'Chandrayaan-1' விண்ணில் ஏவப்படும் முன்பும் சிக்கல் ஏற்பட்டது!
சந்திராயன் – 1 ஏவப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன், எரிபொருளில் கசிவு கண்டறியப்பட்டது. எனினும் அது சரி செய்யப்பட்டு அதே நாளில் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சந்திராயன் -2 ஏவப்படுவது ரத்து செய்யப்பட்ட நிலையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.மாதவன் நாயர், இந்தியா முதலில் நிலவுக்கு அனுப்பிய ’சந்திராயன் 1’ விண்கலம் ஏவப்பட இருந்த போதும் இதே போன்ற சிக்கல் ஏற்பட்டதாக நினைவு கூர்ந்துள்ளார்.
எனினும், இந்திய விண்வெளி ஆய்வுக்கழக (இஸ்ரோ) விஞ்ஞானிகள், இந்த சிக்கலுக்கு காரணமான கோளாறைக் கண்டறிந்து சரி செய்து, விண்கலம் ஏவப்பட்டது என்கிறார். 2008ல் சந்திராயன் -1 ஏவப்பட்ட போது இஸ்ரோ தலைவராக இருந்தார் மாதவன் நாயர்.
சந்திராயன்- 1 விண்கலம் செயல்பாட்டில் இருந்த 312 நாட்கள் காலத்தில் நிலவைச்சுற்றி 2,400 சுழற்சி மேற்கொண்டு, அதன் மேல்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்தது.
திங்கள் கிழமை விண்ணில் செலுத்தப்பட இருந்த சந்திராயன் -2 விண்கலம், 56 நிமிடங்கள், 24 நொடிகளுக்கு முன்னதாக ரத்து செய்யப்பட்டது. ஏவு வாகன அமைப்பில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ராக்கெட் ஏவப்படுவது இப்போதைக்கு ரத்து செய்யப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.
எனினும் பிரச்சனையின் தன்மைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனிடையே பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய, இஸ்ரோ முன்னாள் தலைவர், ’Chandrayaan 2’ விண்ணில் ஏவப்பட இருந்த இரண்டு மணி நேரங்களுக்கு முன், எரிபொருளில் (ப்ரபலெண்ட்) கசிவு கண்டறியப்பட்டது. அது சரி செய்யப்பட்டு, அதே நாளில் ராக்கெட் ஏவப்பட்டது,” என தெரிவித்துள்ளார்.
சந்திராயன் -2 பற்றி குறிப்பிட்ட மாதவன் நாயர், கேஸ் பாட்டில்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் போது கசிவு ஏதேனும் கண்டறியப்பட்டிருக்கலாம் என்கிறார்.
“அது எங்கே நிகழ்கிறது என சரியாகக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது தான் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,” என்கிறார் அவர்.
விண்கலம் ஏவப்படும் போது இத்தகைய கோளாறுகள் சகஜமானவை என்று கூறுபவர், சரியான நேரத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, என்கிறார்.
”நிலவுத் திட்டங்களுக்கான வெற்றி விகிதம் 60 சதவீதமாகும். செயற்கைக்கோள்களை செலுத்துவது போல அல்லாமல், நிலவுக்கான திட்டங்கள் மிகவும் சிக்கலானவை. எனினும் கடந்த 50 ஆண்டு கால அனுபவத்தில், வெற்றி விகிதம் மேம்பட்டு வருகிறது,” என்றும் அவர் கூறுகிறார்.
சந்திராயன் -2 மூலம் இந்தியா நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்கா, சீனா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா இந்த சாதனைக்கு திட்டமிட்டுள்ளது.
ஆதாரம்: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்