேன். மக்களிடமிருந்து நன்கொடைகளை விட, ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். மக்கள் நிதி நன்கொடை அளிக்கத் தயாராக உள்ளனர், மரங்களை நடவு செய்வது பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஒத்துழைப்பு என்பது மரங்களை நடுவதற்கு முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்,” என்கிறார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு முன்பு வரை, அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் மரங்களை நடுவதற்கு வெளியே செல்வது வழக்கம், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் இந்தியாவின் மிக இளம் பழ வன படைப்பாளராக விளங்குகிறார் பிரசித்தி.
தண்ணீரை சேமிக்கவும், மரங்களை நட, அவர்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மரக்கன்றுகளை நடவு செய்வதைத் தவிர வண்ணம் தீட்டவும், கைவினைப்பொருட்கள் செய்யவும், பாடவும் நடனமாடுவதிலும் பிரசித்தி கவனம் செலுத்திகிறாள் என்று அவரது தந்தை பிரவீன் சிங் கூறுகிறார்.
“நான் என் மகளை எதற்கும் கட்டுப்படுத்த மாட்டேன். அவள் விரும்பியதைச் செய்ய நான் அவளுக்கு சுதந்திரம் அளித்துள்ளேன்,” என்றார்.
தகவல் உதவி: thebetterindia