நெட்ஃப்ளிக்ஸுக்கு புத்துயிர் அளித்த ‘பேர்ட் பாக்ஸ்’
ஹாலிவுட்டில் ‘உலகம் அழியப் போகிறது’ ரகப் படங்களுக்கா பஞ்சம்? ஸாம்பிக்களால் உலகம் அழியப் போகிறது, இயற்கை சீற்றத்தால் உலகம் அழியப் போகிறது, புதுவித நோய் ஒன்று தாக்குவதால் உலகம் அழியப் போகிறது, உலகம் முழுக்க எல்லோர்க்கும் பார்வை தெரியாமல் போகிறது என்றெல்லாம் விநோத விநோதமாக உலகம் அழிவதை காண்பித்திருக்கிறார்கள். நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘Bird Box’ படமும் உலகம் அழியப் போகிறது கதை தான்– ஆனால், படத்தில் நெட்ஃப்ளிக்ஸுக்கே உண்டான ஒரு நவீனம் இருக்கிறது.
ஒரு விநோதமான சக்தி உலகம் முழுதும் உலவி வருகிறது. அதை நேரடியாக பார்ப்பவர்கள் உச்சகட்ட மன அழுத்தத்திற்கு சென்று தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்பதுவே கதை. 2014-ல் வெளியான கட்டுரை ஒன்று உலகில் 350 மில்லியன் மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது. மன அழுத்தம் ஒரு தனிநபர் சிக்கலாக மட்டும் இருப்பதல்லாமல் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. ‘பேர்ட் பாக்ஸ்’-ன் கதை இந்த கருத்தை மையமாக வைத்து எழுதப்படாமல் இருக்கலாம். ஆனால், மன அழுத்தத்திற்கும் தற்கொலை முடிவுகளுக்கும் இருக்கும் தொடர்பு தவிர்க்க முடியாதது என்பதை ‘பேர்ட் பாக்ஸ்’ காட்டியிருக்கிறது.
ஹாலிவுட் பால் பேதம் நிறைந்த தொழில்துறை. ‘மாஸ்க் ஆஃப் ஸோரோ’வில் நடித்த கேத்தரின் ஸீடா ஜோன்ஸையோ அல்லது ஹார்வி வெயின்ஸ்டெயினின் பாலியல் துன்புறுத்தல்களை அம்பலப்படுத்திய சல்மா ஹயக்கையோ அவர்கள் தங்கள் படங்களில் நடிக்கத் தேர்ந்தெடுப்பதில்லை. ‘ ஏன் ஹாலிவுட் x -ஐ (குறிப்பிட்ட வயதான பெண் நடிப்புக் கலைஞர்) விலக்கி வைத்திருக்கிறது?’ என்பது போன்றவை தான் பெருமளவு விற்கும் கட்டுரைகளாக இருக்கின்றன. ‘பேர்ட் பாக்ஸில்’ நடித்திருக்கும் சாண்ட்ரா புல்லக்கும் கூட அப்படி ஒரு நபராக முத்திரை குத்தப்படுபவர் தான்.
மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்கள் எதிர்பார்க்கும் பாத்திரங்களை எல்லாம் தவிர்த்து திமிரான, பலவீனமான, விளையாட்டான, முட்டாளான, வைரக்கியமான, வலிமையான பெண் பாத்திரங்களை எல்லாம் தான் சாண்ட்ரா புல்லக் ஏற்றிருக்கிறார். இங்கு கீர்த்தி சுரேஷை பகடி செய்வது போலவே, சாண்ட்ரா புல்லக்கும் ஹாலிவுட்டில் பகடி செய்யப்படும் ஒரு கலைஞர். ஆனால், ‘பேர்ட் பாக்ஸ்’ படத்திற்கு சாண்ட்ரா கொடுத்திருக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. ஒரு வெட்டேத்தியான மனநிலையில் இருப்பது போன்ற நடிப்பு மிகவும் ஈர்ப்பதாக இருக்கிறது.
ஆனால், செய்தி அதுவல்ல. நெட்ஃப்ளிக்ஸிக்கு ‘பேர்ட் பாக்ஸ்’ வாரிக் கொடுத்த சப்ஸ்க்ரைபர்ஸும், ‘பேர்ட் பாக்ஸ்’ பார்த்துவிட்டு பல பேர் படத்தில் வருவது போலவே கண்ணைக் கட்டிக் கொண்டு தினசரி வேலைகளை செய்ய, அதன் விளைவாக உண்டான விபரீதங்களும் தான் இந்தப் படம் மக்களை எந்தளவு சென்றடைந்திருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறது.
2018 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 7.31 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் நெட்ஃப்ளிக்ஸிற்கு கிடைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் மட்டுமே 1.53 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்திருக்கிறார்கள். இந்த திடீர் முன்னேற்றத்திற்கு பேர்ட் பாக்ஸ் படம் காரணமாக இருந்தது என்று நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்திருக்கிறது.
பேர்ட் பாக்ஸ் படம் வெளியான முதல் வாரத்தில் 45 மில்லியன் அக்கவுண்டுகள் படத்தை பார்த்திருக்க்கிறது எனவும், ஒட்டுமொத்தமாக இதுவரை 80 மில்லியன் முறை படம் பார்க்கப்பட்டிருக்கிறது எனவும் நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்திருக்கிறது.
இந்திய அதிகளவு மொபைல் செயலிகளை பயன்படுத்தும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது. அதுவும் கடந்த வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ‘பெய்ட்’ (paid) செயலிகளில் முதலிடத்தில் இருப்பது நெட்ஃப்ளிக்ஸ் என்கிறது ஆப் ஆனியின் 2019 ஸ்டேட் ஆஃப் மொபைல் ரிப்போர்ட். ஹாட்ஸ்டார், ஜியோ டிவி போன்ற செயலிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
திரையரங்குகள் முழுக்க அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்படியான வீடியோ தளங்கள் புதுமையை கையாண்டு வாடிக்கையாளர்கள் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் பேச முடியாத பற்பல முற்போக்கு கருத்துக்கள் இந்த தளங்களில் பேசப்படுகின்றன. இதன் வழியே திறமையான எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன. படைப்புலகம் ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை போல என்றொரு தற்காலிக ஆறுதல் கிடைக்கிறது.