‘காலக்கெடுவை தவறவிட்ட Byju's - முன்னாள் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக புகார்!

பைஜூஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் போன்ற பணப்பலன்களை செட்டில் செய்வதற்கான இறுதி காலக்கெடுவை தவறவிட்டதாக முன்னாள் ஊழியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

‘காலக்கெடுவை தவறவிட்ட Byju's - முன்னாள் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக புகார்!

Tuesday November 21, 2023,

2 min Read

பைஜூஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் போன்ற பணப்பலன்களை செட்டில் செய்வதற்கான இறுதி காலக்கெடுவை தவறவிட்டதாக முன்னாள் ஊழியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஊழியர்கள் பணி நீக்கம்:

கொரோனா காலக்கட்டத்தில் கொடிகட்டிப் பறந்த பைஜூஸ் நிறுவனம் கடந்த ஆண்டு முதலே கடும் சரிவை சந்தித்து வருகிறது. நிதி நெருக்கடி, கடன் பிரச்சனை, முக்கிய நிர்வாகிகள் விலகல் போன்ற அடுத்தடுத்த பிரச்சனைகளுக்கு இடையே, செலவினங்களை குறைப்பதற்காக பைஜூஸ் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி 50 ஆயிரமாக இருந்த பைஜூஸ் பணியாளர்களின் எண்ணிக்கை 31 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் கூட கடந்த கன்டென்ட் மற்றும் மார்க்கெட்டிங் குழுவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

Byjus

இதில் பெரும்பாலான ஊழியர்களுக்கு 45 நாட்களுக்கு பைனல் செட்டில்மெண்ட் வழங்கப்படும் என நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலானோருக்கு இதுவரை நிறுவனம் எவ்வித தொகையையும் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னாள் ஊழியர்கள் குற்றச்சாட்டு:

குறிப்பாக சுமார் 60 முன்னாள் ஊழியர்களுக்கு நவம்பர் 17ம் தேதிக்குள் இறுதித்தொகை செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதில் 40 பேருக்கு இதுவரை செட்டில்மெண்ட் தொகை வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு முன்னாள் BYJU's ஊழியர் ஒருவர் தனது சமூக வலைத்தளப்பதிவில் இதுகுறித்து பகிரங்கமாக பதிவிட்டுள்ளார்.

"90 நாட்கள் ஆகியும், குறிப்பிட்ட 45 நாட்களுக்குள் தர வேண்டிய முழு மற்றும் இறுதி (FNF) செட்டில்மெண்ட் தொகையை நான் பெறவில்லை என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். மேலும் இதுகுறித்து எனக்கு செபரேஷன் டீம் மற்றும் பைனல் அண்ட் ஃபுல் பேமெண்ட் டீம் உள்ளிட்ட யாரிடமும் எனக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை”

மேலும், இந்த ஊழியர் தான் தொடர்பு கொண்ட பல ஊழியர்கள் தங்களுக்கும் பைனல் செட்டில்மெண்ட் பேமெண்ட் கிடைக்கவில்லை எனக்கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஒரு ஊழியர், BYJU'S இல் உள்ள HR மேலாளர் தனக்கு அக்டோபர் மாதத்துக்குள் செப்டம்பர் மாதச் சம்பளம் மற்றும் ஒரு மாத பணிநீக்க ஊதியம் வழங்கப்படும் என்று உறுதியளித்ததாகக் கூறியதாக பல்வேறு ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்து பைஜூஸ் நிர்வாகம் மின்னஞ்சல் மட்டுமே அனுப்பியதாகவும், இதுவரை பணம் தரவில்லை, என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.
BYJU

பைஜூஸ் நிர்வாகம் அனுப்பிய மின்னஞ்சலில் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 3 மாத கால அவகாசம் இருப்பதாகவும், அந்த அவகாசம் நிறைவடைந்ததும் பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஒவ்வொரு பணியாளருக்கும் வெவ்வேறு சுழற்சி உள்ளது. BYJU'S ஊழியர்களின் ஊதியத்தை படிப்படியாகத் தீர்த்து வருகிறது," என ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எஜுடெக் நிறுவனமானது $1.2 Bn டேர்ம் லோனை மறுகட்டமைப்பு செய்வது தொடர்பாக கடன் வழங்கிய போர்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்றொருபுறம் அதன் துணை நிறுவனங்களான Great Learning மற்றும் Epic-ஐ ஒரு பில்லியன் டாலர்கள் வரை விற்பனை செய்து கடனை அடைக்கவும், மீண்டும் நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்யவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.