Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'தொழில் முனைய இதுவே மிகச் சரியான நேரம்'- கோவை தொழில்முனைவர் நவீன் கிருஷ்ணா

'தொழில் முனைய இதுவே மிகச் சரியான நேரம்'- கோவை தொழில்முனைவர் நவீன் கிருஷ்ணா

Friday April 22, 2016 , 4 min Read

நவீன் கிருஷ்ணா - கோவை மாநகரில், மைண்ட் விஸ் (Mindwiz) என்னும் நிறுவனத்தையும், ஈவண்ட்ஸ்பேஸ் (EventSpace) என்னும் ஸ்டார்-அப்பையும் வெற்றிகரமாய் நடத்திக் கொண்டிருக்கும் 29 வயது திருப்பூர்க்காரர். 

திருப்பூரில் பிறந்து, ஊட்டியில் பள்ளிப்படிப்பை முடித்த நவீன், பட்டப்படிப்பு படித்தது பொள்ளாச்சியில். தொழில் முனைவதற்கான ஆர்வமும், ஊக்கமும் அவ்வயதிலேயே இருந்ததன் காரணத்தினால் தான், கல்லூரி இளநிலையின் இறுதி வருடத்திலேயே மென் திறன் பயிற்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அப்படித் தொடங்கிய “மைண்ட் மேக்கர்ஸ்” பயிற்சி நிறுவனத்தையும் சிறப்பாகவே நடத்திக் கொண்டிருந்தார். 

image


கல்லூரி இறுதியாண்டிலேயே பல வேலை வாய்ப்புகள் நவீனை தேடி வந்தது. ஆனால், அவை எதையும் அவர் தேர்வு செய்திருக்கவில்லை. எம்.பி. ஏ படிக்கத் தொடங்கினார். எம்.பி.ஏ படித்துக் கொண்டிருக்கும் போது, ஹோட்டல் துறையில் மனித வள பயிற்சிகள் என்னும் தலைப்பிலான இவருடைய புராஜெக்ட் கல்லூரிகளுக்கிடையே ஆன போட்டியில் ரன்னர்-அப்பாக தேர்வாகியிருக்கிறது. 

“பொள்ளாச்சியிலிருந்து புராஜெக்டுகள் எதுவும் பெரிய அளவில் போட்டிகளில் தேர்வே ஆகாத சமயத்தில், என்னுடைய புராஜெக்ட் தேர்வானது” என அதை நினைவு கூறுகிறார். 

எம்.பி. ஏ படித்த பிறகு இன்ஃபோசிஸில் வேலை கிடைக்க, ‘மைண்ட் மேக்கர்ஸை’ நிறுவனத்தை மூட வேண்டியதானது. ஆனால், இன்ஃபோசிஸ் வேலையையும் அவர் தொடரவில்லை. 

“எனக்கு தொடக்கத்திலிருந்தே தொழில் முனைவது மட்டுமே விருப்பமாய் இருந்தது. மேலும், இன்ஃபோசிஸில் என் உழைப்பைக் கொண்டு, ஒரு மணி நேரத்தில் எண்பதாயிரம் வரை சம்பாதித்தார்கள், ஆனால், எனக்கு மாதச் சம்பளமே ஒரு லட்சம் ரூபாயாய் தான் இருந்தது” என அந்த வேலையை துறந்ததற்கான காரணத்தை சொல்கிறார். 

வேலையை களைந்து வெளியேறிய போது, நவீனிடம் எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. வங்கியில் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பு மட்டுமே இருந்தது. நினைத்திருந்தால், ஒரு வழக்கமான பணியை அவர் தேடிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் நவீன் அந்த பாதையில் தொடர்வதாய் இல்லை. தினமும், பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்து சிறு ஆய்வு ஒன்று செய்திருக்கிறார், கோவையின் சந்தை நிலவரங்களை புரிந்துக் கொள்ள அது உதவியிருக்கிறது. 

”முதலில், பொள்ளாச்சியில் இருந்து காரில் கோவை வருவேன். நாட்கள் செல்ல செல்ல, பணச் செலவை குறைக்க பஸ்ஸில் பயணிக்கத் தொடங்கினேன். இப்படி இருக்கும் போது, இரண்டு நாட்கள், வீட்டிற்கு போகாமல் என்ன செய்வதென்று யோசித்து யோசித்தே உக்கடம் பஸ் ஸ்டாண்டிலேயே இருந்து விட்டேன்...”

மனதில் சிறு அமைதி ஏற்பட்டப் பின்னர், அன்று, பொள்ளாச்சிக்கு திரும்பியிருக்கிறார். இணையம் பரவலாய் உபயோகப்பட தொடங்கியிருந்த அந்நேரத்தில், வீட்டில் இருந்தே இணையத்தில் எஸ்.ஏ.பி தொடர்பான சில கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.

”அப்போது, நொய்டாவில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. எஸ்.ஏ.பி வேலை ஒன்றிற்கான அழைப்பு அது. அந்த வேலையை நான் நாற்பது நிமிடங்களில் செய்து முடித்தேன். அதற்கான சம்பளமாய் எனக்கு முப்பதாயிரம் கொடுத்தார்கள்” என மைண்ட் விஸ் - டெக்னோ சொல்யூஷன்ஸ் பிறந்த கதையை சொல்கிறார்.

வேறு முதலீட்டாளர்கள் யாரும் இல்லாமல், இன்ஃபோஸிசில் வேலை செய்து சேர்த்து வைத்திருந்த ஆறு லட்ச ரூபாய் கொண்டு தான் நவீன் 'மைண்ட் விஸ் டெக்னோ' சொல்யூஷன்ஸை தொடங்கினார். இன்று, எஸ்.ஏ.பி ஆலோசனைகள் மற்றும் பயிற்சி, மனித வள ஆலோசனைகள் மற்றும் பயிற்சி, சட்ட ஆலோசனைகள் ஆகிய துறைகளில் இயங்குகிறது இந்நிறுவனம். 

image


இது மட்டுமில்லாமல், ஜியான்நெக்ஸ்ட் என்னும் நிறுவனத்திற்கு துணை நிறுவராகவும் இருந்திருக்கிறார். பின்னர், அங்கிருந்து விலக நேரிட்டது. அப்போது நவீனுக்கு, ஒரு கணிசமான தொகை நஷ்டமும் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாய், மைண்ட் விஸ்ஸில் ஆட்குறைப்பு செய்ய வேண்டியதாய் ஆகியிருக்கிறது. ஆனால், அதையெல்லாம் கடந்து தற்போது மீண்டும் குழுவை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார். 

மேலும், ஈவண்ட் ஸ்பேஸ் என்னும் ஸ்டார்ட்-அப்பையும் வெற்றிகரமாய் நடத்தி வருகிறார் நவீன். அது தொடங்குவதற்கு காரணமாய் இருந்த நிகழ்வாய் அவர் சொல்வது, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை. அந்நிகழ்வில் கலந்துக் கொள்ள வேண்டும் என நினைத்த பலராலும் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதற்கு தீர்வு காணும் விதமாய், தாம் இருக்கும் இடத்தில் இருந்தே ஓர் நிகழ்வில் பங்கு கொள்வதற்கு மெய்நிகர் முறைகள் மூலம் ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார். இதன்படி, வீடியோ கேம்களில் எல்லாம் வருவது போல, பயனரை சித்தரிக்கும் கதாபாத்திரம் ஒன்று கணினித்திரையில் தோன்றும். அது ஒரு ட்ரேட் ஃபேர் நிகழ்வாக இருப்பின், நாம், கணினியில் ஒவ்வொரு ஸ்டாலாக சென்று பார்க்க முடியும். சந்தேகங்கள் வந்தால், சாட் வழியே அங்கிருப்பவர்களிடம் கேள்விகள் கேட்கலாம். அல்லது வீடியோ கான்ஃபரன்சிங் வழியாக அவர்களிடம் நேரடியாக பேசவும் முடியும்.

image


“வழக்கமாக, இதில் இருக்கும் சிக்கலாக மக்கள் சொல்வது என்னவென்றால், ஒரு கருத்தரங்கில் நாங்கள் கலந்துக் கொள்ளும் போது, எதேனும் சந்தேகம் வந்தால், கையை தூக்கி கேள்வி கேட்போம். கணினி வழியே கலந்துக் கொள்ளும் போது எப்படிக் கேள்விக் கேட்பது? என்பது தான். இதற்கு விடையாய் தான் ‘ரைஸ் ஹேண்ட்’ என்றோரு பட்டன் வைத்திருக்கிறோம். விருப்பம் இருப்பவர்கள் அதை அழுத்தினால், அவர்கள் சார்பாய் எங்கள் குழு நபர் அந்தக் கேள்வியைக் கேட்பார்கள், என்கிறார்.

பின்னர், ஒரு விழாவிற்கான டிக்கேட் ஆயிரம் ரூபாயாக இருக்கிறாதென்றால், அதில் பப்ஃபே போன்ற சில சலுகைகளும் அடக்கமாக இருக்கும். அதே பணத்தை இங்கேயும் கொடுத்துவிட்டு, வெறுமனே நிகழ்ச்சியை மட்டும் காண்பது நிறைவாக இல்லை என பல உணர்வார்கள். அதற்கு பதிலாகத் தான், அந்நிகழ்விற்கு வரும் அத்தனை நபர்களுடைய தொடர்பு விரங்களையும் கொடுத்து விடுவோம்.

இளம் தொழில் முனைவர்களுக்கு நவீன் சொல்வது எல்லாம், 

“தொழில் முனைய சரியான நேரம் இப்பொழுது உள்ளது. இப்பொழுதே தொடங்குங்கள், தோல்விகளை சந்தியுங்கள். அதன் வழியே வளருங்கள். வணிகத்தில் தோல்வியே கண்டதில்லை என யாரவது சொன்னால், அது முழுப் பொய்!” என்கிறார்.
நவீனின் குழு

நவீனின் குழு


இந்த பயணத்தில் இருந்த சவால்களைப் பற்றிக் கேட்ட போது, 

“இன்ஃபோசிசில் இருந்து வேலையை விட்ட போது, என்னை முட்டாள் என்றார்கள். பலக் கல்லூரிகளுக்கு சாப்(SAP) தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தச் சொல்லி பரிந்துரை செய்யப் போன போது என்னை உள்ளேயே விடவில்லை. ஆனால், பின்னாளில், என்னை ஒரு நிகழ்விற்காக அவர்களே வரவேற்றார்கள்”, எனத் தான் சந்தித்த தடைகளையும், அவற்றை எப்படி தனக்கு சாதகமாய் மாற்றிக் கொண்டார் என்பதையும் சொன்னார். 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

ஃபார்மா விற்பனையில் இலக்கை அடைய உதவும் 'ஃபார்மா ஸ்பியர்'

சிறு வணிகர்கள், வாடிக்கையாளரை ஈர்க்க உதவும் 'டீ'ரிவார்ட்ஸ்'

வரைகலையின் வழியே வித்தியாசம்!